ADVERTISEMENT
சென்னை, மாவட்ட 'பி' டிவிஷன் வாலிபால் போட்டியில், மகளிருக்கான இறுதிப் போட்டியில், சிவந்தி கிளப் அணியிடம், எஸ்.டி.ஏ.டி., அணி தோல்வியடைந்தது.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் ஜி.பி.ஆர்., மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், மாவட்ட அளவில், 'பி' டிவிஷனுக்கான வாலிபால் போட்டி, எழும்பூரில் நடக்கிறது.
இருபாலருக்கான இப்போட்டிகளில் ஆடவரில், 30 அணிகளும், பெண்களில் 20 அணிகளும் பங்கேற்றுள்ளன. போட்டிகள், 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடக்கின்றன.
நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான முதல் அரையிறுதியில், எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதி அணி, 25 - 14, 23 - 25, 25 - 17 என்ற கணக்கில், சிவந்தி பவுண்டேஷன் அணியையும், சிவந்தி கிளப் அணி, 25 - 15, 25 - 10 என்ற கணக்கில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணியையும் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.
நேற்று மாலை நடந்த, மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், சிவந்தி பவுண்டேஷன் மற்றும் எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணிகள் மோதின. அதில், சிவந்தி பவுண்டேஷன் அணி, 25 - 14, 25 - 15 என்ற கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.
தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில், எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதி மற்றும் சிவந்தி கிளப் அணிகள் மோதின. இதில் சிவந்தி கிளப் அணி, 21 - 25, 25 - 18, 25 - 10 என்ற கணக்கில், எஸ்.டி.ஏ.டி., மகளிர் விடுதி அணியை தோற்கடித்து, கோப்பையை தட்டிச் சென்றது. இன்று, ஆடவருக்கான இறுதிப் போட்டி நடக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!