செங்குன்றம் சென்னையில், நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை, பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அப்போது, செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் ஊராட்சி, கற்பகம் நகர், உதயசூரியன் நகர்களை இணைக்கும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது சாலையில் படுத்திருந்த, கன்று குட்டி உட்பட இரண்டு பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து பலியாகின.
கொடுங்கையூர், சேலைவாயிலைச் சேர்ந்தவர் சோலை, 65. இவரது பசு மாடு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாலையில் கட்டப்பட்டிருந்த விளக்கில் இருந்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த 15ம் தேதி அதிகாலை, மாதவரம் நெடுஞ்சாலையிலும், மின் கம்பி அறுந்து விழுந்து, அங்கிருந்த நான்கு பசு மாடுகள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில், மழையால் சேதமடைந்த மாதவரம் நெடுஞ்சாலையில், தள்ளாடி சென்ற லாரியில், அங்கு தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள், சிக்கி அறுந்தன.
அவை சாலையில் படுத்திருந்த பசு மாடுகள் மீது விழுந்து, மின்சாரம் பாய்ந்து மாடுகள் பலியானது, செங்குன்றம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அதற்காக, மாடுகளின் உரிமையாளர்கள், லாரி உரிமையாளரிடம் இழப்பீடு பெற்றனர். இதனால், போலீசில் முறையாக புகார் செய்யவில்லை.
மேற்கண்ட விபத்திற்கு காரணம், பராமரிப்பற்ற சாலை மற்றும் மின் இணைப்புகளும் தான். மழைக்காலத்திற்கு முன், அவை சீரமைக்கப்பட வேண்டியது, மிகவும் அவசியமானதாகும்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னை மற்றும் திருவள்ளூரில், கடந்த ஓரிரு மாதங்களாக அடிக்கடி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்க, அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை, இம்மாத இறுதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.சாலை மற்றும் மின் விபத்துகளையும் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. மின் கம்பி அறுந்து விழுந்து, பசுமாடுகள் பலியாகும் சம்பவங்களை, அன்றாட செய்தியாக கடந்து செல்லாமல், அதைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் பொறுப்பு அரசுக்கும், அதிகாரிகளுக்கும் உண்டு என்பதை உணர்ந்து, ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் இணைப்பு பெட்டிகள், மின் கம்பம், மின்மாற்றிகள் உள்ளன. இவற்றில் பல முறையான பராமரிப்பின்றி, தற்காலிக தீர்வாக, ஒட்டு போடப்பட்டுள்ளன. மாதம் ஒருநாள் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணியின் போது, இது போன்ற அத்தியாவசியமான பணிகள் கண்டு கொள்ளப்படுவதில்லை.காரணம், பராமரிப்பு பணிக்கு தேவையான, போதிய உதிரிபாகங்கள் இல்லை என, மின்வாரியத்தினர் புலம்பும் நிலையும் உள்ளது. இதனால், மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில், சேதங்கள் அதிகரித்து, மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதைத் தவிர்க்க, பருவ மழைக்கு முன், சேதமடைந்த உறுதியிழந்த மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளை, அரசு முடுக்கி விட வேண்டும்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து, எண்ணுார் ரயில்வேக்கு ராட்சத உயர் மின் கோபுரம் மூலம் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக எண்ணுார் அண்ணா நகர், சாஸ்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு, மேல் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன.நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையில் உயர் மின் அழுத்த கோபுரத்தில் இருந்து மின்கம்பி திடீரென அறுந்து, அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. திடீரென மின்கம்பிகள் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மின் கம்பி அறுந்து விழுந்ததும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!