சென்னை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது 11 ஆண்டுகளுக்கு முன், பெருங்குடி மண்டலம் உருவாக்கப்பட்டது.
இதில் மடிப்பாக்கம், உள்ளகரம் -புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை, பெருங்குடி, பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன.
ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில், தென்சென்னை பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறி, போக்கு கால்வாய் வழியாக ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை வந்தடைகிறது.
அங்கிருந்து வடிகால் வழியாக சதுப்பு நிலத்தை அடையும் போது உள்வாங்கவும், கடலில் வெளியேற்றவும் நீர்வழித்தடங்கள் ஏதுமில்லாத காரணத்தால், சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிடுகின்றன.
குறிப்பாக, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, விஜயநகர், ஆதம்பாக்கம், கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
அதேபோல மடிப்பாக்கம் பிரதான சாலை பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடைபடும். இதுபோன்ற பேரிடர் காலங்களில், வேளச்சேரி, மடிப்பாக்கம், நாராயணபுர பகுதியினர், படகு வாயிலாக மீட்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும், இது தொடர்கதையாக இருந்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களும் நாசமாகும். தென்சென்னை பகுதிகளில் இருந்து வெளியேறும் வெள்ளநீர், இந்த மண்டலங்களில் சேகரமாகி, வெளியேற வழியில்லாமல் இருந்ததால் பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இப்பகுதி மக்களின் பல்லாண்டு கால பிரச்னைக்கு விடிவு காணும் வகையில், சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டல அதிகாரிகளின் தீவிர முயற்சியால், சதுப்பு நிலப்பகுதியில் பல இடங்களில், மழைநீர் செல்லும் வகையில் வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பணிகளால், பெருங்குடி மட்டுமல்லாமல், அடையாறு மண்டலங்களில் வெள்ள பாதிப்பு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கனமழை பெய்தால் மட்டுமே, இந்த முயற்சி எந்த அளவிற்கு பலம் தரும் என தெரியவரும்.
பெருங்குடி மண்டல மாநகராட்சி செயற்பொறியாளர் முரளி கூறியதாவது:
பெருங்குடி, அடையாறு மண்டலங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகள் கணக்கிடப்பட்டன. அங்கு மழைநீர் வடிய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனும், அடிக்கடி நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை வழங்கினார். இதையடுத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மழைநீரை உள்வாங்கி கடலில் வெளியேற்றும் வகையில், பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், பள்ளிக்கரணை- - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், 17 கால்வாய்கள் உள்ளன. அவற்றில் மழைநீர் எளிதாக செல்லும் வகையில் சீரமைக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக, ரேடியல் சாலையின் இருபுறமும் மழைநீர் செல்ல, அகன்ற நீர் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
நங்கநல்லுார், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டையில் மழைநீர் வெகுவாக வடியும் வகையில், வீராங்கால் ஓடையை துார்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக, பெருங்குடி கழிவுநீரேற்று நிலையத்திற்குச் செல்லும் ராட்சத குழாய்களின் அடிப்பகுதி, மிதவை இயந்திரங்கள் வாயிலாக துார்வாரி சீரமைக்கப்படுகிறது.
பள்ளிக்கரணை கைவேலியில் இருந்து, நாராயணபுரம் நான்குமுனை சந்திப்பு வரையிலான வேளச்சேரி - -தாம்பரம் சாலையில், நீர்வழித்தடம் இணைக்கப்பட்டுள்ளது.
அதனுடன் வேளச்சேரி, கல்லுக்குட்டை பகுதியில் இருந்து வரும் மழைநீர் வெளியேற வழிவகை செய்யப்படுகிறது. இதன் காரணமாக வேளச்சேரி, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் மழை வெள்ள பாதிப்பு குறைந்தது.
இந்த புதிய நீர்வழித்தடங்களால், சதுப்பு நிலத்தில் தேங்கும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிடும். சதுப்பு நிலத்தில் பணிகள் பெரும்பாலும், மிதவை இயந்திரங்களை கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
பெருங்குடி மண்டலத்தில், 827 மழைநீர் வடிகால் தடங்கள், 144 கி.மீ., துாரத்திற்கு உள்ளன. இதை முழுமையாக துார்வார, 1.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மூன்று ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 20 நாட்களாக 100 கி.மீ., துாரத்திற்கு வடிகால் துார்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 நாட்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்படும். இப்பணிகள் வாயிலாக, பருவமழையை எதிர்கொள்ள பெருங்குடி மண்டலம் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:பருவமழை காலத்தில் தொடர்மழை பெய்தால், மடிப்பாக்கம் பிரதான சாலையில் மழைநீர் தேங்குவது வாடிக்கை. ராம்நகர், சதாசிவம் நகர், குபேரன் நகர் பகுதிகள் முழுமையாக பாதிக்கப்படும்.அதேபோல விஜயநகர், வேளச்சேரியின் பல நகர்களிலும், 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பருவமழை தீவிரம் அடையும் போது, சதுப்பு நிலப்பகுதியின் புது நீர்வழித்தடம் உள்ளிட்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா என்பது தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேளச்சேரி ரயில்வே சாலையின் குறுக்கே, 100 அடி அகலம் கொண்ட நீர்வழிப்பாதை உள்ளது. பெருங்குடி, தரமணி, ஐ.ஐ.டி., வளாகம், வேளச்சேரியின் ஒரு பகுதியில் வடியும் மழைநீர், இந்த நீர்வழிப்பாதை வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.நீர்வழிப்பாதையில் புதர்மண்டி உள்ளது. இதனால், நீரோட்டம் தடைபட்டு, அருகில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகும் சூழல் உள்ளது.ஏற்கனவே, பல கனமழையின் போது, குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதேபோன்ற பாதிப்பு ஏற்படாத வகையில், நீரோட்ட பாதையில் வளர்ந்துள்ள புதர், குப்பையை அகற்ற வேண்டும் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
-- நமது நிருபர் --
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!