Load Image
Advertisement

கூட்டுறவு சங்க உறுப்பினர் பதவி துவங்கும் காலம் நிர்ணயம்

சென்னை:'கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே, உறுப்பினர்களின் பதவிக்காலம் துவங்குகிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு, 2018 ஏப்ரல், 9; ஆக., 28 மற்றும் செப்., 3ல் தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் தொடர்பான வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019 ஜூனில் தான் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஐந்து ஆண்டு பதவி காலம் நிறைவடைந்து விட்டதாகக் கூறி, கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க அதிகாரியை நியமனம் செய்து, இந்தாண்டு ஆக., 7ல், அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வழக்குகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள், நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் தரப்பில், 'கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர்கள் குழு, நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த பின் தான் அமைக்கப்படும். எனவே, அவர்களின் பதவிக்காலம், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து மட்டுமே கணக்கிடப்பட வேண்டும்' என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், 'சங்கங்களின் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தான் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் துவங்குகிறது' என, வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில், உறுப்பினர்களின் பதவிக்காலம், எந்த தேதியில் இருந்து துவங்குகிறது என்று கூறப்படாத நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே, பதவிக்காலம் துவங்குவதாகத் தான் கருத முடியும்; நிர்வாகிகள் தேர்தலுக்கு பின் தான் துவங்குகிறது என்று கூற முடியாது.

சில காரணங்களுக்காக உடனே நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து, சங்கம் செயல்பாட்டுக்கு வர முடியவில்லை என்பதற்காக, பதவிக் காலத்தை நீட்டிக்க முடியாது; மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement