ADVERTISEMENT
பெண்ணாடம் பகுதி கிராமங்களில் நெல், கரும்பு, மக்காச்சோளம் மற்றும் தோட்டப்பயிர்களான கத்தரி, வெண்டை, கொத்தவரை ஆகியவற்றை பிரதான தொழிலாக விவசாயிகள் செய்தனர்.
நெல் விலை குறைவு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, இறையூர் தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டது மற்றும் காய்கறிகளின் விலை குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாய பணிகள் பாதித்து, குறைந்த பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
இந்நிலையில், பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சி, பெலாந்துறை, கருவேப்பிலங்குறிச்சி, சத்தியவாடி ஆகிய கிராமங்களில் தினசரி வருமானம் கொடுக்கக்கூடிய சாமந்தி, சம்பங்கி ஆகியவற்றை தேர்வு செய்து மலர் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.
தற்போது செடிகள் செழிப்பாக வளர்ந்து பூக்கள் பூக்க துவங்கி உள்ளதால் அதிக பணம் மற்றும் தினசரி வருமானம் ஈட்டி தருவதால் பெண்ணாடம் பகுதி கிராம விவசாயிகள் மலர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கணபதிகுறிச்சி விவசாயிகள் கூறுகையில், 'மலர் பயிர்களில் சம்பங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. சம்பங்கி மலர் ஜூன், ஜூலை மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், நீண்ட கால பயிரான சம்பங்கியை தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் போன்ற இயற்கை முறையில் சாகுபடி செய்து, மலர்களை பெண்ணாடம், விருத்தாசலம் பகுதி மொத்த பூ வியாபாரிகளிடம் விற்கிறோம்' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!