கோட்டக்குப்பத்தில் மின்நிறுத்தம்; நள்ளிரவில் பொது மக்கள் முற்றுகை
மரக்காணம் : கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின் நிறுத்தத்தை கண்டித்து மின்துறை அலுவலகத்தை பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியை ஒட்டிய தமிழக பகுதியான கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக மின்சாரம் சரிவர வழங்குவதில்லை. மேலும் வீடுகளுக்கு குறைந்தழுத்த மின்சாரம் வழங்குவதால் மின்சாதனங்கள் பழுதாகி விடுகின்றது.
இது குறித்து அப்பகுதி மக்கள் மின்துறை மற்றும் நகராட்சி அலுவலகத்தில் புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பம் பகுதியில் லேசான மழை பெய்தது. அப்பொழுது மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அதன் பின் அன்று நள்ளிரவு வரை மின்சாரம் வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் துாக்கமின்றி அவதியடைந்தனர். மின்துறை அலுவலக தொலை பேசிக்கு தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு அப்பகுதி மக்கள் கோட்டக்குப்பம் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மின்துறை அதிகாரிகள் இல்லாததால் கோட்டக்குப்பம் வருவாய்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!