Load Image
Advertisement

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம்

- நிருபர் குழு -

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மேல்முறையீடு செய்யும் மனுக்கள் மீது விசாரணை நடத்தி, ஒரு மாதத்துக்குள் தீர்வு காண, கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 11 லட்சத்து, 43 ஆயிரத்து, 891 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், ஒன்பது லட்சத்து, 93 ஆயிரத்து, 759 கார்டுதாரர்கள் விண்ணப்பம் பெற்றனர்.

இதில், ஏழு லட்சத்து, 41 ஆயிரத்து, 799 கார்டுதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவு செய்தனர். இவற்றில், இரண்டு லட்சத்து, 81 ஆயிரத்து, 113 கார்டுதாரர்களின் விபரம் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அஞ்சலகங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், புதிதாக, 6,429 கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. கிணத்துக்கடவு, மதுக்கரை வட்டத்தை சேர்ந்த, 2,500 பயனாளிகளுக்கு 'ரூபே' கார்டு வழங்கி, திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

பயனாளிகள் பலருக்கும் வங்கி கணக்கில் பணம் வரவானது தொடர்பாக, குறுஞ்செய்தி வந்திருக்கிறது. குறுஞ்செய்தியோ அல்லது பணமோ வராதவர்கள் விண்ணப்பத்தின் நிலை அறிய, கோவை கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கென, தலா ஐந்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஒரு மாதத்துக்குள் இ-சேவை மையம் வாயிலாக, இணைய வழியில் மேல்முறையீடு செய்யலாம். இம்மனுவை கோட்டாட்சியர்கள் விசாரணை செய்து, ஒரு மாதத்துக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை



மகளிர் உரிமைத்தொகை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள், பயன் பெற்றவர்கள் குறித்து தகவல், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தாலுகா வாரியாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், பெறப்பட்ட விண்ணப்பங்களை முறையாக பதிவேற்றம் செய்யாதது, வங்கியில் ஆதார் இணைப்பு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் பெரும்பாலானவர்களுக்கு பணம் வழங்கவில்லை.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், தமிழக அரசு இ- சேவை மையங்கள் வாயிலாக, காரணத்தை அறிந்து கொள்ளவும், மீண்டும் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில், உடுமலை தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. இதில், உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், காரணத்தை அறியவும், மறு பதிவு செய்யவும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

இதற்கென சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், 'சர்வர்' பிரச்னை காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரு சிலருக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டது. எனவே, விண்ணப்பித்தவர்கள், தொகை வழங்கியவர்கள் பட்டியல் முறையாக வெளியிடவும், அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement