பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகாக்களில், 110 ஊராட்சிகள் மற்றும் ஏழு பேரூராட்சிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மொத்தம், ஐந்து கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக, ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதை முறையாக செலுத்தாமல் பல ஊராட்சி நிர்வாகங்கள் நிலுவை வைத்துள்ளன. கட்டணம் பல லட்சம் நிலுவையில் உள்ளதால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகங்களுக்கு நிலுவை கட்டணத்தை செலுத்த கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
அதில், 'குடிநீர் கட்டண நிலுவைத்தொகை அதிகம் உள்ளது. இந்த தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில், குடிநீர் வினியோகம் 25 சதவீதம் குறைக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில ஊராட்சிகளில் பணம் செலுத்தாததால், குடிநீர் வினியோகம் அளவு குறைக்கப்பட்டதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர், போதிய நிதி இல்லை என்றும்,கட்டணம் செலுத்தகால அவகாசம் வேண்டுமென, குடிநீர் வடிகால் வாரியத்திடம், கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான, கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் முறையாக கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன.
அதில், ஊராட்சிகளில், ஏழு கோடியே, 67 லட்சம் ரூபாயும்; ஏழு பேரூராட்சிகளில், 41 லட்சம் ரூபாயும் நிலுவையில் உள்ளது. இதை செலுத்த வேண்டுமென உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள், நிலுவை தொகையை வசூலிக்க அறிவுறுத்தியதால், அதிகளவு நிலுவை வைத்துள்ள ஊராட்சிகளுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. குடிநீர் வினியோகம் செய்வதற்காக மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளதால், உள்ளாட்சி நிர்வாகங்கள், நிலுவை தொகை செலுத்தினால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
சின்னாம்பாளையம், 1 கோடியே, 20 லட்சத்து, 14 ஆயிரத்து, 55 ரூபாய். மாக்கினாம்பட்டி ஊராட்சி, 96 லட்சத்து, 42 ஆயிரத்து, 762 ரூபாய். ஆச்சிப்பட்டி ஊராட்சி, 61 லட்சத்து, 4 ஆயிரத்து, 766 ரூபாய். கப்பளாங்கரை ஊராட்சி, 49 லட்சத்து, 26 ஆயிரத்து, 737 ரூபாய். ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி, 24 லட்சத்து, 34 ஆயிரத்து, 208 ரூபாய். சேர்வகாரன்பாளையம், 25 லட்சத்து, 32 ஆயிரத்து, 513 ரூபாய். திவான்சாபுதுார் ஊராட்சி, 23 லட்சத்து, 48 ஆயிரத்து, 190 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.இந்த ஊராட்சிகளில் மொத்தம், நான்கு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் நிலுவையில் உள்ளன. இந்த ஊராட்சிகள் நிலுவை தொகையை உடனடியாக செலுத்த குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.ஆயிரம் லிட்டர் குடிநீர் சுத்திகரித்து வழங்க, 17 ரூபாய் செலவு ஏற்படுகிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தற்போது, 13 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதனை உணர்ந்து, உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் கட்டண தொகையை செலுத்த முன்வர வேண்டும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!