பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்கள் மற்றும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மகா கணபதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மகா கணபதி ேஹாமம், அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, ஸ்ரீமன் நாராயணன் நகர் பகுதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், எட்டாவது ஆண்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயக பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஜூபிளி கிணறு வீதி ஆதிசக்தி விநாயகர் கோவிலில், விநாயகர் வீதி உலா நடந்தது. தேரில், சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார்.
அம்பராம்பாளையத்தில், 26ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கை முறையில் விநாயகருக்கு அலங்கார வழிபாடு நடந்தது. புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தை மனதில் கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மின்சார நுகர்வு ஆகியவற்றைக் குறைப்பது குறித்து வலியுறுத்தும் வகையில், சுற்றுச்சூழல் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
வால்பாறை,
வால்பாறையில் ஹிந்து முன்னணி சார்பில், 108 விநாயகர் சிலைகள் பல்வேறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு, பால், மஞ்சள், இளநீர், நெய், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷக பூஜை நடந்தது. சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், வால்பாறை காமராஜ்நகர், எம்.ஜி.ஆர்.,நகர், சிறுவர்பூங்கா மற்றும் எஸ்டேட் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர்.
உடுமலை
உடுமலை பகுதி கிராமங்களில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். எரிசனம்பட்டி, தேவனுார்புதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இச்சிலைகளுக்கு, மூன்று நாட்கள் சிறப்பு பூஜை நடக்கிறது. மேலும் சிறப்பம்சமாக, கிராமங்களில், பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடந்தது.
எரிசனம்பட்டியில், கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில், சிறப்பு யாகத்துடன் பாலமுருக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு உச்சிமாகாளியம்மன் கலைக்குழு சார்பில், வள்ளி கும்மியாட்டம் மற்றும் தேவராட்டம் என, பாரம்பரிய கலைகளை ஆடி வழிபாடு செய்தனர். இதே போல், தேவனுார்புதுார் கிராமத்திலும் உருமியாட்டம் ஆடி, விநாயகரை வழிபாடு செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!