பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில், வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம் நேற்று துவங்கி, வரும், 23ம் தேதி வரை (புதன்கிழமை தவிர) வழங்கப்படுகிறது. வரும், 25ம் தேதி விடுபட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்கள் மட்டுமின்றி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படுகிறது.
வைட்டமின் 'ஏ' திரவம், ஆறு மாதங்கள் முதல், 11 மாதங்கள் உள்ள குழந்தைகளுக்கு, ஒரு மில்லியும், 12 மாதங்கள் முதல், 60 மாதங்கள் வரை உள்ள குழந்தைகள், 2 மில்லிவரை வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த திரவம் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணி நேற்று துவங்கியது. இப்பகுதிகளில் 74 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள, 4,392 குழந்தைகளுக்கு, வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணி, நேற்று (19ம் தேதி) முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. தற்போது வரை, 1,030 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 6 மாதம் முதல், 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசமாக வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படுகிறது. வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் ஆகிய சுகாதார நிலையங்களில், வரும், 30ம் தேதி வரை, வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படுகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கூறியதாவது: உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து வைட்டமின் 'ஏ'. ஆரோக்கியமான கண் பார்வைக்கு இந்த ஊட்டச்சத்து முக்கிய தேவையாகும். மேலும், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான முக்கிய ஊட்டச்சத்தாகும்.
வால்பாறை தாலுகாவில், 3,700 குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்படுகிறது. துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. வரும், 30ம் தேதி வரை வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படுவதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தவறாமல் அழைத்து வந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!