பஸ் ஸ்டாண்டில் குப்பை; பயணியர் நலனில் இல்லை அக்கறை!
ரோட்டில் கொடிக்கம்பம்
பொள்ளாச்சி - வால்பாறை ரோடு, நா.மூ.சுங்கம் நான்கு ரோடு சந்திப்பில், கொடிக்கம்பம் ரோட்டின் ஓரத்தில் அமைத்துள்ளனர். முக்கிய சந்திப்பில், ரோட்டின் வளைவில், போக்குவரத்துக்கு இடையூறாக கம்பம் நடப்பட்டுள்ளது. எனவே, கொடிக்கம்பத்தை உடனடியாக அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -பாலா, நா.மூ.சுங்கம்.
வீணாகும் கழிப்பிடம்
வால்பாறை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கழிப்பிடம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பஸ் பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்க, பயணியர் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிழற்கூரையில் போஸ்டர்
கிணத்துக்கடவு அடுத்துள்ள கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரையில், அதிக அளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் நிழற்கூரையே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. போஸ்டர்களை உடனடியாக அகற்றி, நிழற்கூரையை ஊராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்த வேண்டும்.
-- -ராம்குமார், கோவில்பாளையம்.
கழிவு நீர் தேக்கம்
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டில், சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதுபற்றி பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -வெங்கடேசன், பொள்ளாச்சி.
கழிவுகளால் இடையூறு
உடுமலை, சரவணா வீதியில் விதிகளை மீறி கட்டடக்கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் மிகுதியான துாசு பறக்கிறது. வாகன ஓட்டுநர்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. கட்டடக்கழிவு கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கஜேந்திரன், உடுமலை.
ஒளிராத தெருவிளக்கு
உடுமலை, எஸ்.வி.,புரம் பி.வி., லே-அவுட் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கு பாதுகாப்பு இல்லை, தெருவிளக்குகளை சீரமைத்து, குடியிருப்பு பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.
- தேவிகா, உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தினசரி சந்தைரோட்டில் சந்தைக்கு வரும் வாகனங்கள் ரோட்டை மறித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மற்ற வாகன ஓட்டுநர்கள் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.
- செல்வகுமார், உடுமலை.
பள்ளி முன் அசுத்தம்
உடுமலை, ராஜேந்திரா ரோடு அரசு பள்ளி முன்பகுதி, திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. பொதுமக்கள் பள்ளி சுற்றுச்சுவரை அசுத்தம் செய்வதால், வளாக துாய்மை பாதிக்கப்படுவதோடு, மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முத்துகுமார், உடுமலை.
ரோடு பணி இழுபறி
உடுமலை - சடையக்கவுண்டனுார் பிரிவில் இருந்து, கிராமத்துக்கு செல்லும் இணைப்பு ரோடு புதுப்பிக்கும் பணி, நீண்ட நாட்களாகியும், நிறைவு பெறாமல், இழுபறியாக நடக்கிறது. இதனால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
- சண்முகவேல், உடுமலை.
துார்வாராத வடிகால்
உடுமலை நகராட்சி, 24வது வார்டு அப்பாவு வீதியில், மழை நீர் வடிகால் துார்வாரப்படாமல், மண் மேடாக மாறியுள்ளது. கழிவுகளும் தேங்கி சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. வடிகாலை துார்வாரி சுத்தப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலசுப்ரமணியம், உடுமலை.
தீப்பொறியால் ஆபத்து
உடுமலை, வெங்கடகிருஷ்ணா ரோட்டில் குப்பை உள்ளிட்ட கழிவை குவித்து, தீ வைத்து எரிக்கின்றனர். காற்றில் தீப்பொறிகள் பறப்பதுடன், புகை மண்டலமாக மாறி விடுகிறது. ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும், மக்களுக்கு சுகாதார பாதிப்பும் ஏற்படுகிறது. குப்பைக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும்.
- ஜெயந்தி, உடுமலை.
குப்பை அகற்றணும்!
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஒரு வாரமாக குப்பை அகற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பொதுசுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பஸ் பயணியர் நலனை கருத்தில் கொண்டு, குப்பையை அகற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
-- -ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!