செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இதில், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், அதிகமான கிராமங்கள் உள்ளன.
அச்சிறுபாக்கம் அடுத்த அனந்தமங்கலம் கிராமம், விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.
இங்குள்ள மக்கள், இலவச வீட்டுமனை, விவசாய நிலங்கள் பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக, 50 கி.மீ., துாரம் உள்ள மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில், போக்குவரத்து வசதி அதிகம் இல்லாததால், பொதுமக்கள் காலையிலேயே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், மதுராந்தகம் தாலுகா அலுவலகம் வருகின்றனர்.
இங்கு நீண்டநேரம் காத்திருக்கும்போது, காலவிரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது.
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில், அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார் ஆகிய பகுதிகள் வளர்ச்சிஅடைந்து வருகின்றன. இப்பகுதியில், தனியார் கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதி மக்கள், 25 கி.மீ., தொலைவில் உள்ள செய்யூர் தாலுகா அலுவலகத்திற்கு, அனைத்து தேவைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், மதுராந்தகம், செய்யூர் தாலுகா பகுதிகளில், அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ள கிராமங்களைப் பிரித்து, அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து, அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளது.
இப்பகுதி மக்களின் நலன் கருதி, அச்சிறுபாக்கம் தாலுகா அமைக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசின் உதவித்தொகை, வாரிசு சான்றிதழ், பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா ஆகிய சேவைகளைப் பெற, தொலைவில் உள்ள மதுராந்தகம், செய்யூர் தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. தாலுகா அலுவலகத்திற்கு காலையில் சென்றால், மாலையில் தான் திரும்ப முடியும். இதனால், அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாகக்கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.
- இரா.பரந்தாமன், சமூக ஆர்வலர்.
அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்க இருக்கும் புதிய தாலுகாவிற்குட்பட்ட கிராமங்கள் தேர்வு செய்யும் பணியில், மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில், மதுராந்தகம் தாலுகாவில், ஒரத்தி, அச்சிறுபாக்கம் குறுவட்டங்கள் இணைக்கப்படவுள்ளன. அதோடு, பெரும்பாக்கம் குறுவட்டத்தில், அத்திவாக்கம், திருமுக்காடு, உத்தமநல்லுார், காட்டுக்கூடலுார், நேமம், ஒரத்துார், பாதிரி, வேலாமூர் ஆகிய கிராமங்களையும், புதிய தாலுகா எல்லைக்குள் இணைக்கப்படவுள்ளன.செய்யூர் தாலுகாவில், சித்தாமூர், கயப்பாக்கம் ஆகிய குறுவட்டங்களை பிரித்து, அச்சிறுபாக்கம் தாலுகாவில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அச்சிறுபாக்கம் புதிய தாலுகா அலுவலகம் உருவாகும் பகுதியில், ஒரத்தி, அச்சிறுபாக்கம் குறுவட்டங்கள், சித்தாமூர், கயப்பாக்கம் குறுவட்டங்கள் மற்றும் அச்சிறுபாக்கம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகள் அமைகின்றன.
இந்த இரு திராவிடஊழல் கட்ஷிகளும் ஒவ்வொரு கிராமத்தையும் ஒரு தாலுக்கா/மாவட்டமாக்கிவிடுவார்கள் போல் தோன்றுகிறது. வருவாய்துறையிலுள்ள ஊழல் ஊழியர்கள் தாங்கள் சீக்கிரமே பதவி உயர்வைபெற இதுபோன்று புதிய மாவட்டங்கள் தாலுகாக்ககள் என கூறுபோடுகின்றனர்