நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இரண்டாமாண்டு படிக்கும் ஒரு மாணவி, தன் பிறந்தநாளை கொண்டாட, 13 பேருடன், நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள, 'ஐவின்ஸ்' என்ற அசைவ ஹோட்டலுக்கு, 16ம் தேதி சென்றார். அப்போது, 'ஷவர்மா' என்ற சிக்கன் உணவை சாப்பிட்டுள்ளனர். இதில், 11 பேருக்கு நேற்று முன்தினம் வாந்தி, மயக்கம் ஏற்படவே, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
கலெக்டர் உமா, உணவு பாதுகாப்பு துறையினர், ஹோட்டலில் ஆய்வு செய்ததில், இறைச்சியின் தரம் குறைவாக இருந்தது தெரிந்ததால், ஹோட்டலுக்கு, 'சீல்' வைத்தனர்.
இதற்கிடையில், நாமக்கல்,- சந்தைப்பேட்டை புதுாரைச் சேர்ந்த சுஜாதா, 38, அவரது மகளான, அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கலையரசி, 14, ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் பூபதி, 12, உறவினர்கள் இருவர் என, ஐந்து பேர், 16ம் தேதி அதே ஹோட்டலில், 'ஷவர்மா' பார்சல் வாங்கி, வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்படவே, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று அதிகாலை கலையரசி இறந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அதே ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி அஜய், 29, தமிழ்செல்வன், 25, ஆண்டவர் நகர் திலகவதி, 39, சிந்துஜா, 36, அஜித் தர்சன், 14, ஆகியோர், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை கலெக்டர் உமா, நாமக்கல் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமலிங்கம் உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
கலெக்டர் உமா கூறியதாவது:
'ஐவின்ஸ்' ஹோட்டலில், ௧௬ம் தேதி இரவில் ஷவர்மா, பிரைடு ரைஸ், நான், தந்துாரி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறி இருந்துள்ளது.
இதில், ௧௪ வயது சிறுமி நேற்று காலை இறந்தார்; ௧௬ம் தேதி இரவு ஹோட்டலில் சாப்பிட்ட, 43 பேர், தற்போது உள்நோயாளிகளாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், மூவர் குழந்தைகள்; ஒருவர் கர்ப்பிணி.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இறந்து போன சிறுமியின் உறவினர்கள் அளித்த புகார்படி, நாமக்கல், சிலுவம்பட்டியைச் சேர்ந்த, ஹோட்டல் உரிமையாளர் நவீன்குமார், 2௫, சமையலர்களான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் மகாகுட், ௨௭, தபாஷ்குமார், ௩௦, ஆகிய மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது, ஜாமினில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கேரளாவில் கடந்தாண்டு ஷவர்மா சாப்பிட்ட, 16 வயது சிறுமி உயிரிழந்தார். தற்போது, நாமக்கல் சிறுமி உயிரிழந்துள்ளார்.இறைச்சியை பொறுத்தவரையில், அவற்றை முறையாக பதப்படுத்தாவிட்டாலும், வேக வைக்காவிட்டாலும், 'ஷிகெல்லா, ஸ்டபைலோ காக்கஸ் ஆரியஸ், லிஸ்டீரியா மோனோசைப்டோஜீனஸ்' உள்ளிட்ட பாக்டீரியா உருவாகி விடுகிறது.முறையாக வேக வைக்காமல் சாப்பிடும் போது உயிர்கொல்லியாக மாறி விடுவதால், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், தமிழகத்தில் மாதிரிகளை பரிசோதிக்க போதிய அளவில், பகுப்பாய்வு கூடங்கள் இல்லை. ஒரு மாதிரியை சேகரிக்க அனுப்பினால், 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது.இதுபோன்ற பல்வேறு காரணங்களால், உணவின் தரத்தை உறுதி செய்வதில், அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மாநிலம் முழுதும் இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் சோதனை செய்யவும், அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கவும், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:இறைச்சியை பொறுத்தவரை பதப்படுத்துவது மிக முக்கியம். ஒரு பாத்திரத்தில் இறைச்சியை வைத்து, வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் வைத்து, மறுநாள் அரைகுறை தீயில் சமைத்து சாப்பிட்டால் ஆபத்தாக மாறி விடும். அதுபோல, பெரும்பாலான உணவகங்களில் செய்கின்றனர்.இறைச்சியை, பிளாஸ்டிக் கவரில் காற்று புகாதவாறு அடைத்து, அதற்கேற்ற குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அவை கெட்டு போகாமல் இருக்கும்.அதேபோல், இறைச்சிக்கு அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவ வேண்டும். ஷவர்மா போன்ற உணவு பொருட்கள், குறைந்தது ஐந்து மணி நேரம் வெளியே கம்பியில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதற்கேற்ப அனைத்து இறைச்சி பகுதிகளுக்கும் தீ பரவும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான ஹோட்டல்கள் அவற்றை பின்பற்றுவது இல்லை.இவற்றை தடுக்கும் வகையில், அனைத்து இறைச்சி கடைகள், அசைவ உணவகங்களில் ஆய்வு செய்து, அவர்கள் முறையாக இறைச்சியை பதப்படுத்துகின்றனரா என்பதை சோதனை செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!