Load Image
Advertisement

மாமூல் வசூலிக்க உத்தரவிட்ட ஏசி கமிஷனரு இருந்துமா அவ்ளோ ஈஸி?

 Is the AC commissioner ordered to collect Mamul so easy?    மாமூல் வசூலிக்க உத்தரவிட்ட ஏசி கமிஷனரு இருந்துமா அவ்ளோ ஈஸி?
ADVERTISEMENT
வீ ட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு பூஜையறையை, தயார் செய்து கொண்டிருந்தாள் சித்ரா.

மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த மித்ரா, தேங்காய், பழம், பூக்கள் 'பர்ச்சேஸ்' செய்து வந்திருந்தாள்.

பில்டர் காபி கொடுத்து வரவேற்ற சித்ரா, ''என்ன மித்து... பூ மார்க்கெட்டுல ஏகப்பட்ட கூட்டமா,'' என ஆரம்பித்தாள்.

''ஆமாக்கா... வழக்கம்போலதான்.. ரெண்டு மார்க்கெட்டுக்கு முன்னாடியும், ரோட்டை ஆக்கிரமிச்சு ஏகப்பட்ட தரைக்கடை போட்டிருந்தாங்க. கார்ப்பரேஷன் ஆபீசர்களும் கண்டுக்கலை; போலீஸ்காரங்க எட்டியே பார்க்கலை. மக்கள் படுற அவஸ்தைக்கு என்னைக்கு தான் தீர்வு கெடைக்குமோ,'' என, புலம்பினாள் மித்ரா.

''மித்து, மினிஸ்டர் உதயநிதி நம்மூருக்கு வந்தப்போ, 'டிராபிக் ஜாம்'முல சிக்கி, ஜனங்க கஷ்டப்பட்டாங்களாமே...''

''அதுவா, கட்சி நிர்வாகிகள் இல்லத்திருமண விழாவுக்கு வந்திருந்தாரு; ஏர்போர்ட்டுல தடபுடலா வரவேற்பு கொடுத்தாங்க. ஆங்காங்கே கட்சிக்காரங்க நின்றிருந்ததால, அவிநாசி ரோட்டுல 'டிராபிக் ஜாம்'. வாகனங்கள் இன்ச் பை இன்ச்சா நகர்ந்துச்சு.

பஸ் ஸ்டாண்டுகள்ல, வெளியூர் போறதுக்கு ஏகப்பட்ட பயணிகள் 'வெயிட்' பண்ணிட்டு இருந்தாங்க. டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் என்ன செய்றதுன்னே தெரியாம முழிச்சிட்டு இருந்தாங்க,''

''ஜெ., முதல்வரா இருந்தப்போ, சென்னையில இப்படித்தான் தேவையில்லாம போக்குவரத்தை நிறுத்தி, மக்களை ரொம்பவும் கஷ்டப்படுத்தி, கவர்மென்ட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துனாங்க. அதே மாதிரி, இப்போ தி.மு.க., கவர்மென்ட்டுக்கு நம்மூர்ல அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுக்குறதுல, போலீஸ்காரங்க நம்பர் ஒன் இடத்துல இருக்காங்க,''

''அதற்கு மித்ரா, ''செல்வபுரம் ஸ்டேஷன்ல எழுதுறவரு வச்சதுதான் சட்டமாம். அவரு தான், ஆல் இன் ஆல் அழகுராஜான்னு சொல்றாங்க. யார் யாருக்கு எங்க டூட்டி போடுறதுன்னு இவருதான் முடிவெடுப்பாராம்.

கரெக்டா 'கட்டிங்' கொடுக்குறவங்களுக்கு செக்போஸ்ட் டூட்டி, பேட்ரோல் டூட்டி போடுவாராம்; நேர்மையான போலீஸ்காரங்களா இருந்தா, கோர்ட் டூட்டிக்கு அனுப்பிடுறாராம். மாசா மாசம் மாமூல் சிந்தாம சிதறாம வர்றதுனால, எழுதுறவரு சொல்றதை மட்டுமே உயரதிகாரி கேட்குறாராம்,''

''மித்து, என்கிட்டயும் ஒரு வில்லங்கமான தகவல் இருக்கு. சொல்றேன் கேளு! வேல் வச்சிருக்கற கடவுள் பெயர் கொண்ட இன்ஸ்., ஒருத்தர், ஏற்கனவே பல்வேறு முறைகேடுகளில் சிக்கி, 'சஸ்பெண்ட்' நடவடிக்கைக்கு ஆளானவரு.

இப்போ, உதவி கமிஷனரா டிராபிக் பிரிவுல இருக்குறாரு. இவருக்கு கீழ் வேலை பார்க்கற எஸ்.ஐ., ஒவ்வொருத்தரும் மாசம் ரூ.15 ஆயிரம், ரோந்து போலீஸ்காரங்க ரூ.10 ஆயிரம் 'கப்பம்' கட்டணும்னு ஆர்டர் போட்டிருக்காராம்.

வேற வழியில்லாம, வாகன ஓட்டிகளை ஆங்காங்கே நிறுத்தி, வழிப்பறி செய்யாத குறையா, பணம் வசூலிக்கிறாங்களாம். மனசுக்கு பிடிக்கலைன்னாலும், உயரதிகாரி டார்ச்சரால இதெல்லாம் செய்ய வேண்டியிருக்குன்னு, 'வெஸ்ட்'டுல இருக்குற எஸ்.ஐ.,க்கள் பலரும் புலம்பிட்டு இருக்காங்க,''

''அக்கா, இதே மாதிரி தடாகம் போலீஸ்காரங்களும் வசூல்ல பட்டைய கெளப்புறாங்களாம். இந்த ஏரியாவுல மட்டும் கவர்மென்ட் தடை செஞ்ச, லாட்டரி சேல்ஸ் துாள் பறக்குதாம். நடவடிக்கை எடுக்காம இருக்கறதுக்கு, போலீஸ்காரங்களை செமயா 'கவனி'க்கிறாங்களாம்,''

''அதெல்லாம் இருக்கட்டும்... நம்மூருக்கு சூப்பர் ஸ்டார் வந்திருந்தாராமே...''

''சூலுார்ல நடந்த, பேரன் காது குத்து விழாவுக்கு வந்திருந்தாரு. பீளமேடு ஏர்போர்ட்டுல ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்துட்டாங்க. ரொம்பவும் சந்தோஷமான மூடுல இருந்தாரு. தள்ளுமுள்ளுவுக்கு இடையிலும் சில நிருபர்கள், கேள்வி கேட்டுட்டே வந்தாங்க. அவரும் மதிப்பு கொடுத்து, பதில் சொல்லியிருக்காரு,''

''நம்மூரு பொறுப்பு அமைச்சரான முத்துசாமி, ரொம்பவும் கோபத்துல இருக்காராமே...'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினாள் சித்ரா.

''அதுவா, மகளிர் உரிமைத்தொகை திட்ட துவக்க விழாவுக்கு அமைச்சர் முத்துசாமி வந்திருந்தாரு; மேயரோ 'ஆப்சென்ட்' ஆகியிருந்தாரு. விழா முடிஞ்சதும், இதைப்பத்தி, அமைச்சர்கிட்ட நிருபர்கள் நேருக்கு நேரா கேள்வி கேட்டுட்டாங்க,''

''அதுக்கு, 'பொறுப்பா விசாரிச்சு, பொறுப்பா பதில் சொல்றேன்'னு சொன்ன மினிஸ்டர், இந்த விவகாரத்துல ரொம்பவே 'அப்செட்'டுல இருக்காராம்,''

கொழுக்கட்டை செய்ய தயாரான மித்ரா, ''அக்கா... கார்ப்பரேஷன்ல குப்பை அள்ள தொழிலாளர்களை வச்சு ஏகப்பட்ட சங்கங்கள், கூட்டமைப்புகள் உருவாகியிருக்கு. அதுல ஒரு குரூப், முதல்வரை சந்திக்க, மெட்ராஸ்க்கு கூட்டிட்டு போறோம்னு காசு கேட்டிருக்காங்க.

அதுக்கு பலமா எதிர்ப்பு கெளம்பியதும், காசு வசூலிக்காம, 9 பஸ்களில் அழைச்சிட்டு போயிருக்காங்க. ஆனா, முதல்வரை சந்திக்க முடியாம ஏமாற்றத்தோட திரும்பி வந்திருக்காங்களாம்,'' என, 'ரூட்' மாறினாள்.

''மித்து, நானும் ஒரு கார்ப்பரேஷன் மேட்டர் சொல்றேன்,'' என்ற சித்ரா, ''வெஸ்ட் ஜோன்ல வாட்டர் செக்சன்ல இருக்குற ஒரு லேடி, 'பவர் புல்'லாம். செல்வாக்கை பயன்படுத்தி, எஸ்.ஐ., - எஸ்.ஓ.,க்கு ஒதுக்க வேண்டிய குடியிருப்பை வாங்கிட்டாங்களாம். எங்க டிரான்ஸ்பர் போட்டாலும், மறுபடியும் திரும்ப அதே 'சீட்'டுக்கு வந்துருவாங்களாம். அதனால, வெஸ்ட் ஜோன்ல அந்த லேடி கெத்து ஜாஸ்தியாம்,'' என்றாள் சித்ரா.

''அதெல்லாம் இருக்கட்டும். போதையில்லா தமிழகம் உருவாக்கப் போறதா மேடையில முழங்குறாங்க. ஆனா, வீதிக்கு வீதி கஞ்சா சேல்ஸ் நடந்துக்கிட்டு இருக்கு. போலீஸ்காரங்க என்ன தான் செய்றாங்க...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''ஆமா, மித்து! நீ சொல்றது உண்மைதான்! நானும் ரெண்டு இடத்துல கேள்விப்பட்டேன். குனியமுத்துாரை அடுத்த பி.கே.புதுார் பகுதியில் முத்துசாமி வீதியில, ரேஷன் அரிசியை இருப்பு வச்சு கேரளாவுக்கு கடத்திட்டு போறாங்களாம். அதே மாதிரி, மூட்டை மூட்டையா கஞ்சா பதுக்கி வச்சிருந்து, பொட்டலங்களா சேல்ஸ்க்கு அனுப்புறாங்களாம்,''

''இதேமாதிரி, ஆவாரம்பாளையம் பாலாஜி நகர்ல பெருமாள் பேருல காம்ப்ளக்ஸ் இருக்கு. வணிக வளாகமாகவும் செயல்படுது; ரூம்ஸ் இருக்கறதால, லாட்ஜ் போலவும் செயல்படுது. கஞ்சா சேல்ஸ் நடந்ததால, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிலரை போலீஸ்காரங்க 'அரெஸ்ட்' பண்ணாங்க. இப்போ, இந்த காம்ப்ளக்ஸ்க்கு வயது பொண்ணுங்க அடிக்கடி வந்து, ஜாலியா இருந்துட்டு போறாங்களாம்,''

''அக்கா... போலீஸ்காரங்களுக்கும் ஏகப்பட்ட சிக்கல் வருதாம். சூலுார் ஏரியாவுல ரொம்பவும் கஷ்டப்பட்டு திருட்டு கும்பலை, 'அரெஸ்ட்' பண்ணுனாங்களாம். திருடுன நகை எங்கேன்னு கேட்டதுக்கு, 'அதெல்லாம் டூப்ளிகேட்... கவரிங் நகைங்க... துாக்கி வீசிட்டோம். வீட்டு ஓனரை பிடிச்சு விசாரிங்கன்னு, 'தில்'லா பதில் சொல்றாங்களாம்.

''பதவியை கைப்பத்துறதுக்கு, லட்சக்கணக்குல பேரம் பேசுறாங்களாமே...''

''ஆமாக்கா, அன்னுார் ஒன்றியத்துல, காட்டம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பதவி காலியா இருக்கு. இந்த பதவியை கைப்பத்துறதுக்கு, நாலு கவுன்சிலர்களிடம் போட்டி.

சில பேரு ஒரு லட்சம் ரூபாய் தர்றதாகவும், சிலபேரு ரெண்டு லட்சம் தர்றதாவும் சொல்லி, மத்த கவுன்சிலர்கள்கிட்ட ஆதரவு கேட்டுட்டு இருக்காங்க.

ஒரு வருஷம், மூணு மாசத்துல இந்த பதவிக்காலம் முடிஞ்சிரும்; இதுக்கே லட்சக்கணக்குல பேரம் பேசுனா, எவ்வளவு சம்பாதிப்பாங்கன்னு கவுன்சிலர்கள் கணக்குப் போட்டு பார்க்குறாங்க...''

''ஆளுங்கட்சி கவுன்சிலர்களே முறைகேட்டுக்கு உடந்தையா இருக்காங்களாமே...'' என, கடைசி மேட்டருக்கு சென்றாள் சித்ரா.

''அதுவா... மேட்டுப்பாளையம் நகராட்சியில, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலபேரோட ஆதரவுல, குப்பை அள்ளுற சில வாகனங்கள், நைட் நேரத்துல நகராட்சி எல்லைய தாண்டி போயி, ஹோட்டல் குப்பையை சேகரிச்சுட்டு வருதாம்.

நகராட்சியில அள்ளுனதா கணக்கு காட்டுறாங்களாம். வண்டியில ஜி.பி.எஸ்., பொருத்துனா முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துடும்னு சொல்றாங்க,'' என்றபடி, பூஜையறைக்குள் சென்ற சித்ரா, சுவாமி படங்களை அலங்கரிக்க ஆரம்பித்தாள்.

படையலுக்கு தயாரித்த பதார்த்தங்களை, தட்டுகளில், எடுத்து வந்தாள் சித்ரா.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement