ADVERTISEMENT
சென்னை, ஓ.எம்.ஆர்., அருகில் உள்ள, கண்ணகி நகர், எழில் நகரில் 23,704 வீடுகள் உள்ளன. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், குடியிருப்பு பராமரித்து வந்தது. 2021 முதல் குடியிருப்புவாசிகளே பராமரிக்க, வாரியம் சார்பில் நலச்சங்கங்கள் துவக்கப்பட்டன. இதையடுத்து, 'பிளாக்' வாரியாக சங்கம் துவங்க, ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன.
இத்திட்டம், பெரும் வரவேற்பை பெற்றது. சங்கம் வாயிலாக, பராமரிப்பு கட்டணம் வசூல், துாய்மையான குடியிருப்பு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சேமிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில், நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், காவல் துறையுடன் சேர்ந்து சிறுமியர், பெண்கள் பாதுகாப்பு, சட்டவிரோதமான செயல்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், மது, கஞ்சா, போதை ஊசி வியாபாரம் போன்ற சட்டவிரோத தொழில் நடத்தும் சில நபர்களால், சங்க நிர்வாகிகளுக்கு, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
ஒரு கட்டத்தில், வாரிய அதிகாரிகள் திறந்து வைத்த சங்க பெயர் பலகைகளை, கூர்மையான ஆயுதங்களை கொண்டு சேதப்படுத்தினர். குடியிருப்பு பொது விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களுக்கு, சில கட்சி நிர்வாகிகளும், ஒரு சில போலீசாரும் துணை போவதாக கூறப்படுகிறது.
இதனால், எழில் நகர், கண்ணகி நகரில் உள்ள சில சங்க நிர்வாகிகள், ௶தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால், சங்கத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை' என, சங்க கோப்புகளை திருப்பி ஒப்படைத்து வருகின்றனர்.
இது குறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சங்கம் துவங்கியபின், எங்கள் குடியிருப்புகளில் பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டு வந்தோம். மக்களுக்கும் பொறுப்பு அதிகரித்தது. போதை பொருள் விற்பதை நாங்கள் தான் போலீசாருக்கு தெரிவிக்கிறோம் என, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
கணவரை தாக்குவது, குழந்தைகளுக்கு மிரட்டல், சங்க கூட்டம் நடத்த இடையூறு, சங்க பெயர் பலகை சேதம், ஆவணங்களை பறிப்பு என பல்வேறு வகைகளில் இடையூறு செய்கின்றனர்.
போலீசாரிடம் கூறினால், மிரட்டல் அதிகரிக்கிறது. இதனால், சங்கத்தை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
குடியிருப்புவாசிகளுக்கு, பொறுப்பு அதிகரிக்க பிளாக் வாரியாக சங்கம் துவங்கி வருகிறோம். சங்கத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாரிடம் கூறி உள்ளோம். இதுவரை யார் மீதும் வழக்கு பதியவில்லை.
கண்டிக்கவும் செய்யவில்லை. சங்கத்தை திருப்பி ஒப்படைப்பது தொடர்பாக, மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!