சென்னை: போலி ஆதார் எண்ணை பயன்படுத்தி சொத்துக்கள் அபகரிப்பது அதிகரித்துள்ளதால், சார் - பதிவாளர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
தமிழகத்தில், 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக வீடு, மனை சொத்துக்கள் விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இதில், உரிமையாளருக்கு தெரியாமல், போலி பத்திரங்கள் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் சொத்துக்கள் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
சம்பந்தப்பட்ட மோசடி பத்திரங்களை விசாரணைக்கு பின், மாவட்ட பதிவாளரே ரத்து செய்யலாம் என, சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனால், மோசடி பத்திரங்கள் பதிவாவது தடுக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களில், போலிகள் வரத் துவங்கிஉள்ளன.
குறிப்பாக, ஆள்மாறாட்டம் செய்ய போலியான ஆதார் எண் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து சார் - பதிவாளர்கள் கூறியதாவது:
பத்திரப்பதிவின் போது, சொத்து வாங்குபவர், விற்பவர் குறித்த அடையாளத்தை சரி பார்க்க வேண்டியது அவசியம். இதற்கு அரசு பரிந்துரைத்த அடையாள சான்றுகளை பரிசீலிக்கிறோம்.
ஆனால், மக்கள் எடுத்து வரும் அடையாள சான்றுகளின் உண்மை தன்மையை சரி பார்ப்பதற்கான வசதி இல்லை. அடையாள சான்றில் உள்ளவர் தான், நேரில் வந்துள்ள நபரா என்பதை ஓரளவுக்கு மட்டுமே பார்க்க முடியும். ஆதார் உள்ளிட்ட அடையாள சான்றுகளில் போலிகள் அதிகரித்துள்ளது பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.
மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலி ஆதார் அடிப்படையில் நடந்த பத்திரப்பதிவுகள் தொடர்பாக வழக்குகள் வந்துள்ளன. இந்த விஷயத்தில் பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பி.பாலமுருகன்
ரியல் எஸ்டேட்
சொத்து மதிப்பீட்டாளர்
பத்திரப் பதிவில் மோசடியை தடுக்க பதிவுத்துறை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகிறது. இந்நிலையில், ஆதார் எண் இருந்தால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், பதிவுக்கு வரும் நபர் எடுத்து வரும் ஆதார் உண்மையானது தானா என்பதை, 'பயோ மெட்ரிக்' அல்லது ஓ.டி.பி., எண் வாயிலாக சரி பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும். தற்போது, குறிப்பிட்ட சில அலுவலகங்களில் மட்டுமே உள்ள இந்த வசதியை, அனைத்து அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.விரிவுபடுத்தினாலும், இதை சார் - பதிவாளர்கள் பயன்படுத்துவதை கட்டாயமாக்க பதிவுத்துறை உத்தரவிட வேண்டும். அப்போது தான் போலிகளை தடுக்க முடியும்.
வாசகர் கருத்து (10)
உரிமையாளருக்கு தெரியாமல், போலி பத்திரங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து சொத்துக்களை மோசடி செய்யும் கூட்டம் திராவிட கட்சிகளின் ( திமுக. +அதிமுக ) துணையில்லால் நடக்கவாய்ப்பேயில்லை. வரும் காலங்களில் போலி பத்திரத்தை காட்டி ஓரீஜனல் ஓனரையே விரட்டியக்க துவங்கிவிடுவர்.
பேங்க் அக்கௌன்ட் தொடங்கவும், ஒரு மொபைல் சிம் வாங்கவும் ஆதார் பயோமெட்ரிக் வெரிஃபிகேசன் தேவை படுகிறது. சொத்து பதிவில் அது இல்லையென்றால் இதைவிட கேவலம் வேறொன்றும் இல்லை.
ஆதாரை கிணறை கேளுங்க.
பாத்திரம் பதிவிற்கு முன்பே ஆதார் சரி பார்ப்பது என்பது தான் சரியான தீர்வு. அரசிற்கு செலவு மிச்சம் பண்ண நினைத்தால் இதனால் எத்தனை தவறான பதிவு ஏற்பட்டு அதை சரி செய்ய அதிகாரிகளின் வேலை நேரம் மற்றும் இதர வழக்கு பதிவு அதற்கு வக்கீல், நீதிபதி போலீஸ் என்று அவர்கள் இப்பணியை எடுத்து செய்யும் அனைத்து கால நேரம் கணக்கில் கொண்டு வரணும். இதில் அரசிற்கு ketட்ட பெயர் மற்றும் பொது மக்கள் அவர்கள் இடம் ஏமாற்றி பத்திர பதிவு செய்ததால் அவர்கள் மனா உளைச்சல் மற்றும் இதர செலவுகள் யார் திருப்பி கொடுப்பார்..
வங்கிகளிலும், ரேஷன் கடைகளிலும் ஓய்வுபெற்ற அலுவலர்களின் லைப் சர்டிபிகேட் போன்ற செயல் முறைகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் ஆதார் வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் பத்திர பதிவு அலுவலகங்களில் நடைமுறைப் படுத்த என்ன தயக்கம்?. பயன்படுத்தினால் போலி பதிவுகளை அரசியல் வியாதிகளும் நில அபகரிப்பு மாபியாக்களும் பாதிக்கப் பட்டு வருமானம் போய்விடும் என்பதால் நடைமுறைப்படுத்த மனமில்லையா?