ADVERTISEMENT
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லோக்சபா முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை தேர்தல் நடத்துவதற்கு மொத்தம் ரூ.10 லட்சம் கோடி செலாவாகும் என புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாடு ; ஒரே தேர்தல் திட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஆராய, மத்திய அரசு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வு குழு அமைத்துள்ளது. இந்நிலையில், தேர்தல் மற்றும் தேர்தல் செலவுகள் குறித்து பல புத்தகங்களை எழுதியவரும், ஊடக ஆய்வு மையத்தின் (CMS) தலைவராக இருந்தவருமான பாஸ்கர ராவ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வரும் 2024 லோக்சபா தேர்தலில் சுமார் ரூ. 1.20 லட்சம் கோடி செலவாகும். அதில் தேர்தல் ஆணையம் 20 சதவீதம் மட்டுமே செலவழிக்கும். இதில் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான செலவு அடங்காது. லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான மதிப்பீடு ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும்.
ஆனால் மொத்த தேர்தல் செலவை மத்திய, மாநில அரசுகள் செலவழிப்பதில்லை. கட்சிகளும் வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரத்திற்காகவும் செலவு செய்கின்றன. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரச்சாரம் பெரும்பாலும் துவங்குகிறது.
ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் செலவிடப்படும் தொகையை மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ள மட்டுமே கட்சிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டுமென உச்சவரம்பு இருந்தாலும், கட்சிகளுக்கு எந்த தடையும் இல்லை.

2019 லோக்சபா தேர்தலுக்காக, கட்சிகள் ரூ. 6,400 கோடி நன்கொடையாக பெற்றன. இதில் ரூ.2,600 கோடி செலவிட்டன. 2024 லோக்சபா தேர்தலுக்கு ரூ. 1.20 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்றத் தேர்தல்களையும் ஒன்றாக நடத்தினால் ரூ. 3 லட்சம் கோடி செலவாகும். நாட்டில் மொத்தம் 4,500 சட்டமன்ற இடங்கள் உள்ளன.
அனைத்து மாநகராட்சி தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதற்கான செலவு ரூ.1 லட்சம் கோடி ஆகும். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 500 நகராட்சி இடங்கள் உள்ளன. கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளிட்டவற்றிற்கு (2,50,000 இடங்கள்) தேர்தல் நடத்துவதற்கான செலவு ரூ. 4.30 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவை கணிசமாகக் குறைக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மட்டும் போதாது. பிரச்சாரம், நடத்தை விதிகளை கடைப்பிடித்தல் ஆகியவற்றில் கட்சிகள் பின்பற்றும் நடைமுறை, செலவுகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், பல கட்டங்களாக தேர்தல், நடத்துவதற்கு பதிலாக ஒரு வாரத்தில் தேர்தலை நடத்தி முடிப்பது, செலவைக் குறைக்கும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம், பயணம், அச்சிடுதல், ஊடகப்பிரச்சாரம், பூத் அளவிலான தளவாடங்கள் ஆகியவற்றுக்கான செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. கடைசியாக, ஓட்டுக்கு நோட்டு என்பதை கட்டுப்படுத்தாமல், தேர்தல் செலவு கணிசமாகக் குறைய வாய்ப்பில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட மற்றும் சலவை செய்யப்பட பணத்தில் ஒரு சிறு பகுதியாகத்தான் இத்தொகை இருக்க முடியும்.