Load Image
Advertisement

இண்டியா கூட்டணி சார்பில் போபாலில் பொதுக்கூட்டம்!: 3 மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் இழுபறி

INDIA Announces Its First Joint Rally, Will Be Held In Bhopal இண்டியா கூட்டணி சார்பில் போபாலில் பொதுக்கூட்டம்!: 3 மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் இழுபறி
ADVERTISEMENT
புதுடில்லி: எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணி சார்பில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்னைகளை முன்வைத்து, கூட்டாக பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேசத்தின் போபாலில் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இதை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு செய்வதில் புதுடில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இழுபறி நிலவுகிறது.

லோக்சபாவுக்கு, அடுத்தாண்டு மத்தியில் தேர்தல் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக, 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

பீஹாரின் பாட்னா, கர்நாடகாவின் பெங்களூரு, மஹாராஷ்டிராவின் மும்பையில் என, மூன்று கூட்டங்களை இந்தக் கூட்டணி நடத்திஉள்ளது. மும்பையில் நடந்த கூட்டத்தின்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக, பல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை நடைமுறைபடுத்த 14 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் கூட்டம்



இந்த ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் புதுடில்லி வீட்டில் நேற்று நடந்தது. இதில், 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானதால், திரிணமுல் காங்.,கின் அபிஷேக் பானர்ஜி பங்கேற்கவில்லை. இந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கான பிரதிநிதியை, மார்க்., கம்யூ., இதுவரை அறிவிக்கவில்லை. வரும் 16 - 17ல் நடக்கும் பொலிட்பீரோ கூட்டத்தில், பிரதிநிதியை முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது.

நேற்று நடந்த, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், தேசியவாத காங்.,கின் சரத் பவார், காங்கிரசின் கே.சி.வேணுகோபால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், இந்திய கம்யூ.,வின் டி.ராஜா, சமாஜ்வாதியின் ஜாவத் அலி கான், தி.மு.க.,வின் பாலு, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ். ஆம் ஆத்மியின் ராகவ் சந்தா, ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா, தேசிய மாநாட்டுக் கட்சியின் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முப்தி, உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே சிவசேனாவின் சஞ்சய் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின், கூட்டறிக்கையை வெளியிட்டு காங்.,கின் வேணுகோபால் கூறியதாவது:ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டு பொதுக் கூட்டங்களை நாடு முழுதும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, மத்திய பிரதேசத்தின் போபாலில், அக்., முதல் வாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் நடத்தப்படும். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் ஊழல்கள், சாதிவாரி கணக்கெடுப்பு ஆகிய பிரச்னைகளை முன்வைத்து இந்தக் கூட்டத்தில் பேசப்படும்.

தொகுதி பங்கீடு



தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுக்களை விரைவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகள் இது தொடர்பாக, அந்தந்த மாநிலத்தில் பேச்சு நடத்தி, மிக விரைவில் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.எந்தெந்த, 'டிவி'க்களின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நடத்தும் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்பதை, கூட்டணியின் ஊடக விவகாரம் தொடர்பான துணைக் குழுவே முடிவு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மஹாராஷ்டிரா, தமிழகம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள புதுடில்லி, பஞ்சாப் மற்றும் திரிணமுல் காங்., ஆட்சியில் உள்ள மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சில் இழுபறி நிலவி வருகிறது.

புதுடில்லி மற்றும் பஞ்சாபில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே பிரச்னை உள்ளது.மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்.,குக்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., ஏற்கனவே தனியாக கூட்டணி வைத்துள்ளன. இதனால், இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு ஏற்படுவதில் பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது.

சனாதன விவகாரம்!



சனாதன தர்மம் தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் அந்தக் கட்சியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்களும் தொடர்ந்து சர்ச்சை கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்யூனிஸ்ட் கிண்டல்

அமலாக்கத் துறை விசாரணைக்கு சென்றதால், திரிணமுல் காங்., தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 'அபிஷேக் பானர்ஜிக்கான இருக்கை காலியாக வைக்கப்படும்' என, உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.\இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலர் முகமது சலீம் நேற்று கூறியதாவது:ராமாயணத்தில், ராமருக்கு பதிலாக, அவரது பாதுகைகள் வைத்து ஆட்சி நடத்தியதாக கூறப்படுகிறது. நல்லவேளை அதுபோல், அபிஷேக் பானர்ஜியின் காலணிகளை, அவருக்கான இருக்கையில் வைக்காமல் இருந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (18)

  • குமரி குருவி -

    கடைசியில் சீனாவில் நடத்துங்க

  • ராமகிருஷ்ணன் -

    புள்ளி இந்தியா புள்ளிகள் கூட்டங்களில் என்ன பேச்சு பேசுவார்கள்? . நீங்கள் இதுவரை எவ்வளவு கோடிகளை சுருட்டி பதுக்கி வைத்திருக்கிறீர்கள். இனிமேல் ஆட்சியில் வந்தவுடன் எப்படி புதுசு புதுசா சுருட்டுவது என்று கலந்தாய்வு செய்வார்கள். ஏனெனில் இந்த களவாணி கும்பல் மேல் எத்தனை வழக்குகள் உள்ளன என்று பாருங்கள்.

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    முன்பெல்லாம் ராயல் சர்க்கஸ் என்ற நிறுவனம் மதுரை சேலம் போன்ற நகரங்களில் கூடாரம் அடித்து தங்கி ஒரு மாதம் கோமாளிகள் மற்றும் பிறநபர்களை வைத்து வித்தை காட்டுவார்கள் அதுபோல இந்த புள்ளிராஜாக்கள் ஒவ்வொரு நகரமாக கூட்டம் போடுகிறார்கள். மோடி என்னும் ஒற்றை சிங்கத்தை எதிர்க்க முயலும் இருப்பத்திஆறு கட்சிகள்.

  • V.Saminathan. - ,

    கெஜ்ரிவால் கட்சிக்காரன் து மு கவை நேரடியா குற்றம் சொல்லியாச்சு-கழன்றுடலாம்,அடுத்தது மம்தா-தாக்ரே அன்கோ.இந்தமூன்றுகட்ணிகளும் எந்தக் கூட்டணியிலும்.நிலையாக இராது.

  • Rajasekaran - Chennai,இந்தியா

    தி.மு.க.கையிலெடுத்துள்ள சனாதன ஒழிப்பு பற்றிய கருத்துக்களையும் பொது வெளியில் பேசியவற்றையும் இந்த கூட்டணி ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று முடிவெடுத்து அதற்கு ஏற்ப ஒரு மனதாக தீர்மானம் இயற்றி பொதுவெளியில் தெரியப்படுத்த வேண்டும் அப்போதுதான் ஒரு கொள்கையில் இவர்கள் அனைவரும் ஒன்றாய் பயணிக்கிறார்கள் என்று மக்கள் நம்பி , தகுந்த முடியவை எடுத்து இவர்கள் எதிர் காலத்தை நிர்ணயிப்பார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்