வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தின் ஒரு பகுதியில், ரூ.168 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது; ரூ.40 கோடி வரை செலவழிக்கப்பட்டு, கட்டுமானத்தின் ஒரு பகுதி முடிக்கப்பட்டது. இதில், ரூ.30 கோடி வரை மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவிடப்பட்டிருக்கிறது.
கட்டுமானம் முடக்கம்
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு தரப்பில் ஒதுக்க வேண்டிய பங்களிப்பு தொகையை விடுவிக்காமல், நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி முடங்கியிருக்கிறது.
கவுன்சிலர்கள் காரசாரம்
இதற்கிடையே, மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில், வெள்ளலுார் பஸ் ஸ்டாண்டை கிடப்பில் போட்டிருப்பது தொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பதிலளிக்கையில், ''மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள 'ரைட்ஸ்' என்கிற அமைப்பு, சாலை போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. அந்நிறுவனத்தின் அறிக்கை மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அரசின் முடிவே இறுதியானது,'' என தெரிவித்திருந்தார். அந்த அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.
மீட்க உருவானது குழு
இச்சூழலில், வெள்ளலுாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை மீண்டும் துவக்கக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளனர்.
இதற்காக, வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழு ஏற்படுத்தியுள்ளனர். இதன் ஆலோசனை கூட்டம், போத்தனுாரில் உள்ள ஒரு மண்டபத்தில் இன்று மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; இதற்கு நேற்று போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும், ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் நடத்தி, நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து, அரசின் கவனத்துக்கு கோரிக்கையை அனுப்ப, முடிவு செய்திருக்கின்றனர்.
வெள்ளலுார் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழுவினர் (கட்சி சார்பற்றது) கூறுகையில், 'நாங்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள். இப்பகுதியில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டால், கோவையின் தெற்கு பகுதி வளர்ச்சி அடையும். ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு, கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது; இத்திட்டத்தை முடக்கி வைக்காமல், தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதே, எங்களது கோரிக்கை' என்றனர்.
வாசகர் கருத்து (2)
வெள்ளலூர் பகுதியில் துவக்கப்பட்ட. பேருந்து நிலைய வேலைகள் இரண்டு ஆண்டுகள் கிடப்பில் இருக்க காரணமே சிலரின் சுயநலம் தான் தங்களுடைய சுயநலத்திற்காக மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் போக்கு கண்டிக்க வேண்டியதுதான்
மக்கள் வரி பணம் வீணடிக்க படுகிறது. பொது போக்குவரத்து நகரின் மத்திய பகுதிக்கு சென்றால் நல்லது. A country can become when rich people use public transport tem