Load Image
Advertisement

11 மாவட்டம்; 11 ஒன்றியங்களில் வாசிப்பு இயக்கம்: மீண்டும் புத்துயிர் பெறும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம்

 11 District; Reading Movement in 11 Unions: Reviving Book Reading Habits    11 மாவட்டம்; 11 ஒன்றியங்களில் வாசிப்பு இயக்கம்: மீண்டும் புத்துயிர் பெறும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம்
ADVERTISEMENT
பள்ளி குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில், 'வாசிப்பு இயக்கம்' 11 மாவட்டங்கள்; 11 ஒன்றியங்கள் என துவங்கி விரிவடைந்து வருகிறது.

பாடப்புத்தகங்களை தாண்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தகங்கள் வாசிப்பு திறன் படிப்படியாக குறைகிறது. பெரும்பாலான பள்ளிகளில் நுாலகங்கள் செயல்படாமலும், நுாலகத்துக்கான வகுப்பை வேறு பாட ஆசிரியர் பயன்படுத்தும் நிலையே நீடிக்கிறது; மாணவர்கள் நாளிதழ்கள் கூட படிப்பது குறைகிறது.

அதற்கு மாறாக ஆன்லைன் வகுப்பு, வீடியோக்கள், அனிமேஷன், இன்னும் பிற வழிகளில் 'வாசிப்பு, படிப்பு' இன்றி 'பார்த்தால், கேட்டால் போதும்' என்ற வட்டத்துக்குள் கொண்டு செல்கின்றனர்.

இதனால், பள்ளி குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லித்தரும் பாடம் தவிர, வகுப்பறைக்கு வெளியே கொட்டிக்கிடக்கும் நல்ல விஷயங்களை தாங்களே வாசித்தும், உணர்ந்தும் அறிய வாய்ப்பின்றி போகிறது.

இதற்கு மாற்றாக பள்ளி கல்வித்துறை சார்பில், 'வாசிப்பு இயக்கத்தை' உருவாக்கி, '11 மாவட்டங்கள்; 11 ஒன்றியங்கள்' என, முதற்கட்டமாக துவங்கினர். கோவை, ஈரோடு என, 11 மாவட்டங்களில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியத்தில், 100 பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை முதலில் துவங்கினர். அங்கு மாணவர்களிடம் வாசிப்பு வசப்பட்டதால், இம்மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட அளவில் விரிவடைய முயன்றுள்ளார்.

இதுபற்றி, கல்வி செயற்பாட்டாளர் சுடர் நடராஜ் கூறியதாவது:

புத்தகங்கள் வாசிப்பது என்பது, மாணவர்களை துாண்டும் வகையில் இருக்க வேண்டும். பெரிய புத்தகமாக, உயர்ந்த பொருட்கள் கொண்டதாக இருந்தால் குழந்தைகள் படிக்க மாட்டார்கள். எனவே, ஒரு புத்தகத்தில், ஒரு கதை இருக்க வேண்டும். இதன்படி, 1 முதல், பிளஸ் 2 வரையிலானவர்களை, 'நுழை, நட, ஓடு, பற' என, 4 நிலைகளில் புத்தகங்களை உருவாக்கி பிரித்துள்ளனர்.

இதன்படி, 1 முதல், 3ம் வகுப்பு மாணவர்கள் 'நுழை', 4 முதல், 5ம் வகுப்பு வரை, 'நட', 6 முதல், 8 ம் வகுப்பு வரை 'ஓடு', உயர், மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு 'பற' என்ற அடிப்படையில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, வாசிக்க செய்கின்றனர்.

'நுழை' நிலையில், முக்கால் பகுதி படமும்; கால் பகுதி எழுத்தும், 'நட' நிலையில் அரை பகுதி படம்; அரை பகுதி எழுத்தும், 'ஓடு' நிலையில் முக்கால் பகுதி எழுத்தும்; கால் பகுதி படமும், 'பற' நிலையில் முழுவதும் எழுத்தாக புத்தகங்கள் அமைந்துள்ளன.

சிறிய சொற்கள், குறைந்த வாக்கியங்கள், ஈர்க்கும் சொல், சந்தோஷப்படுத்தும் கதையுடன் புத்தகம் அமைகிறது. தற்போதைய நிலையில், 53 புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் மாடசாமி, உதயசங்கர், வாசுகி, சரிதாஜோ, வனிதாமணி போன்றோர் எழுதி, வடிவமைத்துள்ளனர். 90 லட்சம் புத்தகங்கள் அச்சாகி, பள்ளிகளுக்கு சென்றுள்ளன. 5 பள்ளிகளுக்கு ஒரு கருத்தாளர் என தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது பாடம் தொடர்பாக பணிச்சுமை இருக்கும் என்பதால், இல்லம் தேடி கல்வி பணியாளர்களில் முனைப்பாக உள்ளவர்கள், தினமும், 2 பள்ளி என செல்வர்.

நுாலக வகுப்பில், இந்நுால்களை வாசிக்க செய்தும், குழந்தைகளுக்கு வாசிக்கும் ஆர்வத்தை துாண்டும்படி அந்நேரத்தை பயன்படுத்துவர்.

முதற்கட்டமாக, 11 மாவட்டத்தில், 11 ஒன்றியத்தில் துவங்கிய வாசிப்பு இயக்கம், தற்போது மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாடப்புத்தகங்களுக்கு அப்பால், சிறந்த நுால்களை மாணவர்கள் வாசிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. மிக விரைவில் வாசிப்பு இயக்கம், மாணவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.


இவ்வாறு கூறினார்.


-நமது நிருபர்-


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement