ஒவ்வொருவரின் மனதையும் பதைபதைக்க வைத்திருக்கும். கையெடுத்து கும்பிட்ட நபர்களின் கையை வெட்டிய கொடுமையை, மிருகம் கூட செய்திருக்காது.
வெட்டியவர்களை மிருகங்கள் என்று சொன்னால்,
'நாங்கள், இப்படியா மது அருந்தி விட்டு, எங்கள் இனத்தையே அழிக்கிறோம்? எனவே, அந்த மாதிரி அரக்கக் குணம் படைத்தவர்களை, எங்களோடு ஒப்பிட்டு எழுதாதே' என மிருகங்கள் கூட, என் மீது கோபப்படலாம்.
அதனால், அரக்க குணம் படைத்தவர்கள் என்றே சொல்லுகிறேன். 'அய்யோ... அரக்கர்கள் எல்லாம் நல்லவர்கள்.. இந்த வந்தேறி ஆரியர்கள் தான், அரக்கர்களை வில்லனாக
கற்பிதம் செய்து விட்டனர்.
'அதனால், அரக்க குணம் என்று அவர்களைப் பற்றி தவறாக எழுதி விட்டார்' என்றும், என் கட்டுரையை படித்து விட்டு, என் மீது யுத்தம் தொடுக்க, யாராவது புத்திசாலிகள் முன்வரலாம்.
காலால் மிதிக்க கூடாது
ஆனால், காலம் காலமாக நல்லது செய்பவர்களை, தெய்வம் போன்றவர்கள் என்றும், கொடூர குணம் படைத்தவர்களை, அரக்கன் போன்றவர்கள் என்றும், சொல்லும் ஒரு பாமரன்தான் நான். அதனால், மேற்காணும் குணம் படைத்தவர்களை, அரக்கர்கள் என்றே சொல்லுகிறேன்.மேற்காணும் செய்தியை நான் படித்தது, சிறு வயதில்
பள்ளிக்கூடத்தில் படித்தபோது. எனக்கு மூன்றாம் வகுப்பில், காந்திமதி என்ற டீச்சர் வகுப்பு ஆசிரியராக இருந்தார். அப்போது, தரையோடு
இருக்கும் பெஞ்சு தான்
பிள்ளைகள் உட்கார்ந்து
படிப்பதற்கு வகுப்பறையில் போட்டிருப்பர்.
கரும்பலகையில் பாடத்தை எழுதிய டீச்சர், நாங்களெல்லாம் எப்படி எழுதுகிறோம் என்பதை கவனிக்க, ஒவ்வொரு பெஞ்சாக வருவார். அப்படி வரும்போது, கவனிக்காமல் யாருடைய கையின் மீதோ அல்லது காலின் மீதோ, அவர் கால் பட்டுவிட்டால், 'ஸாரிப்பா' என்று மதித்த இடத்தை தொட்டு, கண்ணில் ஒற்றிக் கொள்வார்.
அதாவது தெரியாமல், அவர்கள் மீது தன் கால் பட்டதற்கு மன்னிப்பு கேட்பார். 'டீச்சர் நாங்க சின்னப் பிள்ளைங்க டீச்சர்... எதுக்கு எங்கக்கிட்ட ஸாரி கேட்குறீங்க?' என்று சொன்னால், 'இல்லப்பா யாரையும் காலால் மிதிக்க கூடாது. அது தப்புப்பா' என்று சொல்வார்.
அவர்களுக்கு இந்த பழக்கத்தை சொல்லிக் கொடுத்தது, நிச்சயம் சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர்கள் பெற்றோர்களாகதான் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமும் குடியிருக்கிறது; அரக்கனும் குடியிருக்கிறான். இந்த இரண்டில், எந்த குணத்தை வெளிப்படுகிறது என்பதை, அவனது சூழ்நிலைகள் தான் தீர்மானிக்கிறது.
மேலே சொன்ன என் ஆசிரியை போன்றவர்களின் நிழலில் வளரும்போது,
யாருக்கும் கெடுதல் பண்ணக் கூடாது என்ற எண்ணம், நம் மனதில் ஆல மர விதையாக ஊன்றப்படும்.
* அதற்குப் பதிலாக, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மது விற்பனையை எப்படி உயர்த்தலாம்?
* மதுப் பிரியர்கள் மதியம் வரை மது கிடைக்காமல் வாடுகின்றனரே; அவர்களுக்காக காலையிலேயே கடை திறக்கலாமா?
* பெரிய பாட்டில் வாங்க, பணம் இல்லாமல் சிரமப்
படுவரே, அவர்களது மனம் வாடாமல், குறைந்த பணத்துக்கு சிறிய பாட்டிலில்
விற்கலாமா?
இப்படி மதுவும் மதுசார்ந்த விஷயங்களுக்காகவும், பெரிதும் மெனக்கெடும் அரசாங்கத்தின் நிழலில் வளரும் இளைய குருத்துக்கள் எப்படி இருப்பர்?
நொடிகளுக்கொரு மரணம்
தோட்டத்தில் குடிப்பதை, கும்பிட்டு நிறுத்தக் கோரிய கைகளை வெட்டி படுகொலைதான் செய்வர். பள்ளிக்கூடத்தில் கிண்டல் செய்த பையன், வகுப்பு ஆசிரியரிடம் புகார் சொன்னால், அவனையும் வெட்டி தான் போடுவர். அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்கள் வளரும் சூழ்நிலை அப்படி உள்ளது.இன்று, இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில், தமிழகத்தில் தான் அதிகம். சாலை விபத்துகளில் நொடிகளுக்கொரு மரணம். அதற்கு காரணம் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது. சாலைகளை
விடுங்கள்... வீடுகளில் நடக்கும் பிரச்னைகளில், மதுதானே பிரதானமாயிருக்கின்றது.
பெற்ற தகப்பனை குடிக்காமல் இருக்க வேண்டி, தற்கொலை செய்த மகனை, இந்த நாடு இதுவரை பார்த்திருக்கிறதா... இப்போது பார்க்கிறது. 'என் அப்பா இனியாவது திருந்தட்டும்' என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்யும் செய்திகளைப்
படிக்கும்போது, மனம் பதை பதைக்கிறதே.
'நீட்' தேர்வால் மரணம் என்று அலறும் போராளிகளில் ஒருத்தர் கூட, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராடவில்லையே.
போன ஆட்சியில் மதுக்கு எதிராக போராடிய, பேசிய, பாடிய சில நபர்களும், இன்று ஆழ்ந்த, நீண்ட நித்திரையில் ஆழ்ந்து விட்டனர் என நினைக்கிறேன்.
'எங்கள் அய்யன்... எங்கள் மூத்தோன்... எங்கள் ஆசான்' என, மேடைக்கு மேடை வள்ளுவனை முழங்கும் அரசியல்வாதிகள் எல்லாம், அவர் சொன்ன கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்துக்கு உண்டான பொருள் பற்றி, சற்றேனும் சிந்தித்திருந்தால், 133 அடி சிலை வைத்த கையோடு, 5,000த்துக்கும்
அதிகமான மதுக்கடைகளை மூடியிருப்பர்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சமூகத்தை சீரழிப்பதாக சனாதனத்தை அழிக்கச் சொல்பவர்கள்... இதோ கண் முன்னே தலைமுறைகளே தறுதலைகளாகிக் கொண்டிருக்கின்றனரே, அதை அழிப்பதைப் பற்றி கொஞ்சமேனும் யோசித்திருக்க வேண்டாமா?
போதைக்கு அடிமை
பள்ளியின் சீருடையைக் கூட மாற்றாமல், மதுக்கடைக்கு போகிறார்களே இளம் சிறார்கள்... நாளை இன்னொரு பிரஜ்ஞானந்தா மாதிரி செஸ் விளையாட்டிலோ, நீரவ் சோப்ரா மாதிரி ஈட்டி எறிதலிலோ, உலக அளவில் பெயர் வாங்கி, அவர்களது போட்டோ பத்திரிகையில் இடம்பெறுவதற்குப் பதில், குற்றவாளிகள் பட்டியலில் அல்லவா இடம்பெறுகிறது?
இப்படியே இளம் தளிர்களை போதைக்கு அடிமையாக்கி விட்டு, அவர்களது மூளையை மழுங்க வைத்து விட்டு, எதை சாதிக்கப் போகிறார்கள், நம்மை ஆட்சி செய்துக் கொண்டு இருப்பவர்கள்.
நாங்கள் மது விற்பனை செய்வதற்கு காரணம், மக்கள் குடிக்கு பழக்கமாகி விட்டார்கள் என்பதாக, அரிய காரணம் சொல்லும் அறிவாளிகளே, கல்வியில் ஒரு குறிக்கோள்... தொழில் வளத்தில் வளர்ச்சிப் புள்ளி... விவசாயத்தில் வியத்தகு முன்னேற்றம்... விளைந்த வெண்டைக்காய்களை விலைபோகாமல் வீதியில் கொட்டிய விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க, ஒரு நெடுங்காலத் திட்டம் என்று ஏதுமில்லாமல், உதிரத்திலும் உணர்விலும் உள்ளூறிப் போயிருக்கும் தர்மங்களை ஒழிக்க மட்டும், ஏனித்தனை அவசரம் காட்டுகிறீர்கள்?
நாட்டில் அநீதியும், தீமைகளும், கொடுமைகளும்
அதிகமாகும்போது தான் ஆன்மிகமும் சனாதனமும் விழித்து, நம்மை காக்க
ஆரம்பிக்கின்றன.
ஆண்டுதோறும் சாலை வழியே பாதயாத்திரையாக, பக்தர்கள் அதிகமாக நடப்பதன் காரணம் அதிகமாகிக் கொண்டிருப்பது, வேறொன்றுமில்லை மக்களே... நாளுக்கு நாள்
நடக்கும் வன்முறைகளும், சொல்லொண்ணா மனத்
துயரங்களும் தான்.
மக்களுக்கும் சமூகத்திற்கும் அழிவையும் அவப்பெயரையும் கொடுக்கும் எந்த ஒன்றையும் ஒழிப்பதில், யாருக்கும் எந்த கருத்து வேற்றுமையும் இல்லை. ஆனால், அழிக்க வேண்டியது எது என்பதில் இருக்கிறது பிரச்னை.
இந்த தேசத்தின் பண்பாட்டை, நியாயங்களை, தொன்மங்களை அழிக்கவோ, நிந்திக்கவோ யாரேனும் முயல்வர்கள் எனில், அதை எதிர்கொள்ள, தடுக்க, பல கோடி மக்கள் திரள்வர்.
மதுவை ஆறாக ஓட விட்டு...
ஆனால், இந்த மாநிலத்தில் சந்து பொந்துகளில் எல்லாம் மதுவை ஆறாக ஓட விட்டு, தாலி இழந்து வாழும் பெண்களின் கண்ணீருக்கு காரணமான மதுவை அழிப்பதாக, யார் உறுதியாக நின்றாலும், குடிக்கு அடிமையான ஒரு சிலரைத் தவிர, இந்த மாநிலமே கூடி நிற்கும்.
மதுவோடு, ஒவ்வொரு வீட்டிலும் வறுமை, வேலையின்மை, விஷம்போல் ஏறும் விலைவாசி, அடிக்கடி நடக்கும் மின் கட்டண அதிகரிப்பு, பத்திரப் பதிவு கட்டணம் அதிகரிப்பு, இப்படி அழிக்கப்பட வேண்டியவைகள் ஏராளம் இருக்கிறது. இவற்றையெல்லாம் அழித்து விட்டு, இறுதியில் சனாதனத்தை அழிக்க வாருங்கள்.
வானம் ஏறி வைகுண்டம் அப்பறம் போகலாம்... காலுக்கு கீழ் இருக்கும் பூமியை இப்போது காப்பாற்றலாம். கிட்டத்தட்ட தமிழகத்தின் வீடுகளில், ஒருவரேனும் குடிப்பவராக மாறிக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், முதலில் ஒழிக்க வேண்டியது எது என்பதை, உங்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
அழகர்
சமூக ஆர்வலர்
வாசகர் கருத்து (4)
டாஸ்மாக் சரக்கு விற்பனையால் அரசுக்கு வருமானம். உங்கள் சனாதனத்தால் என்ன வருமானம் என்று கேட்கும் மூதேவிகளிடம் எதை சொல்லியும் புரியாது? அழிவது என்று முடிவு எடுத்து விட்டார்கள். அழிந்து போகட்டும் என்று நாமும் விட்டுவிடவேண்டும். நாயின் வாலை நிமிர்த்தமுடியுமா?
அய்யா அய்யா இவ்வளவு தெளிவா எழுதிடீங்களே , ஆனா படிச்சு முன்னேறாத மூடர்களிடம், எதுவானாலும் விற்பனை என்று அலையும் கொடிய வியாபாரிகளிடம் அதுவும் அவர்களை ஆட்சிக்கட்டிலில் இறுமாப்புடன் உட்கார்ந்து இருக்கும் வேளையில் இதனை சொல்லுகிறீர்கள்
இதைத்தான் அன்றைக்கே தாலி அகற்றும் போராட்டம் என சூசகமாக, கூட்டணி கட்சி சூரமணி வெளிப்படையாக போராட்டம் நடத்தி காண்பித்தார்.
சிந்திக்க வேண்டிய ஒன்று. ஆனால் மக்களை இந்த அரசியல்வாதிகள் சிந்திக்க விடுவதில்லை. மக்கள் சிந்திக்க ஆரம்பித்தனர் என்றால் இவர்களால் தங்கள் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க முடியாது. இலவசங்களைக் குறைத்தாலே மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பெருக்க முடியும். மது கடைகளால் வரும் வருமானத்தை ஈடு கட்ட ஆயிரம் நல்ல வழிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை செயல்படுத்தினால் இவர்களால் சம்பாதிக்க முடியாதே. திருவள்ளுவர் எல்லாம் இவர்கள் வசதிக்கு. அவரை அப்படியே பின் பற்றி இவர்களால் தொழில் நடத்த முடியாது. மக்கள் உணர்ந்து , தெளிந்து என்றைக்கு நியாயத்துக்காக போராடுகிறார்களோ அன்றுதான் இந்த சீரழிவை சரி செய்ய முடியும். அப்படிப்பட்ட கூட்டத்தை வழி நடத்த ஒரு நல்ல தலைவனை தமிழகம் எதிர் நோக்கி உள்ளது.