கடந்த, 2006 - 11ம் ஆண்டில், தி.மு.க., அமைச்சரவையில், வீட்டுவசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தின் கீழ், வீட்டுவசதி வாரிய நிலத்தை, 74 லட்சம் ரூபாய் விலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த இன்ஸ்பெக்டர் கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக, பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக, 2012ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இவ்வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்து, இந்தாண்டு மார்ச்சில், சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில், தாமாக முன்வந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இசை நாற்காலி
பெரியசாமிக்கு எதிரான வழக்கில், 2013 மார்ச்சில், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர, சபாநாயகர் ஒப்புதல் வழங்கி உள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், ஆகஸ்டில் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. வழக்கில் இருந்து விடுவிக்க க்கோரி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கணேசன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், மேல் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை மனுத் தாக்கல் செய்தது. அதை, நீதிமன்றம் ஏற்றது. கூடுதல் குற்றப்பத்திரிகை, 2014 ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய கணேசன் மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. பின், வழக்கில் இருந்து விடுவிக்க, மற்றொருவரான கவிதா மனுத் தாக்கல் செய்தார். 10 முறை விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. 2016 ஜனவரியில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில், சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கணேசன் மனுத் தாக்கல் செய்தார்.
பெரியசாமி மனு தாக்கல்
கடந்த, 2016 பிப்ரவரியில், வழக்கில் இருந்து விடுவிக்க, பெரியசாமி மனுத் தாக்கல் செய்தார். மனுவை, 2016 ஜூலையில் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இசை நாற்காலி போல, ஒருவர் பின் ஒருவராக, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ததில், 3 ஆண்டுகள் முடிந்தன. பின், காட்சி, உயர் நீதிமன்றத்துக்கு மாறியது.
சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பெரியசாமி மனுத் தாக்கல் செய்தார். தடை உத்தரவு வழங்கவில்லை என்றாலும், வழக்கு ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு வரவழைத்து உத்தரவிடப்பட்டது. இதனால், 2019 ஜூன் வரை, சிறப்பு நீதிமன்றத்தில், 34 முறை விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து, 2019 அக்டோபரில் வழக்கு ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பெரியசாமி வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டு பதிவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கணேசனும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு, 2020 மார்ச்சில் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கொரோனாவும் வந்தது. விசாரணை தள்ளி போனது. 2021 ஜூன் வரை, இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டது. 2021 மே மாதத்தில், தி.மு.க., ஆட்சியை பிடித்தது. மீண்டும் அமைச்சரானார் பெரியசாமி.
தனபாலுக்கு சம்மன்
உயர் நீதிமன்றத்தில் பெரியசாமி தாக்கல் செய்திருந்த, இரண்டு மனுக்களும் கடந்த ஆண்டு நவம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடும், டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கு தொடர அனுமதி வழங்கிய, முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு சம்மன் அனுப்பியது. அவரும் இந்தாண்டு பிப்ரவரியில் ஆஜரானார்.
வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில், பிப்ரவரி 21ல் அமைச்சர் பெரியசாமி மனுத் தாக்கல் செய்தார். வழக்கு தொடர அனுமதி வழங்க, சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்றும், கவர்னருக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டது.
இதே வாதம், முதலில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதும், பெரியசாமி தரப்பில் எழுப்பப்பட்டிருந்தது. அதை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. அந்த உத்தரவை, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
அதிர்ச்சி அளித்த உத்தரவு
எனவே, ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட முகாந்திரங்களை வைத்து, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் பெரியசாமி மனுத் தாக்கல் செய்து, நீதிமன்ற நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்துள்ளார். ஆனால், முன்னர் போல இல்லாமல், இந்த முறை அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவரது மனுவை ஏற்று, வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விடுவிக்கக் கோரிய மனுவை ஏற்றது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.
லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ஏற்கனவே விடுவிக்கக் கோரிய மனு தாக்கல் செய்தது பற்றியோ, அதில் எழுப்பிய முகாந்திரம், உச்ச நீதிமன்றம் வரை பிறப்பித்த உத்தரவு பற்றியோ, ஒரு வார்த்தை கூட இல்லை. ஏனென்றால், அப்போது பெரியசாமி, அமைச்சராகி இருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், ஒரே அணியில் சேர்ந்து, பொதுவான இலக்கை அடைய பணியாற்றி உள்ளனர்.
மின்னல் வேகம்
இந்தாண்டு பிப்ரவரி 21ல், வழக்கில் இருந்து விடுவிக்க மனுத் தாக்கல் செய்கிறார்; மார்ச் 4ல், அரசு குற்றவியல் வழக்கறிஞர் பதில் மனுத் தாக்கல் செய்கிறார். மார்ச் 8ல், உத்தரவுக்காக தள்ளி வைக்கப்படுகிறது. மார்ச் 17ல், மனுவை ஏற்று, வழக்கில் இருந்து பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பிக்கிறது.
வழக்கு தொடர சபாநாயகர் ஒப்புதல் வழங்கியது செல்லாது; கவர்னர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற ஒரே முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நத்தையை விட மோசமான வேகத்தில் சென்ற வழக்கு, திடீரென வளர்ச்சி பெற்று, மின்னல் வேகத்தில் முடிந்து விட்டது.
வீட்டுமனை ஒதுக்கீடு பெற நடந்த சதி திட்டம், 22 நாட்கள் என்றால், அரசு தரப்பு, எதிர்தரப்பு, நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால், 24 நாட்களில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆவணங்களை பரிசீலித்தால், நீதித்துறையின் தார்மீக நெறிமுறையை சிறப்பு நீதிமன்றம் காற்றில் பறக்க விட்டுள்ளது தெரிகிறது.
முன்னர் எந்த முகாந்திரத்தை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததோ, அதை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததோ, தற்போது அதே முகாந்திரத்தை ஏற்று, வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உள்ளது.
கண்டிக்கக்தக்க நடத்தை
சிறப்பு நீதிமன்றத்தின் நடத்தை கண்டிக்கத்தக்கது; சந்தேகத்திற்குரியது. நீதித்துறை சமன்பாடு கருதி, மேற்கொண்டு எதையும் கூற விரும்பவில்லை. சிறப்பு நீதிமன்ற உத்தரவில், சட்ட ரீதியான தவறுகள், சட்ட விரோதங்கள் உள்ளன
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வகை செய்யும் அதிகாரத்தை பிரயோகிக்கவில்லை என்றால், அரசியலமைப்பு சட்ட கடமையில் இருந்து தவறியதாகி விடும். எனவே, இவ்வழக்கில் அக்டோபர், 12க்குள் பதில் அளிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் பெரியசாமிக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை பின்பற்றும் நடைமுறைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. ஊழல் வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை. நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது, நீதித்துறையை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதால், என்னை வில்லனாக பார்க்கின்றனர். தனிப்பட்ட முறையில், இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை. - ஆனந்த் வெங்கடேஷ்,உயர் நீதிமன்ற நீதிபதி.
நீதிபதி தன் உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது: அமைச்சர் பெரியசாமியை, ஒரே முகாந்திரத்தின் அடிப்படையில் வழக்கில் இருந்து விடுவித்ததால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்தது மட்டுமின்றி, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், நீதித்துறையின் மனசாட்சியையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு பற்றி, சிறப்பு நீதிமன்றத்துக்கு தெரிந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றியும் தெரியாது என்று கூற முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற உதவி பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். அதை சிறப்பு நீதிமன்றம் பெற்றிருப்பதும் தெளிவாகிறது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பற்றி தெரிவித்தும், வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவும், வழக்கில் இருந்து விடுவிக்க வகை செய்யாத பிரிவின் கீழ், விடுவிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
இன்னும் இந்த காலத்திலும் இவ்வளவு நேர்மையான நீதிபதி இருக்கிறார் என்பதே பெரும் சந்தோஷம்... மத்திய அரசு இவருக்கு அதிக பட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும்...
நீதிபதியே கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கருத்து சொல்லும் அளவிற்கு நீதித்துறை வந்து விட்டது என்றால் நீதிபதி பதவிகள் திராவிடம் போட்ட பிச்சை என்ற கருத்துக்கு அருகே அல்லவா இருக்கிறது கடவுள் மறுப்பாளர்கள் போட்ட பிச்சை எங்கே கொண்டு வந்து விட்டு இருக்கிறது பாருங்கள்
சட்ட விதிகளை மதிக்காமல் தன்னிச்சையாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு குற்றவியல் நடைமுறை படி தக்கபிரிவுகளின் கீழ் அதிக பட்ச தண்டனை வழங்கப்படவேண்டும். இது அனைத்து நிலை நீதிபதிகளுக்கும் பாடமாக அமையவேண்டும்.
தீர்ப்பு வழங்கிய நீதி பதவி நீக்கம் செய்து அவருக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பயன்கள் ரத்து செய்ய வேண்டும்
First take action against special court judges. They are the culprit for releasing accused. Instead of blaming accused clean up the judiciary.