சென்னைக்கு 23: மதுரைக்கு 10; கோவைக்கு வெறும் ரெண்டு! பிட் லைன் இல்லாததால் சிக்கலாகும் ரயில் பராமரிப்பு!
தெற்கு ரயில்வேயில் மூன்றாவது அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷனாக கோவை சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்தில் 45 சதவீத வருவாயை கோவை மட்டுமே தருகிறது.
தினமும் 130 ரயில் இயக்கங்களை கையாளும் கோவை சந்திப்பு, கடந்த ஆண்டில் ஒரு கோடி பயணிகளைக் கையாண்டு, சாதனை படைத்துள்ளது. ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய் தரும் 'ஏ 1' அந்தஸ்திலும் உள்ளது.

இருப்பினும், தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக வளர்ந்துள்ள கோவையின் ரயில் தேவைக்கேற்ப, இந்த சந்திப்பு மேம்படுத்தப்படவில்லை; கூடுதல் ரயில்களும் இயக்கப்படவில்லை.
இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், கோவை நகரில் ரயில்களைப் பராமரிப்பதற்கான 'பிட் லைன்'கள் எண்ணிக்கை, மிகக்குறைவாக இருப்பதே பிரதானக் காரணமென்று தெரியவந்துள்ளது.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பல்வேறு கோட்டங்களிலும், ரயில் பராமரிப்பு மற்றும் நிறுத்துவதற்கான 'பிட் லைன்'கள் மற்றும் 'ஸ்டேபிள் லைன்'கள் இருக்கின்றன என்பது பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், தகவல் பெறப்பட்டுள்ளது.
அதில், சென்னை கோட்டத்தில் 23, திருவனந்தபுரம் கோட்டத்தில் 15, மதுரையில் 10 'பிட் லைன்'கள் இருப்பது தெரியவந்துள்ளது.
திருச்சி, சேலம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில், தலா நான்கு 'பிட் லைன்'கள் மட்டுமே உள்ளன. பாலக்காடு கோட்டத்தில் இப்போது, மேலும் இரண்டு 'பிட் லைன்'கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் சேலம் கோட்டத்தில், கோவை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில், தலா இரண்டு 'பிட் லைன்'கள் மட்டுமே இருப்பதால், ரயில்கள் பராமரிப்பும் சிரமமாகவுள்ளது; கூடுதல் ரயில்களை இயக்குவதும் தடைபடுகிறது.

கோவை ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியுள்ள ரயில் பராமரிப்பு நிலையம், பல ஆண்டுகளாக எந்த வகையிலும் மேம்படுத்தப்படவில்லை.
2021--22 பூர்வாங்க பணிகள் திட்டத்தின் கீழ், போத்தனுார் சந்திப்பில் மூன்று 'பிட் லைன்'கள், நான்கு 'ஸ்டேபிள் லைன்'களுடன், புதிய கோச்சிங் வளாகம் அமைக்க, சேலம் கோட்டத்தால் முன்மொழிவு அனுப்பப்பட்டு, ரயில்வே வாரிய செயல் இயக்குனரின் பரிசீலனையில் உள்ளது.
ரயில் பராமரிப்பு வசதியை மேம்படுத்தாமல், ரயில் சேவையை அதிகப்படுத்த முடியாது என்பதை, ரயில்வே அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
அதற்கான இடம், வருவாய், சாத்தியக்கூறு இருந்தும் அதை உருவாக்காமல், ரயில்வே வாரியம் ஏன் தாமதிப்பதுதான், புரியாத புதிராகவுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-
வாசகர் கருத்து (15)
போத்தனுர் ரயில் நிலையத்தை மேம்படுத்தி டெர்மினல் ஆக உயர்த்த வேண்டும், கோவைக்கு மாற்றாக போத்தனுறை பெயர் மாற்றம் செய்து கோவை டெர்மினல் என்று மாற்ற வேண்டும். அங்கு எல்லாவித வசதிகளும் இருக்கிறது. மேலும் ரயில்வே மெயின் லைனில் இந்த ஸ்டேஷன் அமைந்துள்ளது. அப்படி செய்தால் அதன் வழியாக போகும் அணைத்து ரயில்களும் நின்று செல்லும் மேலும் புதிய வண்டிகளை கேட்டு பெறலாம். கோவையிலிருந்து துவங்கும் வண்டிகள் கோவையிலும் கடந்து போகும் வண்டிகள் பொத்தனூரிலும் மாற்ற வேண்டும், மெயின் லைன் நிலையம் இருப்பதால் அணைத்து வண்டிகளும் நின்று செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது கோவைக்கு இரண்டு முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும். மற்ற இடங்களில் அப்படிதான், மிக அருகில் இருக்கும் பாலக்காட்டில் அப்படி தான் செய்கிறார்கள். எந்த பிரச்னையும் இல்லை.
கோவை எம்பி காம்ரேடு ஆயிற்றே? தோழர் பாசம் பாலக்காட்டில் இருப்பது ஆச்சரியமில்லை. ரயில் நிலையத்தை விஸ்தரிக்க இரண்டு பக்கமும் வழி இல்லை . எனவே வடகோவை மற்றும் போத்தனூரை விரிவு படுத்துவதுதான் நல்லது.
கோவை எம்பி அவர்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரின் பொது இந்த பிரச்சினையை எழுப்பி, சம்பத்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மற்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்து பிரச்சினைக்கு ஒரு முடிவு காணவேண்டும்
நீங்கள் என்ன தான் புதிது புதிதாக .... மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள ரயில்வே துறை தமிழகத்துக்கு ஒரு நன்மையும் செய்யாது!
கோவை ரயில்நிலையம் இன்னமும் மலையாளிகள் வசம் உள்ளது.