சூரத்: குஜராத்தில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போலியான ஆதார், பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் புள்ளி விபர தொகுப்புக்குள் ஊடுருவி, அதில் உள்ள தகவல்களை திருடி நடந்த இந்த மோசடி, நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
விசாரணை
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு சூரத் நகரில் உள்ள சில வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் சார்பில் போலீசில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், 'சமீப காலமாக போலி ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்டவற்றை கொடுத்து சிலர் கடன் பெற்றனர். ஆனால், கடனை அவர்கள் திரும்பச் செலுத்தவில்லை.
'அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டபோது தான், அந்த அடையாள அட்டை போலியாக தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது.
இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சூரத்தில் வசித்து வந்த இருவரை கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோம்நாத் பிரமோத் குமார்.
இவர் பெயரில் ஏராளமான மொபைல் போன் சிம் கார்டு எண்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அடுத்ததாக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்வீர் தாக்குர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட சோம்நாத் பள்ளி படிப்பை தாண்டாதவர். சூரத்தில் வசித்தபடி கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சட்டவிரோத செயல்களில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதன் வாயிலாக அரசின் புள்ளி விபர தொகுப்புக்குள் ஊடுருவி, அதில் உள்ள விபரங்களை திருடியுள்ளனர்.
இதில் உள்ள ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து, அவற்றை பலருக்கும், தலா, 15 - 20 ரூபாய்க்கு விற்றுஉள்ளனர்.
வங்கியில் கடன் பெற்று மோசடி செய்வோர், முறைகேடாக சிம் கார்டு பெற விரும்புவோர், இவர்களிடமிருந்து அடையாள அட்டைகளை வாங்கிச் சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போலி அடையாள அட்டைகளை இவர்கள் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
புள்ளிவிபரம்
இவர்களது இந்த சட்டவிரோத செயல்களுக்கு, தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த சிலர் உதவிஉள்ளனர்.
இந்த மோசடியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வேறு சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
மேலும், அரசின் புள்ளிவிபரங்களை திருடிய இந்த சம்பவம், நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயலாகவும் இருப்பதால், இது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (25)
இதெல்லாம் எம்மாத்திரம்!
வேதனை தரும் விஷயம் . வங்கியில் கடன் ஆதாரை மட்டுமே முன் நிறுத்தி கொடுப்பது எந்த விதத்தில் சரி . அவர்களது வீட்டிற்கு சென்று inspection மற்றும் Guarantors/விட்னஸ், kyc norms ஆவணங்களை சரி பார்த்தல்..
குஜராத் போய் தொழில் கத்துக்கிட்டு வந்துரணும்.
எல்லாம் குஜராத்தியா....
இதுவும் குஜராத் மாடல் போல