Load Image
Advertisement

காஸ் விலை குறைப்பு மக்களுக்கு ஆறுதல் பரிசு

 Gas price reduction is a consolation prize for people    காஸ் விலை குறைப்பு மக்களுக்கு ஆறுதல் பரிசு
ADVERTISEMENT
கடந்த செவ்வாயன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலையை, 200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன், 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழே வாழும் பெண்களுக்கு, இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.

அவர்கள் காஸ் சிலிண்டர் வாங்கும் போது, ஏற்கனவே, 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. அந்த மானியம் மேலும், 200 ரூபாய் உயர்த்தப்பட்டு, 400 ரூபாயாக வழங்கப்படும். அத்துடன், கூடுதலாக, 75 லட்சம் பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு, இவை அனைத்தும், கடந்த, 30ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும், 32 லட்சம் பேர் சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர்.

ரக் ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி, பெண்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் தரும் வகையில், இந்த காஸ் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளோ, இந்தாண்டு நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளன.

அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள, 'இந்தியா' கூட்டணி மற்றும் அதன் மூன்று கூட்டங்களின் விளைவு தான் இது என்றும், கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ, 2021 முதல் பல மாதங்களாக காஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச்சில், 1,100 ரூபாயை தாண்டியது. இது, ஒவ்வொருவரது குடும்ப பட்ஜெட்டிலும், பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால், ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் போது, சமையல் காஸ் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு, காங்கிரஸ் கட்சியும், மற்ற எதிர்க்கட்சிகளும் ஆதாயம் பெற தீர்மானித்தன. இதுதொடர்பான உறுதிமொழிகளையும் கொடுத்து வந்தன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை நாங்களும் அறிவோம் என்பதை பறைசாற்றும் வகையிலும், காஸ் விலை குறைப்பு அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் நடப்பு நிதியாண்டில், மத்திய அரசுக்கு, ௭,௬௮௦ கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

அதே நேரத்தில், உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழை பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சமையல் காஸ் இணைப்புகளின் எண்ணிக்கையை, 10 கோடியே, 35 லட்சமாக உயர்த்த முடிவெடுத்துள்ளதன் வாயிலாக, நாட்டில் சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை, 33 கோடியாக உயரும் என்பதில் சந்தேகமில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ௨௦௧௪ல் முதல் முறையாக பதவியேற்ற போது, நாட்டில் சமையல் காஸ் இணைப்பு பெற்றிருந்தோர் எண்ணிக்கை, 14.5 கோடி. தற்போது, இணைப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை, இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது; அதற்கு, உஜ்வாலா திட்டமும் முக்கிய காரணமாகும்.

பெட்ரோல், டீசல் விலைக்கு அடுத்தபடியாக, சமையலுக்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர் விலை தான், மிக அதிகமாக உள்ளது என்பது, பொதுமக்களின் கவலையாக இருந்தது. அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்ற கோபமும் உருவாகி இருந்தது. அந்தக் கோபம், மத்திய அரசின் அறிவிப்பால் தற்போது குறைந்துள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஆறுதல் தருவதாகவும் அமைந்துள்ளது.

இந்த விலை குறைப்பு, நடைபெற உள்ள தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு எந்த அளவுக்கு ஆதாயத்தை தேடித்தரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement