Load Image
Advertisement

பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் முக்தி அடைந்தார்

Baranur Sri Krishna Premi Swami attained salvation  பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் முக்தி அடைந்தார்
ADVERTISEMENT

திருக்கோவிலூர்: பரனூர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணபிரேமி சுவாமிகள் அதிகாலை வயது மூப்பு காரணமாக முக்தி அடைந்தார். அவரது வயது 89.

விழுப்புரம் மாவட்டம், பரனுரைச் சேர்ந்தவர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணபிரேமி சுவாமிகள். அண்ணா என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் ஆன்மீக சொற்பொழிவில் அடித்தட்டு மக்களின் மனங்களைக் கவர்ந்தவர். அகில பாரத சாது சங்க தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் இவர் எளிமையின் அடையாளம். இதன் காரணமாகவே இந்தியா முழுவதும் இவருக்கென்று ஏராளமான பக்தர்கள் உள்ளனர். 90 வயதான இவர், அதிகாலை 1:38 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இல்லத்தில் வயது மூப்பு காரணமாக முக்தி அடைந்தார்.

அவரது இறுதிச் சடங்கு ஸ்ரீ ஹரி, ஸ்ரீரங்கன் சுவாமிகளின் தலைமையில், திரளான பக்தர்களின் ஸ்ரீ ராமநாம கோஷத்திற்கிடையே திருச்சி, ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றங்கரையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் பிராமணர் சங்கம், சச்சங்கம் சார்பில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் நான்குரத வீதி வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

Latest Tamil News
பிரேமி சுவாமிகள், நாம சங்கீர்த்தனம் மூலம் பக்தர்களை ஒருங்கிணைத்து அக்ரஹாரம் தோறும் 50 ஆண்டுகளாக, பக்திகளை வளர்த்தார். இவர் எந்த ஊர் சென்றாலும், அவருக்காவும், அவரது சொற்பொழிவை கேட்கவும், ஒரு கூட்டம் கூடும். விசாக அரி என்ற பிரபலமான பக்தி சொற்பொழிவாளர் இவரது மருமகள்.

வாழ்க்கை வரலாறு:ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள், சங்கநல்லூரில் ஒரு சிறிய கிராமத்தில் 1934ம் ஆண்டு பிறந்தார். ஆரம்ப காலம் முதல், யோக சாதனங்களில் தீவிர பயிற்சியாளராக இருந்த இவர், இறைவனின் தாமரை பாதங்களை அடைவதற்கான எளிதான வழி, பக்தியின் பாதை என்பதை உலகுக்கு நிரூபிக்க விரும்பினார். அவர் ஸ்ரீ பகவான் நாம போதேந்திராளை தனது மானசீக குருவாகப் போற்றினார். அவர் ஸ்ரீமத் பாகவதத்தை தனது பிரமாண கிரந்தமாக எடுத்துக் கொண்டார். அவர் பிரேமிகா சம்பிரதாயா என்ற புகழ்பெற்ற சம்பிரதாயத்தை நிறுவி உள்ளார்.
Latest Tamil News

ஸ்ரீ கிருஷ்ணரை தெய்வமாக வழிபட்ட அவர், பரனூரில் கிருஷ்ணருக்கு அற்புதமான கோவிலை கட்டி உள்ளார். அங்கேயே வாழ துவங்கிய பிரேமி சுவாமிகள், காலையில் சுப்ரபாதம் தொடங்கி, மதியம் பூஜை, இரவு டோலோத்ஸவம் வரை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அனைத்து சேவைகளையும் அவரே செய்தார். ஸ்ரீ கிருஷ்ணரின் சேவைக்காக உத்ஸவ கிருதிகளை இயற்றி உள்ளார். அந்த கீர்த்தனைகள் தான், பரனூரில் இறைவனின் பூஜையின் போது பாடப்பட்டு வருகின்றன. இது தவிர ராகவ ஷதகம், ராதிகா ஷதகம், யுகல ஷதகம், கோவிந்த ஷதகம், ரங்க ஷதகம் போன்ற பல ஷதகங்களை இயற்றியுள்ளார். இந்த ஒவ்வொரு ஷதகத்திலும், 100 கிருதிகள் உள்ளன. அவர் இதுவரை 1000 கிருதிகளுக்கு மேல் இயற்றியுள்ளார்.
Latest Tamil News

இந்தியா முழுவதும் பக்தி பரவல்:இந்திய மக்களின் மனதில் பக்தியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப, கன்னியாகுமரி முதல் இமயமலை வரை இந்தியா முழுவதும் பலமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், பக்தவிஜயம், பகவத் கீதை, ஆழ்வார்கள் வைபவம், ஸ்ரீமத் பாகவதம், உபநிடதங்கள் போன்ற பல தலைப்புகளில், பல நகரங்களில் சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளார். அறிவின் கடலாகவும், ஞானத்தின் தேக்கமாகவும் இருந்த அவர், பேசாத தலைப்பு இல்லை எனலாம்.
Latest Tamil News

பிரேமி சுவாமிகள், இந்தியா முழுவதும் பல நகரங்களில் "அகில பாரத சாது சங்கம்" என்ற சங்கத்தை நிறுவி உள்ளார். இச்சங்கம் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, திருநெல்வேலி, மதுரை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் செயல்படுகிறது. உ.பி., மாநிலம் மதுரா, கர்நாடக மாநிலம் மேல்கோட், மதுரை அழகர் கோவில், திருச்சநல்லூரில் ஆசிரமங்களை நிறுவி உள்ளார்.வாசகர் கருத்து (31)

 • R Saraswathi - Madurai ,இந்தியா

  அவரது பக்தி மற்றும் புனித சேவையை இந்திய அரசு அங்கீகரித்திருக்க வேண்டும்.

 • R.Vidya - Chennai,இந்தியா

  கிருஷ்ண ஸ்மரணையாகத்தான் வாழும் காலம் முழுவதுமாக இருந்திருக்கிறார். அவருடைய சமகாலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டு இருப்பது நாம் செய்த புண்ணியமே தெய்வம் மானுஷ ரூபேண என்பார்கள். இனி யாரைக் காண்போம். அவரை தன் திருவடியில் அந்த பரமாத்மா சேர்த்துக்கொண்டு விட்டது.

 • theruvasagan -

  கண்ணணின் மகத்துவத்தை கேட்போர் கண் முன் நிறுத்தி பரவசப்பட வைத்த ஒரு மகானை கண்ணன் தன் திருவடியின் கீழே என்றென்றும் நிறுத்திக் கொண்டான். அவரது சொற்பொழிவுகள் சாகவரம் பெற்றவை. என்றென்றும் நம் செவிகளுக்கு விருந்தாக இருந்து நம்மையும் நற்கதி அடைவிக்கும்.

 • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

  Om Shanti Om Shanti

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  விசாகாஹரியும் அவர் கணவரும் கிருஷ்ணபிரேமியின் தொண்டுகளை தொடர்ந்து செய்யவேண்டும்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement