Load Image
Advertisement

மதுரையில் நின்றிருந்த ரயில் பெட்டியில் தீவிபத்து: உ.பி.,யைச் சேர்ந்த 9 பயணியர் கருகி பலி

Tourist Train accident: Cylinder burst in Madurai tourist train?   மதுரையில் நின்றிருந்த ரயில் பெட்டியில் தீவிபத்து:  உ.பி.,யைச் சேர்ந்த 9 பயணியர் கருகி பலி
ADVERTISEMENT
மதுரை:மதுரையில் நின்றிருந்த ரயில் பெட்டியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 9 பயணியர் கருகி உயிரிழந்தனர். ரயில் பெட்டிக்குள் விதிமீறி சிலிண்டர்கள் வைத்து, சிலர் டீ, காபி, ஸ்நாக்ஸ் தயாரிக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அறிவித்துள்ளது.


உ.பி., லக்னோவில் இருந்து, 63 பேர் ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் முன்பதிவு செய்து, ஆக., 17 முதல் 29 வரை ஆன்மிக சுற்றுலாவை துவக்கினர்.

இவர்களுக்கு ஒரு சிறப்பு ரயில் பெட்டி ஒதுக்கப்பட்டது. இப்பெட்டி ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட வழித்தடங்களில் செல்லும் பல்வேறு ரயில்களில் இணைக்கப்பட்டு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு பயணியர் சென்றனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
நேற்று முன்தினம் நள்ளிரவு, 3:45 மணிக்கு மதுரை வந்தனர். இங்கிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இப்பெட்டி இணைக்கப்பட்டு, நாளை சென்னை சென்றும், அங்கிருந்து லக்னோவிற்கு ஆக., 29ல் திரும்புவதும் இவர்களின் பயண திட்டம்.

இந்நிலையில், புனலுார் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று வந்த இப்பயணியரின் சிறப்பு பெட்டி கழற்றி விடப்பட்டு, மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் மதுரை - போடி லைனில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டது.

பெட்டியில் இருந்து சிலர் இறங்கி, ரயில்வே ஸ்டேஷன், கடைகளுக்கு சென்றிருந்த நிலையில், அதிகாலை, 5:15 மணியளவில் இப்பெட்டிக்குள் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.

பெண்கள் அலறல்



அப்போது, பயணியர் அலறல் சத்தம் கேட்டு, போடி லைனை ஒட்டியுள்ள குடியிருப்பு மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் மளமளவென தீ கொளுந்து விட்டு எரிந்தது.

உள்ளே வெடிக்கும் சப்தமும் கேட்டு, தீயின் தாக்கம் உக்கிரமாக மாறியது. இதனால் உள்ளூர் மக்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.

தகவல் கிடைத்த சில நிமிடங்களில் தல்லாகுளம், திடீர் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணி நடந்தது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். அப்போது உள்ளே இரண்டு சிலிண்டர்கள், விறகுகள் கிடந்தன. ஒரு கழிப்பறையில் பாத்திரங்கள், காய்கறிகள் அடைக்கப்பட்டிருந்தன.

9 சடலங்கள் மீட்பு



ஏதுமறியாமல் வயதானவர்கள் படுக்கைகளில் துாங்கிக் கொண்டிருந்த நிலையில், மூச்சு திணறியும், தீயில் கருகியும் ஐந்து பெண்கள் உட்பட 9 பேர் இறந்தனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதில், ஒருவரின் உடல் ஆணா, பெண்ணா என முடிவு செய்ய முடியவில்லை. உடல்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

காயமடைந்தவர்களுக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பெட்டியில் பயணித்தவர்கள் ரயில்வே திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மதுரை கோட்ட மேலாளர் அனந்த் தலைமையில் ரயில்வே அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் லோகநாதன், ரயில்வே பாதுகாப்பு எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

டீ தயாரிப்பு



முதற்கட்ட விசாரணையில் ரயில் பெட்டியில் மூன்று சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிந்தது. ஒரு சிலிண்டரில் டீ, காபி தயாரிக்க சிலர் முயற்சி செய்த போது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு காலி சிலிண்டர்கள், விறகுகள் பெட்டியின் கழிப்பறையில் கிடந்தன.

காய்கறிகள், பாத்திரங்கள், பயணியரின் உடைமைகள் ரயில் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன. உறவினர்களை பலி கொடுத்தவர்கள் கதறினர்.

முதல்வர் உத்தரவு



அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். காயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் தியாகராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ரயில்வே எஸ்.பி., செந்தில்குமார் கூறுகையில், ''ரயில் பெட்டிக்குள் விதிமீறி சிலிண்டர்கள், விறகு உள்ளிட்டவை எவ்வாறு அனுமதிக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து ரயில்வே போலீசார் சார்பில் உரிய விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர்கள் மூர்த்தி, சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அமைச்சர் சுப்ரமணியன் கூறுகையில், ''ரயில் பெட்டிக்குள் டீ தயாரிக்க ஸ்டவ் பற்ற வைத்த போது, சிலிண்டர் வெடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 65 பேரில், 39 பேர் நன்றாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவி செய்யப்பட்டுள்ளது. ஆறு பேர் ரயில்வே மருத்துவமனையில், இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பெண்கள், ஐந்து ஆண்கள் இறந்தனர்,'' என்றார்.

அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ''விபத்தில் இறந்த ஒன்பது பேரின் உறவினர்களுக்கும் தலா, 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ளோம். உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

சப்தம் கேட்டு ஓடி வந்தோம்



மதுரை - போடி லைனை ஒட்டி சில அடி துாரத்தில் என் வீடு உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சில நொடிகளில் பெட்டிக்குள் சிக்கியவர்களின் அலறல் சப்தம் கேட்டு வெளியே வந்தோம். இப்பகுதி மக்கள் ஒன்று கூடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் முடியவில்லை. அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயில் பெட்டியில் தீ பரவி எரிய துவங்கியது. அதை இப்பகுதியினர் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீரை குடங்களை எடுத்து வந்து ஊற்றி ஆரம்பத்திலேயே அணைத்துவிட்டோம். இல்லையென்றால் இந்த ரயில் பெட்டியும் எரிந்திருக்கும். பெட்டிக்குள் பயணியர் அலறிய சப்தம் மனவேதனையை ஏற்படுத்தியது.

- மன்னர் பிரகாஷ், ஆட்டோ டிரைவர், மதுரை

அதிர்ஷ்டவசமாக தப்பினோம்



நானும், என் மனைவியும் ஆன்மிக சுற்றுலா வந்தோம். கேரளாவில் முக்கிய இடங்களுக்கு சென்று விட்டு நேற்று காலை மதுரை வந்தோம். மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் சென்று வர திட்டமிட்டிருந்தோம். ரயில் நின்றவுடன் கடைக்கு செல்வதற்காக நாங்கள் இருவரும் பெட்டியை விட்டு பைகளுடன் இறங்கிவிட்டதால் விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக தப்பினோம். ஆனால், உடன் வந்தவர்களை இழந்து மன வேதனையில் உள்ளோம்.

- கண்ணோஜ்லால் வர்மா, லக்னோ.

விபத்தான ரயில் பெட்டியில் பயணம் செய்த பயணி

மனைவியை பலி கொடுத்தேன்



என்னுடன் வந்த மனைவி மிதிலேஷ்குமாரி, 63, தங்கை கணவர் தாமன்சிங், 63, ஆகியோரை ஒரே நேரத்தில் இழந்து தவிக்கிறேன். இருவரும் வயதானவர்கள் என்பதால் வண்டி நின்ற பின்னரும் கீழே இறங்காமல் துாங்கிக் கொண்டிருந்தனர். இயற்கை உபாதைக்காக நான் மட்டும் கீழே இறங்கி வந்ததால் தப்பினேன். எங்கள் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. செய்வது தெரியாமல் தவிக்கிறேன்.

- சிவ்பிரதாப்சிங் சவ்ஹான், லக்னோ:

கதவை பூட்டி வைத்தோம்



வழக்கமாக ரயில் பெட்டிக்கு வெளியே வைத்து தான் சமைப்பர். ஆனால், ரயில் பெட்டிக்குள் டீ தயாரித்த போது விபத்து ஏற்பட்டது. திருடர்களுக்கு பயந்து பெட்டியில் உள்ள மூன்று கதவுகளையும் பூட்டி விட்டு உள்ளே இருந்தோம். சிலிண்டர் வெடித்த போது, ஒரு கதவு வழியாக எல்லோரும் வெளியே வர முடியவில்லை. அது தான் நிறைய இறப்புக்கு காரணம். நான் வெளியே வந்தபோது கீழே விழுந்ததில் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது.

- நிர்மல்குமார் வர்மா, 62, லக்னோ.

சுவாசிக்க முடியவில்லை



நான், தாத்தா வர்மா, பாட்டி சாந்திதேவியுடன் ஆன்மிக சுற்றுலா வந்தோம். விபத்தில் பாட்டி சாந்திதேவி 65, பலியானார். அதிக புகையை சுவாசித்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டது. சுவாசிக்க முடியவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

- ஹர்ஷ் ஷர்மா, 22, லக்னோ.

சொந்த ஊர் செல்ல ஏற்பாடு



கலெக்டர் சங்கீதா கூறியதாவது:ஆன்மிக சுற்றுலா வந்த இப்பயணியர் காலை, 6:45 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வேரம் செல்வதற்காக மதுரை வந்துள்ளனர். விபத்தின் போது பெட்டியில் இருந்த நான்கு கதவுகளில் ஒன்று மட்டுமே திறந்த நிலையில் இருந்துள்ளது. விபத்து ஏற்பட்ட பின் இரண்டு கதவுகளை திறந்தும், உடைத்தும் சிலர் வெளியேறி தப்பியுள்ளனர். 63 பேர் இப்பெட்டியில் முன்பதிவு செய்துள்ளனர். இதில், 69 வயது முதியவர், 5 வயது சிறுவன் ஆகிய இருவர் டிக்கெட் இன்றி கூடுதலாக இருந்துள்ளதால் மொத்தம் 65 பேர் இப்பெட்டியில் இருந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானதால் அவர்களுக்கு தேவையான உடை உள்ளிட்ட வசதிகள் செய்து பத்திரமாக சொந்த ஊர் செல்ல மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.




இறந்தவர்கள் யார்?



இறந்தவர்களில் 7 பேர் உடல் அடையாளம் காணப்பட்டது. மீதி இருவர் யாரென தெரியவில்லை. பரமேஸ்வர் குமார் குப்தா, 55மிதிலேஷ் குமாரி, 62,சந்திராமன் சிங், 65ேஹமானி பன்ஷால், 22ஷாந்தி தேவி வர்மா, 67அங்குர் காஷ்யம், 36மனோரமா அகர்வால் 82.



8 பேர் தப்பி ஓட்டம்



இந்த ரயில் பெட்டியில் மொத்தம் 65 பேர் பயணித்தனர்; 48 பேர் ரயில்வே திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 8 பேர் நிலை குறித்து விசாரித்தனர். இந்த 8 பேரும் ஆன்மிக சுற்றுலாவிற்கு டிக்கெட் புக்கிங் செய்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். தீ விபத்து ஏற்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியது தெரியவந்தது. இவர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



பாதுகாப்பு குறைபாடு காரணமா?



ரயிலில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது. அதையும் மீறி பெட்டிக்குள் சிலிண்டர்கள், மண்எண்ணெய் ஸ்டவ், விறகு என, ஒரு சமையல் அறை போல் பயணியர் பயன்படுத்தி உள்ளனர்.வெவ்வேறு ரயில்களில் இந்த பெட்டி இணைக்கப்பட்ட போதும், இப்படி ஆபத்துடன் தான் இப்பெட்டி பயணித்துள்ளது.

இதை எவ்வாறு பாதுகாப்பு போலீசார் அனுமதித்தனர். பாதுகாப்பில் கடும் குறைபாடு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.



வாசகர் கருத்து (55)

  • கணபதி சேலம் -

    வெடிக்காத சிலிண்டர் காய்கறி உடன் கிழே உள்ளது பிறகு எப்படி சிலிண்டர் வெடித்தது என்று முடிவுக்கு வருகிறார்கள்

  • chandrasekar madurai -

    train journey is very worst in recent years i do not blame any body but it is true rowdies were moving up and down in coaches freely no body ask them and control them

  • பால் பாண்டி திண்டுக்கல் -

    இதில் அமைதி மார்கம் காரங்க சதி திட்டம் இருக்கக் வாய்ப்பு நிறைய உள்ளது ~ கதவை ஏன் வெளி பக்கம் பூட்டினாங்க நன்கு விசாரிக்கப் வேண்டும்

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    Gas stoves are used in pantry cars in day time trains and long distance trains.They take necessary precautions.

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    இரண்டு ரயில் பெட்டிகளை தனியாக கழற்றி ரயில் நிலையத்தில் இருந்து 1-2 கிலோமீட்டர் தள்ளி நிறுத்தினால் அதில் பயணிப்பவர்களுக்கு எப்படி டீ, காப்பி, டிஃபன் கிடைக்கும்? சுற்றுப்பயண ஏற்பாடு செய்தவர்கள் எண்ண செய்தார்கள்? அந்த இரண்டு வண்டிகளில் தண்ணீர் வசதி இருந்ததா? உத்தர பிரதேசத்தில் இருந்து வந்து எல்லா ஸ்தலங்களுக்கும் சென்று திரும்பி செல்லும்போது கேஸ் விபத்து என்றால் அவர்களுக்கு தமிழகத்தில்தான் கேஸ் சிலிண்டர் யாரோ வழங்கியிருக்க வேண்டும். 50-60 நபர்களை ஆடுகளை பட்டியில் அடைப்பதுபோல நடத்தியது ரயில்வேயின் நிர்வாக கோளாறு. அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துதர வேண்டியதும் ரயில்வே நிர்வாகம்தான். வட நாட்டவர் என்றாலே அவர்கள் மீது குற்றம் சொல்வது நமது பலவீனம். அவர்கள் நமது மாநிலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும், மரியாதை கொடுப்பதும் நம் கடமை. எளியோர் மீது இரக்கம் வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்