ADVERTISEMENT
உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி உலக உறுப்பு தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது.உறுப்பு தானம் என்பது ஒரு நபர் உறுப்பு அல்லது திசுக்களை, தாமாக முன்வந்து, மரணத்தில் விளிம்பில் உள்ளோருக்கு தானமாக அளிப்பதாகும். பொதுவாக, உடலுறுப்பு தானம்,.உயிருடன் இருக்கும் போது உறுப்புகளை அளிப்பது, இறந்த பின்னர் உடலுறுப்புகளை தானமாக தருவது என இரண்டு வகைப்படுகிறது.
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

உடலுறுப்பு தானம் குறித்த மக்களிடையே எந்தளவு விழிப்புணர்வு இருக்கிறதோ, அதை விட கட்டுக்கதைகளும் ஏராளமாக உள்ளன. பொதுவான சில கட்டுக்கதைகள், அவற்றின் உண்மை என்னென்ன என பார்ப்போம்.
1. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டோர் உறுப்பு தானம் செய்ய இயலுமா ?
சில மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டோர் உறுப்பு தானம் செய்ய இயலாது. சில நோய் பாதிப்புகள், குறிப்பிட்ட சில உறுப்புகளில் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். மற்ற உறுப்புகள் நன்றாக செயல்படும் நிலையில், மருத்துவர்கள் உறுப்புகள், திசுக்கள் தானம் செய்ய இயலுமா என்பதை முடிவு செய்வார்கள்.
2. உடலுறுப்பு தானத்திற்கு ஒப்புகொண்ட பின், டாக்டர்கள், மருத்துவமனைகள் வேலை செய்ய மாட்டார்கள் ?
இது முற்றிலும் கற்பனையான ஒன்று. டாக்டர்கள், மருத்துவமனைகள் உயிரை காப்பாற்றவே முயற்சிப்பார்கள். நீங்கள் உறுப்பு தானம் செய்யாவிட்டாலும், மருத்துவமனைக்கு செல்லும் போது, தங்களால் முடிந்தவரை உங்கள் உயிரை காப்பாற்ற முயற்சிப்பர்.
3. உடலுறுப்பு தானம், மத நம்பிக்கைக்கு எதிரானதா ?
பெரும்பாலான மதங்கள், உடலுறுப்பு தானத்தை ஒப்புகொள்கின்றன. உறுப்பு தானத்தை கருணையின் வடிவமாக கருதுவதால், உங்கள் இறப்பிற்கு பிறகு உறுப்பு தானம் செய்ய பதிவு செய்ய அனுமதிக்கின்றன.

4. 18 வயதுக்கு குறைவானவர்கள் உறுப்பு தானம் செய்ய முடியாது ?
சட்டப்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் உறுப்பு தானம் செய்ய முடியாது. உங்கள் பெற்றோர்கள் சம்மதிக்கும் பட்சத்தில், உறுப்பு தானம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. 18 வயதுக்கு குறைவான ஏராளமான குழந்தைகளுக்கு, உறுப்பு தானத்திற்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பெரியவர்களை விட சிறிய உறுப்புகள் தேவைப்படுகிறது.
5. உடலுறுப்பு தானம் உடலை சிதைத்துவிடுமா ?
உடலுறுப்பு தானம் செய்வதற்கு பதிவு செய்திருந்தால், அறுவை சிகிச்சை வாயிலாக உறுப்புகள் அகற்றப்படும். இது முழு உடலை சிதைத்து விடாது. கண்களை தானம் செய்திருந்தால், அதற்கு பதிலாக செயற்கை கண்கள் வைக்கப்படும். கண் இமைகள் மூடப்படும். மேலும் நீங்கள் தோல்களை தானம் செய்திருந்தால், தோல் எடுக்க்கப்பட்ட பகுதியில், மெல்லிய தோல் முதுகுப்பகுதியில் இருந்து எடுத்து பொருத்தப்படும்.
6. உடலுறுப்பு தானத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா ?
உடலுறுப்புகளை தானம் செய்யும் நபரோ, குடும்பத்தினரோ கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. உடலுறுப்பு தானம் செய்வதற்கு முன்பு, தானம் அளிப்பவர், மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தால், அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. உடலுறுப்பு தானம் பெறுவோர், உறுப்பு மாற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!