ADVERTISEMENT
சுங்க வரி என்ற பெயரில் மோசடி வலை விரிக்கும் நபர்களிடம், பொதுமக்கள் யாரும் சிக்கி பணத்தை ஏமாற வேண்டாமென மத்திய நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சுங்கத்துறை அதிகாரிகள், ஒருபோதும் சுங்கவரியை தனிநபர் வங்கி கணக்குகளில் செலுத்துமாறு போனில் அழைப்போ, குறுஞ்செய்தியோ அனுப்ப மாட்டார்கள். சுங்கத்துறை
தொடர்பாக அனைத்து தகவல் தொடர்புகளிலும், டாக்குமெண்ட் வெரிபிகேஷன் (DIN) எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை சி.பி.ஐ.சி (CBIC) எனப்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து உங்களது பெயரில் வந்த பரிசு பொருள் அல்லது விலை உயர்ந்த பொருள், சுங்கத்துறை வசமுள்ளது. அதற்கு சுங்கவரி மட்டும் செலுத்தினால் போதும். உடனடியாக பொருள் அனுப்பி வைக்கப்படுமென சுங்கத்துறை அதிகாரிகள் போர்வையில், ஆசை காட்டி மோசம் செய்வதை, 'மேட்ரிமேனியல் டேட்டிங் ஸ்கேம்' என்று அழைக்கப்படுகிறது.

இதுபோன்ற மோசடி சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதனை நிதியமைச்சகம் பதிவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் மஹாராஷ்டிராவின் தானேவில் போலீஸ் அதிகாரி ஒருவரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் போல பேசி மர்மநபர்கள் ரூ.6.7 லட்சம் மோசடி செய்துள்ளனர். குறைந்த விலையில் கார் கிடைக்குமென போலீசை நம்ப வைத்து, சுங்க வரி செலுத்துமாறு கூறி மோசடி அரங்கேறி உள்ளது.
இதேபோன்று, கடந்த ஜூன் 27ம் தேதி டில்லி விமான நிலையத்தின் வெளியே சுங்கத்துறை அதிகாரிகளை போல காட்டி கொண்ட இருவர், சவுதியில் பணியாற்றி வரும் ராஜஸ்தானின் அஜ்மீரை சேர்ந்த 53 வயதான ஒருவரிடம் ரூ.4 லட்சம் வெளிநாட்டு பணத்தை மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.
அதுக்குத்தான் நாங்க இருக்கோமே..