Load Image
Advertisement

பள்ளிச் சிறுவனிடம் பாதிரியார் சில்மிஷமா: தட்டிக்கேட்டவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்ததாக புகார்

 Priest scolds school boy: Alleges that the rapist has alienated the family    பள்ளிச் சிறுவனிடம் பாதிரியார் சில்மிஷமா: தட்டிக்கேட்டவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்ததாக புகார்
ADVERTISEMENT


திண்டுக்கல்,--திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பள்ளிச்சிறுவனிடம் பாதிரியார் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக புகார் அளிக்க உதவிய எனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர் என அருள் பிரான்சிஸ் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதை ஊர் முக்கியஸ்தரும் நாட்டாமையும் மறுத்தனர்.

சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி மேற்குத்தெருவை சேர்ந்தவர் அருள் பிரான்சிஸ். இவர் குடும்பத்துடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். கலெக்டர் பூங்கொடியிடம் அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நான் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறேன். அதே பகுதியில் வசிக்கும் 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் அப்பகுதியில் உள்ள சர்ச்சில் பீடச்சிறுவனாக பணிபுரிகிறார். அச்சிறுவனை பாதிரியார் அடைக்கலராஜ் மது அருந்திவிட்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

வெளியே சொன்னால் நான் ஜெயிலுக்கு போய்விடுவேன். ஊரில் அசிங்கப்படப்போவது நீதான் என மிரட்டியிருக்கிறார். இது குறித்து அச்சிறுவன் என்னிடம் தெரிவிக்க நான் ஊர் முக்கியஸ்தர், நாட்டாமையிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

ஜனவரியில் சைல்டு ெஹல்ப் லைன் 1098 ஐ அழைத்து சிறுவன் வாயிலாக புகார் தெரிவித்தோம்.

சைல்டு ெஹல்ப் லைன் அதிகாரிகள் வந்து விசாரித்து சிறுவனிடம் புகாரை பெற்று அதை சாணார்பட்டி போலீசாரிடம் கொடுத்தனர். மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் புகார் அளித்தோம். அவர்களும் விசாரணை மேற் கொண்டனர். ஆனால் போலீசார் எங்களை விசாரணைக்கு அழைத்து என் அலைபேசியில் உள்ள அனைத்து தகவல்கள், சிறுவனின் வீடியோ வாக்குமூலம் உள்ளிட்டவற்றை அழித்து விட்டனர்.

நான் சென்ற பிறகு, சிறுவன், அவரின் பெற்றோரை, பாதிரியார் அடைக்கலராஜ் தரப்பினர், ஊர்முக்கியஸ்தர், நாட்டாமை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்திருக்கின்றனர்.

இதை தொடர்ந்து என் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கின்றனர். கூலி ஆட்களை என் தோட்டத்திற்கு வரவிடாமல் தடுக்கின்றனர். சுப, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிடுவதில்லை.

எனது தொழிலையும் முடக்கி விட்டனர். இதிலிருந்து மீட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாணார்பட்டி போலீசாரிடம் விசாரித்தபோது, சைல்டு ெஹல்ப் லைன்- மூலம் புகார் வந்தது. ஆனால் அச்சிறுவனும், பெற்றோரும் புகார் அளிக்கவில்லை, என்றனர். சைல்டு ெஹல்ப் லைன் விசாரணை அதிகாரி ஜேக்கப் கூறியதாவது: புகார் உண்மைதான். சிறுவனும் பாலியல் தொந்தரவு நடந்தது என்றுதான் கூறினார். சாணார்பட்டி போலீசாருக்கு புகாரை அனுப்பினோம்.

ஆனால் போலீசார் விசாரணையில், அச்சிறுவனே இந்த முறை பாதிரியாரை மன்னித்துவிடுங்கள் என்று எழுதிக்கொடுத்துச் சென்றுள்ளார். அதற்கு பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை, என்றார்.

டி.ஆர்.ஓ., சேக் முைஹயதீனிடம் கேட்டபோது,''புகார் வந்ததும் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு உண்மைத்தன்மையை அறிந்த பின்பே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

நாட்டாமை செல்வம் கூறுகையில், ''ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக சொல்வது தவறு. அவ்வாறு செய்யவில்லை. பிரான்சிஸ் அவராகவே இவ்வாறு புகார் தெரிவிக்கிறார். ஊர்மக்கள் கூடி பஞ்சாயத்து எதுவும் செய்யவில்லை,'' என்றார்.

ஊர் முக்கியஸ்தர் ஜோசப் கூறுகையில், ''பாலியல் புகார் என்றெல்லாம் ஒன்றுமில்லை. மக்கள் அனைவருமே பிரான்சிசுக்கு எதிராக இருக்கின்றனர். ஊர் கூடி பேச வேண்டுமென்றால் கூட இவருக்காக எவரும் வரவில்லை. பாதிரியாருக்கும் இருவருக்குமிடையே உள்ள தனிப்பட்ட பிரச்னையை தவறாக கொண்டு செல்கிறார்.

சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வரும் இவர் பாதிரியாரிடம் சர்ச்சில் ஒலி, ஒளி அமைக்க கேட்டிருக்கிறார். அவரும் அதற்காக பணம் கொடுத்தார். பாதிரியாரிடம் பணம் இருக்கிறது என்பதை தெரிந்து அவரிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டுள்ளார். இப்பிரச்னையைத்தான் அவர் திசை திருப்புகிறார்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement