சென்னை: சென்னையில் முதல்முறையாக அண்ணா நகர் அருகில் உள்ள, 'மெட்ரோ சோன்' அடுக்குமாடி குடியிருப்பில், 50 வீடுகளுக்கு, குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் துவங்கியுள்ளது.
சென்னை எண்ணுார் துறைமுகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.என்.ஜி., எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவ நிலையில் எரிவாயு வருகிறது. இந்த எரிவாயு, வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும்; வாகனங்களுக்கு, சி.என்.ஜி., என்ற பெயரிலும் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில், 1.61 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்ள, ஏழு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங் களில், 33 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகம் செய்யும் பணியை, 'டோரன்ட் காஸ்' என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
சென்னையில், 60 பெட்ரோல் பங்க்குகளில், சி.என்.ஜி., மையம் வாயிலாக, வாகனங்களுக்கு எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. வீடுகளுக்கு வினியோகம் செய்ய, பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு வீட்டு வாடிக்கையாளரிடம் இருந்து, 'டிபாசிட்' கட்டணமாக, 6,000 ரூபாய்; முன்பணமாக, 500 ரூபாய், இணைப்பு கட்டணமாக, 590 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதில், 6,500 ரூபாய் திரும்ப பெறக் கூடியது.
முதல் முறையாக, தற்போது அண்ணா நகர் அருகில் உள்ள மெட்ரோ சோன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், 50 வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில், எரிவாயு வினியோகம் துவக்கியுள்ளது. இதை தொடர்ந்து, அரும்பாக்கம், கோயம்பேடு, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
எல்.பி.ஜி., சிலிண்டர் விலையை விட, இயற்கை எரிவாயு விலை, 30 சதவீதம் குறைவு.
எங்கள் வீட்டில் காஸ் அடுப்புக்கு, 'பைப் லைனில்' இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் வரும் எரிவாயுவை பயன்படுத்துவது, வழக்கமான, எல்.பி.ஜி., சிலிண்டர் எரிவாயுவை பயன்படுத்துவது போல் தான் உள்ளது.
மேலும், 'ஸ்மூத்' ஆகவும் உள்ளது. எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிய, மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. முதல் 'பில்' இம்மாத இறுதியில் வரும் என, எரிவாயு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருண், 48
மெட்ரோ சோன் அடுக்குமாடி குடியிருப்பு,
அண்ணா நகர், சென்னை
வாசகர் கருத்து (7)
அப்போ சென்னை சூரத்தை விட மிக மிக மிக பின் தங்கிய நகரமா? சூரத்தில் நான் 2006ல் வசித்த போது அங்கே அப்போதே இருந்ததே 2009லிருந்து கொல்கத்தாவில் வசிக்கின்றேன் அங்கும் இருக்கின்றது
அப்பாடா இனி காஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள், அதிகார தோரணையுடன், மாமூல் கொடுத்தால்தான் சிலிண்டர் கொண்டு வருவோம் என்ற தொந்தரவை குறைக்கலாம். ஏற்கனவே மானியம் கிடையாது, இதில் மாமூல் வேறு அழுதால்தான் சிலிண்டர் கொடுப்போம் என்ற தொந்தரவு. ஆனால் இதிலும் ஒரு கஷ்டம் உள்ளது, சிலிண்டர் கொண்டு வருபவர்கள் ஏதாவது செய்து இந்த திட்டத்தினை பாழாக்கலாம், அதனை தடுக்கவேண்டும்
LNG குழாய் இணைப்பு மிகவும் பாதுகாப்பானது. எளிமையானது, விலை மலிவானது. இது நம் நாட்டின் மற்ற பெருநகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. இப்போதுதான் சென்னைக்கு வருகிறது. ஆனால் கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள குடிசை வீடுகளில் இந்த எரிவாயு இணைப்பு கிடைக்காது.
எல்லா மாநிலங்களும் வந்து விட்டது. டெல்லி மும்பை 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது.
நம்மூர் மாநகராட்சி, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் துறையினர் சாலையை பதம்பார்ப்பதில் (அதுவும் சாலை போட்ட 2-3 நாளிலேயே) வல்லவர்கள். இவர்களின் ஊழலும், மெத்தனப்போக்கும் அலட்சியமுமே சென்னை சிங்காரச் சென்னையாக - உலகத்தரம் வாய்ந்த குட்டும் குழியுள்ள சாலைகளாக காட்சியளிக்கிறது. இந்த கேஸ் குழாயையும் இனி விட்டுவைக்க மாட்டார்கள்.