பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது.
அதில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், ''பாதகம் செய்த பழனிசாமியோடு, பன்னீர்செல்வத்தால் எப்படி ஒன்று சேர முடியும்? ஒன்றாக இருந்தபோது சந்தித்த இன்னல்கள், பன்னீர்செல்வத்துக்கு நன்றாக தெரியும். இனி பழனிசாமியோடு உறவு கிடையாது,'' என்றார்.
நம்பிக்கை துரோகம்
அதன்பின், பன்னீர்செல்வம் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியை காப்பாற்ற, பழனிசாமியுடன் நல்ல எண்ணத்துடன் இணைந்தோம். அந்த நன்றி இல்லாமல், எனக்கு நான்கரை ஆண்டுகள் பாடம் கற்றுக் கொடுத்தனர். எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ, அதை செய்தனர்.
இப்போது என்னை வெளியேற்றி விட்டு, கட்சியை கைப்பற்றி, பழனிசாமி சர்வாதிகாரியாக மாறி உள்ளார். ஒவ்வொரு முறையும் நீதிமன்ற தீர்ப்பு வரும்போது, 'உங்களுக்கு பின்னடைவா?' என செய்தியாளர்கள் கேட்கின்றனர். இப்போது, நாங்கள் மக்களை நாடி செல்கிறோம். இதுதான் எங்கள் பதில். திருச்சி மாநாடு அதை நிரூபித்து காட்டி உள்ளது.
'ஏற்கனவே செய்த தவறை செய்யாதீங்க. பழனிசாமியுடன் இணையாதீங்க' என, பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். அவர் முன்மொழிந்ததை, நான் வழிமொழிகிறேன்.
ஏனெனில், முதல் முறை இணைந்தோம். செவுளில் அறைந்ததுபோல் நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்தனர். இனிமேல், அதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்.
திருச்சியை தொடர்ந்து, அடுத்த மாநாடு, கொங்கு மண்டலத்தில் என அறிவித்தோம். அந்த மாநாடு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இப்போது திருச்சி மாநாடு பெரியதா, கொங்கு மாநாடு பெரியதா என போட்டி வந்துள்ளது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் பேசும்போது, 'மாநாடு நடத்த வாய்ப்பு தாருங்கள். வசதியை செய்து தாருங்கள்' எனக் கூறினர். வாய்ப்பும் தருவோம்; வசதியையும் தருவோம்.
ஒத்துழைப்பு
நாம் மக்களை நோக்கி சென்று கொண்டிருப்பதை காட்டத் தான், திருச்சி மாநாட்டை நடத்தினோம். அதற்கு ஒரு படி மேலாக, கொங்கு மண்டல மாநாடு இருக்க வேண்டும்.
கடந்த 2006 - 11ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், கோவை, திருச்சி, மதுரை மண்டலங்களில் மாநாடு நடத்தி, 2011 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார். அதை நோக்கித் தான் நம் தர்மயுத்தம் செல்கிறது. கொங்கு மண்டல மாநாடு வெற்றிகரமாக நடக்க, ஒத்துழைப்பு தாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:
அடுத்த மாநாடு கொங்கு மண்டலத்தில் நடக்கும் என அறிவித்தோம். அதன்படி விரைவில் தேதி அறிவிக்கப்படும். கொங்கு மண்டலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கோட்டை.
தொண்டர்கள் விருப்பம்
கடந்த காலத்தில், பழனிசாமி அரசை காப்பாற்றி கொடுத்தோம். அதற்குரிய செயல், அவரிடம் இல்லை.
நான்கு ஆண்டுகள் பொறுமையாக பொருத்திருந்தோம். இனிமேலும் அந்த தவறை செய்யக் கூடாது என்பது தொண்டர்கள் விருப்பம். அதன்படி எங்கள் செயல்பாடு இருக்கும்.
கொங்கு மாநாட்டில், தினகரன், சசிகலா கலந்து கொள்வரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தினகரனுடன் தோழமை உணர்வுடன் இணைந்து செயல்படுகிறோம்.
அவர் தனி கட்சி நடத்துகிறார். நாங்கள் அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பன்னீர்செல்வம் தரப்பினர், 'நமது புரட்சி தொண்டன்' என்ற நாளிதழை துவங்க உள்ளனர். ஏற்கனவே 'நமது எம்.ஜி.ஆர்., மற்றும் நமது அம்மா' நாளிதழ் ஆசிரியராக இருந்த மருது அழகு ராஜ், இப்புதிய நாளிதழின் ஆசிரியராக இருப்பார் என, மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மாவட்ட செயலர்கள் கூட்டம் துவங்குவதற்கு முன், பன்னீர்செல்வம் மற்றும் மூத்த நிர்வாகிகள், கொங்கு மண்டல மாவட்ட செயலர்களுடன், தனி ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் தென்னரசு, மாநாட்டுக்கு 10 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த கொளத்துார் கிருஷ்ணமூர்த்தி, 10 லட்சம் ரூபாய்; வழக்கறிஞர் திருமாறன் 2 லட்சம்; சரவணன் என்பவர் 2 லட்சம் ரூபாய்; மகளிர் அணியைச் சேர்ந்த உமையாள், 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தனர். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட செயலர் ரஞ்சித்குமார் உட்பட பலரும் பணம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (12)
சரி...சரி...சுடுகாடு சும்மாதான்கிடக்குது அ.தி.மு.கபுதைச்சிடுவோம்
யாரு கேட்டா..
ரொம்ப முக்கியம் நாட்டுக்கு... அப்ப அப்ப நானும் ரவுடி தான் (வடிவேல் காமடி போல) ..என்று ...இவர் தியானம் பண்ணி பின்னால் அடிச்ச பல்டி எல்லோரும் பார்த்து விட்டனர்.. மக்கள் அவர்கள யாரையும் நம்ப யோசிக்க வேண்டும்.. ஒரே கொள்கை..(என்ன கொள்கை??) இவர்களோடு கூட்டணிக்கு ஒன்றிய கட்சி துடிப்பது விவஸ்தை இல்லாத கொள்கை..
பாஜக பாவம், அவர்களும் அதிமுக என்ற நொண்டிக் குதிரையை எப்படியாவது சரி செய்து அதன் மீது சவாரி செய்து பாராளுமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளையாவது ஜெயித்து விடலாம் என்ற கனவு அம்போ தானா?
அதிமுக வலுப்பெற வாய்ப்பில்லை