Load Image
Advertisement

கர்நாடக தேர்தல் தோல்வியை பற்றி மனம் திறக்கிறார் அண்ணாமலை

 People asked who was BJPs chief ministerial candidate: BJP state president Annamalai opens up about Karnataka election defeat   கர்நாடக தேர்தல் தோல்வியை பற்றி மனம் திறக்கிறார் அண்ணாமலை
ADVERTISEMENT
கர்நாடக சட்டசபை தேர்தலில், 68 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக கட்சியால் நியமிக்கப்பட்ட, பா.ஜ.,வின் தமிழக தலைவர் அண்ணாமலை, அவற்றில் 37 தொகுதிகளை வென்றெடுத்தார். இருப்பினும் பா.ஜ., தேர்தலில் தோற்றுவிட்டது. அந்த தோல்வியை பற்றி பெரும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரசின் எழுச்சியாகவும், பா.ஜ., சரிவின் ஆரம்பமாகவும் இந்த தேர்தல் முடிவுகள் சித்தரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், தேர்தலில் உண்மையில் என்ன நடந்தது; தோல்விக்கு காரணம் என்ன? மோடி மேஜிக் என்ன ஆயிற்று என்பது உள்ளிட்ட கேள்விகளோடு அண்ணாமலையை சந்தித்தோம்.

அவர் மனம் திறந்து, கூச்சமில்லாமல், நியாயப்படுத்தும் போக்கில்லாமல் கொடுத்த பதில்கள் புத்துணர்ச்சியாக இருந்தன. பேட்டி வருமாறு:


* கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வியை சந்தித்ததற்கு காரணம் என்ன? அடுத்து வரும், ஐந்து மாநில தேர்தல்களிலும் , லோக்சபா தேர்தலிலும் இந்த தோல்வி எதிரொலிக்குமா?




கர்நாடகாவில் நடந்தது தனித்துவமான தேர்தல். இந்தியாவிலேயே அதிக அளவில் கட்சி தாவல் நடப்பது கர்நாடகாவில் தான். நான் அங்கே எஸ்.பி.,யாக பணியாற்றியபோது, ஒரு கட்சியில் இருந்த தலைவர்கள், இன்று வேறொரு கட்சியில் இருக்கின்றனர். கர்நாடகாவில் அரசியல் சித்தாந்தம் என்பது தலைவர்களுக்கே குறைவு. கர்நாடக காங்கிரசின் முகம் சித்தராமையா. அவர், 14 ஆண்டுகளுக்கு முன் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இன்றைக்கு அவருக்கு வயது 75. ஆக, 60 வயது வரை அவர் சோஷலிஸ்ட் சித்தாந்தத்தில் இருந்தவர். தேவகவுடாவுடன் வெகு காலம்
பயணித்தவர். அதே போல, பா.ஜ.,வின் முகமாக இன்று இருப்பவர் பொம்மை. சித்தராமையா காங்கிரசுக்கு போனபோது தான் பா.ஜ.,வை நோக்கி வந்தார். அவரும் சோஷலிச சித்தாந்தத்தில் பயணித்தவர் தான். கர்நாடகத்தின் தனித்துவத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம்; கர்நாடகா என்பது ஆறு மாநிலங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது. அதனால் தான், கர்நாடகாவை மும்பை கர்நாடகா, கடலோர கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகா, மைசூரு கர்நாடகா, பெங்களூரு கர்நாடகா, மத்திய கர்நாடகா என்று ஆறு பகுதிகளாக பிரித்து பார்க்கின்றனர். ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு வரலாறு, கலாசாரம் மற்றும் பழக்க வழக்கம் இருக்கிறது. ஒவ்வொரு பகுதி மக்களின் எதிர்பார்ப்பும்
வேறு வேறாக இருக்கிறது.


கர்நாடகாவின் மைசூரு, மத்திய மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் காங்., எப்போதும் வலுவாக இருக்கிறது. கடலோர மற்றும் மும்பை கர்நாடகா பகுதிகளில் பா.ஜ., வலுவாக இருக்கிறது. பெங்களூரை பொறுத்த வரை, இரு கட்சிகளுக்கும் சமமான அளவில் செல்வாக்கு உள்ளது. மூன்று பிரதான பகுதிகளில் காங்., வலுவாக இருப்பது, அவர்களுக்கு எப்போதும் சாதகமாகவே இருக்கிறது. இதில் தான், நாம் கடுமையாக போராடி ஓரளவுக்கு வெற்றி பெற்று வந்திருக்கிறோம். இதை வைத்து தான் சொல்கிறேன், கர்நாடக அரசியல் களம் தனித்தன்மை பெற்றது. கர்நாடகாவில் மூன்று பிரதான கட்சிகள் போட்டியிட்டன. 2018 சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு, 36 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு, 38.6 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.
ஆனால், காங்கிரசை விட பா.ஜ.,வுக்கு எண்ணிக்கை அடிப்படையில் எம்.எல்.ஏ.,க்கள் அதிகம்.

காரணம், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பெற்ற ஓட்டுகள். இந்த முறையும் பா.ஜ., அதே, 36 சதவீத ஓட்டுகளை பெற்று விட்டது. ஆனால், ஏற்கனவே பெற்ற ஓட்டுகளை விட ம.ஜ.த., 5 சதவீத ஓட்டுகளை இழந்து விட்டது. அந்த ஓட்டுகள் அனைத்தும் காங்., பக்கம் போய் விட்டன. அதனால், கடந்த முறை, 80 'சீட்'களை பெற்ற காங்., இன்றைக்கு 136 சீட்களைப் பெற்று விட்டது. 35 சீட்களை பெற்றிருந்த ம.ஜ.த., கட்சி, 19 சீட்களாக சுருங்கி விட்டது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் இது தான் நடந்தது. ஆக, மூன்று கட்சிகள் போட்டி போடும்போது, இரு பிரதான கட்சிகளில் எந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்பது, மூன்றாவது கட்சி பெறும் ஓட்டுகளை பொறுத்து அமையும் என்பது கர்நாடக தேர்தல் உணர்த்தி உள்ளது. இதனால் தான், கர்நாடக தேர்தல் வெற்றி, தோல்வியை முன் கூட்டியே யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னொரு முக்கியமான காரணம், தேர்தல் நேரத்தில் கட்சிக்கு எதிராக வெளியே போன அதிருப்தியாளர்கள். 2018 தேர்தலில் ரெட்டி சகோதரர்கள் வெளியேறி, பெரும் சவாலாக இருந்தனர். இந்த தேர்தலில் ஜகதீஷ் ஷெட்டர் மற்றும் லட்சுமண் சவதி வெளியேறி பெரும் சவாலாக மாறினர். அவர்களோடு, சீட் கிடைக்காத பலரும் வெளியேறி, பா.ஜ.,வுக்கு எதிராக போட்டி போட்டதன் விளைவாக, பல இடங்களில் பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இதனால் மாலு, புத்துார், கோலார், பெங்களூரை சுற்றி உள்ள பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். அதற்காக, கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கொள்கையில் இருந்து மாற முடியாது. கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒரு கட்சி தோற்றால், அக்கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும். வெற்றியடைந்தால், மத்தியில் ஆட்சிக்கு வராது. இது நீண்ட கால வரலாறாக இருக்கிறது. ஆக, சட்டசபை தேர்தல் வேறு, லோக்சபா தேர்தல் வேறு என அம்மாநில மக்கள் பிரித்துப் பார்த்து ஓட்டளிக்கின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 27 தொகுதிகளில், 25ல் பா.ஜ., வெற்றி பெற்றது. இப்போது இருக்கும் சூழலை வைத்து சொல்கிறேன். அதே வெற்றியை 2024 லோக்சபா தேர்தலிலும் கட்டாயம் பா.ஜ., பெறும். இது தான் கர்நாடகாவுக்கும், டில்லிக்கும் இருக்கும் வழி வழியான தொடர்பு.


Latest Tamil News

*-கர்நாடகத்தில் பா.ஜ., தனக்கான 36 சதவீத ஓட்டு வங்கியை அப்படியே தக்க வைத்து கொண்டு இருக்கிறது. ஆனால், 2019 லோக்சபா தேர்தலில் கிடைத்த,' மோடி மேஜிக்' ஓட்டுகளான 15 சதவீதம் என்னாயிற்று?



நான் ஏற்கனவே சொன்னது தான். 2018 சட்டசபை தேர்தல் நடந்த போது, மோடி ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தது. ஆனாலும், கர்நாடக மக்களை பொறுத்தவரை, சட்டசபை தேர்தல் என்றால், உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மக்கள், தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்னைகளின் அடிப்படையில் ஓட்டு போடுகின்றனர். உள்ளூர் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என பார்த்து ஓட்டளிக்கின்றனர். குறிப்பாக, ஜாதியை பிரதானமாக வைத்து ஓட்டளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதே நேரம், லோக்சபா தேர்தல் என்று வந்துவிட்டால், மோடியை வளர்ச்சிக்கான குறியீடாக தான் கர்நாடக மக்கள் பார்க்கின்றனர். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், ஜாதி, மதம், உள்ளூர் பிரச்னைகள் எதையுமே மக்கள் பார்க்கவில்லை. இது எல்லாவற்றையும் கடந்த மனிதராக மோடியை அம்மக்கள் பார்க்கின்றனர். அதனால் தான், 2018 சட்டசபை தேர்தலை விட, கூடுதலாக, 'மோடி மேஜிக்' வாயிலாக, 16 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோற்று இருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில், ஏற்கனவே பெற்ற 52
சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்று வெற்றி அடையும்.

* ம.ஜ.த.,வின் ஓட்டுகள், காங்கிரசுக்கு போய் விட்டதாக சொல்கிறீர்கள்; அதை ஏன் பா.ஜ.,வால் பெற முடியவில்லை?



தெற்கு கர்நாடகாவில் எப்போதுமே ம.ஜ.த., வலுவாக இருக்கும். இந்த முறை தெற்கு கர்நாடகாவில் ம.ஜ.த.,வின் ஓட்டுகளை பா.ஜ., பெற்று இருக்கிறது. மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் அக்கட்சியின் ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு வந்திருக்கின்றன. அதே நேரம், மற்ற பகுதிகளில், அது காங்.,குக்கு போய் இருக்கின்றன.
கர்நாடகாவில், பா.ஜ.,வின் வளர்ச்சி, ம.ஜ.த., கட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. அதனால், அக்கட்சித் தொண்டர்கள் பா.ஜ.,வை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என்ற எண்ணத்துக்கு வந்தனர். அதையடுத்தே, ஜெயிக்கக் கூடிய கட்சி என்ற எண்ணத்தில், ஒட்டுமொத்தமாக காங்.,குக்கு இம்முறை ஓட்டளித்திருப்பதாக நம்புகிறேன்.

* தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் பெரும் குழப்பம் நிலவி, பலரும் அதிருப்தியாளர்களாக மாறியதால், பா.ஜ.,வுக்கு தோல்வி ஏற்பட்டதா?



பா.ஜ., வேட்பாளர் தேர்விற்கு பின் இத்தனை பெரிய அதிருப்தி ஏன் என்று பலரும் கேட்கின்றனர். 2018க்கு பின், பலரும் காங்.,கில் இருந்து விலகி பா.ஜ.,வுக்கு வந்தனர்.
அவர்களில் பலருக்கும், சீட் கொடுக்க வேண்டிய கட்டாயம் தலைமைக்கு இருந்தது. அப்படி செய்யும் போது, இத்தனை காலம் பா.ஜ.,வில் அரசியல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, கோபத்தை ஏற்படுத்தியது. இதில் பலரையும் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. தனி மனிதனுக்காக கட்சி தலைமை இல்லை என்பதை உணர்த்தி, மாற்றத்தோடு கட்சி செல்லும்போது, சில நேரங்களில் மோசமான முடிவுகளையும் சந்திக்க நேரிடும் என்ற உண்மை புரிகிறது. அதற்காக, மாற்றத்தை நோக்கிய பயணத்தை, பா.ஜ., விட்டு விடாது. மொத்தத்தில் கர்நாடக தேர்தல், நல்ல அனுபவத்தை அளித்துள்ளது.

* 'பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம்' என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி கொடுத்து, உங்களை வலையில் சிக்க வைத்து விட்டதா? அனுமனை காக்க புறப்பட்ட உங்கள் படையினரால், காங்கிரஸ் சிறுபான்மையினர் ஓட்டுகளை அள்ளி விட்டதா?



'பஜ்ரங் தள்' அமைப்பை தடை செய்வோம்' என காங்., அறிவிப்பு செய்தது, பா.ஜ.,வுக்கு 2 சதவீத ஓட்டுகளை கூடுதலாக்கி இருப்பதாக தான் சொல்வேன். இல்லையென்றால், மைசூரு உள்ளிட்ட சில பகுதிகளில், முன்பை விட பா.ஜ., கூடுதலாக ஓட்டு வாங்கி இருக்க முடியாது. அதே நேரம், வழக்கமாக ம.ஜ.த.,வுக்கு போய் கொண்டிருந்த முஸ்லிம் ஓட்டுகள், இம்முறை காங்கிரசுக்கு போனதற்கு காரணம், அக்கட்சியால் பா.ஜ.,வை வீழ்த்த முடியாது என்ற நினைப்பு தான். 'பஜ்ரங் தள்' தடை அறிவிப்பால் அல்ல.

*பா.ஜ.,வின் முகமாக அறியப்பட்ட எடியூரப்பாவை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்காததால், பெரும் பின்னடைவு ஏற்பட்டதா?



காங்கிரசை பொறுத்தவரை, சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக சொல்லி ஓட்டு கேட்டனர். காங்., தொண்டர்களுக்கு அவர் தான் காங்.,கின் முகமாக தெரிந்தார். அவரை அடுத்து சிவகுமாரும் இருந்தார். ஆனால், பா.ஜ.,வில் அப்படி முதல்வர் வேட்பாளர் என யாரையும் முன்னிலைப்படுத்தாதது ஒரு பின்னடைவு தான். பொது மக்கள் இதை என்னிடமே, 'உங்கள் முதல்வர் வேட்பாளர் யார்?' என கேட்டனர். எடியூரப்பாவை, 2018 தேர்தலின் போது முன்னிலைப்படுத்தினோம்; வெற்றி பெற்றோம்.
அதற்கு முன்பும் இதே போன்றதொரு சூழல் இருந்தது. ஆனால், 2018க்குப் பின், இரு ஆண்டுகள் பதவியில் இருந்த எடியூரப்பா, அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்த பின், அடுத்த தலைவரை அடையாளம் காணுவதில் சிரமம் இருக்கிறது. அடுத்த உள்ளூர் தலைவர் ஒருவர், பா.ஜ.,வின் அடையாளமாகும் வரை இந்தச் சிக்கல் இருக்கத்தான் செய்யும்.


*பா.ஜ., ஆட்சியில், 40 சதவீத கமிஷன் நிலவியதாக பரவலாகப் பேசப்பட்டது. அது, தோல்விக்கு காரணமாக அமைந்ததா?



இதை உள்ளூர் பா.ஜ.,வினர், சாதுர்யமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். காங்., இப்படி பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் வைத்தபோது, அது தொடர்பான ஆவணங்களை வெளியிடச் சொல்லி, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தி இருக்க வேண்டும்.
மக்கள் மத்தியில் இதை விவாதமாக எடுத்துச் சென்று, பா.ஜ.,வுக்கும், ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை விளக்கி இருக்க வேண்டும். கர்நாடக தேர்தலில் உள்ளூர் பா.ஜ.,வுக்கு உதவிகள் செய்யத்தான் நான் அங்கே போனேன். நான் என்ன தான், பா.ஜ., ஊழல்கள் குறித்து விளக்கம் சொன்னாலும் அது எடுபடாது. ஏனென்றால், தேர்தல் முடிந்ததும், நான் தமிழகம் திரும்பி விடுவேன்
என்பது அம்மக்களுக்குத் தெரியும். அதனால், என் கூற்றை மக்கள் ஏற்க மாட்டார்கள். உள்ளூர் பா.ஜ.,வினர் அதை எதிர்கொண்டு விளக்கம் சொல்லி இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சியினரை விட, கொஞ்சம் வேகமான அரசியலை பா.ஜ., முன்னெடுத்திருக்க வேண்டும். அந்த வகையில், பா.ஜ., தரப்பிலும் சில குறைகள் இருக்கத் தான் செய்தன.

* கர்நாடகத்தில் ராகுல், 52 தொகுதிகள் வழியே மேற்கொண்ட நடைபயணத்தால், 37 தொகுதிகளை காங்கிரஸ் வென்றெடுத்ததாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால், ராகுல் நடைபயணத்தால் காங்கிரசுக்கு நல்ல பலன் கிட்டியதா?



மொத்தம், 52ல் 37 என்பதும், 224ல் 136 என்பதும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வெற்றியாக தான் பார்க்க முடியும். ராகுல் நடைபயணம், காங்கிரசுக்கு எங்கெல்லாம் வலுவான செல்வாக்கு உள்ளது என்பதை வைத்து தான் திட்டமிடப்பட்டது. குறிப்பாக, எங்கு சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ளனரோ, அங்கெல்லாம் நடைபயணம் செல்ல
தீர்மானிக்கப்பட்டது. கடந்த 10 தேர்தல்களை எடுத்துக் கொண்டால், அந்தப் பகுதிகளில், ஏழு தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட தொகுதிகளில் நடைபயணம் போய்விட்டு, அதனால் வெற்றி கிடைத்து விட்டது
என்றால், அதை ஏற்க முடியவில்லை.


*

லிங்காயத்து ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைக்காமல் போனது ஏன்?



கர்நாடகாவில், 15 ஆண்டுகளாக தான் பா.ஜ., பிரதான கட்சி. ஆனால், காங்., 80 ஆண்டுகளாக அங்கே பிரதான கட்சியாக இருக்கிறது. அந்தக் கட்சிக்கு தான் லிங்காயத்துகள் தொடர்ச்சியாக ஓட்டளித்தனர். லிங்காயத்தான வீரேந்திர பாட்டீல், காங்., தரப்பில் கர்நாடகாவில் முதல்வராக இருந்தார். அப்போது ராஜிவ் பிரதமர். பெங்களூருக்கு வந்தார். பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. 'வீரேந்திர பாட்டீல் மாற்றப்படுவாரா?' என, பத்திரிகையாளர்கள் கேட்டனர். 'பொறுத்திருந்து பாருங்கள்' என சொல்லி விட்டு, விமானம் ஏறி டில்லி சென்று விட்டார் ராஜிவ்.
அவர் சென்ற பின், வீரேந்திர பாட்டீல் மாற்றப்பட்டதாக காங்., தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இது, லிங்காயத்து மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அப்போதில் இருந்து தான், காங்.,குக்கு எதிரான மனநிலைக்கு அந்த மக்கள் வந்தனர். அதன்பின், அவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கின்றனர். சொல்லப் போனால், 80 சதவீத லிங்காயத்துகள் இப்போதும் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கின்றனர்.
இம்முறை, அது, 10 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்த குறைவு தான், மும்பை கர்நாடகா எனப்படும் பகுதியில், பா.ஜ.,வின் வெற்றியில் பெருமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
மற்றபடி, லிங்காயத்துகள் முழுமையாக பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளிக்கவில்லை.

* இந்த தேர்தல் பணியில் தாங்கள் கற்றுக்கொண்டது என்ன?



அரசியல் என்பது மேலோட்டமானது அல்ல. நுணுக்கமாகவும், ஆழமாகவும், வேரோடும் தேர்தல் அரசியலை பார்க்க வேண்டும் என்ற ஒரு பாடம், கர்நாடக தேர்தல் பணியில் இருந்து கிடைத்திருக்கிறது.
தோல்வி தான், அதிக அனுபவத்தை கொடுக்கிறது. கர்நாடகாவில் வெற்றி பெற்றிருந்தால், இந்த அளவுக்கு நுணுக்கமாக தேர்தல் அரசியலை ஆராய்ந்து பார்த்திருக்க முடியாது.
தமிழகத்தில் கூட இந்தளவுக்கு சிக்கல்கள் இருக்காது. கர்நாடக பா.ஜ.வில், புது ரத்தம் பாய்ச்சப்படும். கட்சி விரைவில் எழுச்சி பெறும் என்பதும் தெரியும். அதனால் தான், வேட்பாளர் தேர்வின் போதே கடுமை காட்டப்பட்டு, புது முயற்சி எடுக்கப்பட்டது.

* மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பா.ஜ., மேலிடத்தின் நிலைப்பாடு என்ன?



மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தாவா பிரச்னையில், சட்டத்தின் படி, புதிய அணை கட்ட வேண்டும் என்றால், அணைக்கு கீழ் நிலையில் இருக்கும் மாநிலங்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அம்மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் புதிய அணை கட்ட முடியாது என்பதை, பா.ஜ., உணர்ந்திருக்கிறது.
இதை கர்நாடகாவில் பா.ஜ., அரசு இருந்தபோது, மத்திய அரசு தெளிவாக புரிய வைத்து விட்டது. சட்டப்படி காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என்பது காங்.,குக்கும் நன்கு தெரியும். கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மட்டும் தான், அணை கட்டியே தீருவோம் என்கிறார். முதல்வர் சித்தராமையா சொல்லவில்லை.
இந்த விஷயத்தில் மக்கள் உணர்வுகளை கிளறிவிட்டு, சிவகுமார் அரசியல் செய்யப் பார்க்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை சொல்லாமல், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி ஏதோ முனகி கொண்டிருக்கிறார். தமிழக பா.ஜ.,வை பொறுத்தவரை, அணை கட்டக் கூடாது என்பதே நிலைப்பாடு.
-

* பார்லிமென்டில் செங்கோல் நிறுவப்பட்ட விஷயத்தை வைத்து, தீவிர எதிர்ப்பு அரசியல் நடக்கிறது. தமிழகத்திற்கு கவுரவம் சேர்க்கும் இந்த விஷயத்தில் எதிர்ப்பு பிரசாரத்துக்கு பின்புலம் என்ன?



'நுாறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட வேண்டும்' என 2015ல், பிரதமர் மோடி உத்தரவிட்டு, இன்று 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது.
தமிழகத்தில் 75 ஆண்டகாலமாக அரசியல் செய்த கட்சிகள் எல்லாம், தமிழக எல்லையைத் தாண்டி, தமிழை எடுத்துச் செல்லவில்லை. கையாலாகாத்தனமாக இருந்து செயல்பட்டவர்கள், ஒரு நாளும் இப்படியெல்லாம் யோசித்தது கூட கிடையாது. சர்வதேச அளவில் தமிழுக்கு பெருமை சேர்த்து விட்டார் பிரதமர். மற்ற மொழிகளுக்கு இல்லாத முக்கியத்துவம் தமிழுக்கு எல்லா நிலைகளிலும் பிரதமரால் கொடுக்கப்படுகிறது.
பிரதமரை தமிழராக பார்க்கிறேன் என அடிக்கடி சொல்கிறேன்.தமிழ் கலாசாரத்தின் வடிவமாக இருக்கும் சோழ மன்னர்கள் பின்பற்றிய மரபான செங்கோலை, தமிழை போற்றும் மனிதரான பிரதமர், பார்லிமென்டில் வைத்திருக்கிறார் என்றால், நம் மாநிலத்துக்கான சிறப்பு தானே அது! தமிழர்களுக்கான பெருமை தானே அது!
வட மாநில மன்னர்கள் எவ்வளவோ பேர் இருந்துள்ளனர். அவர்கள் பின்பற்றிய மரபுகளையெல்லாம் பார்லிமென்ட் திறப்பு விழாவின் போது செய்யாமல், நம் மன்னர்கள் பின்பற்றியதை செய்கிறார் என்றால், அவர் தமிழ் மீதும், தமிழ் கலாசாரத்தின் மீதும், பண்பாட்டின் மீதும் கொண்டிருக்கும் அன்பும், ஈர்ப்பும் தான் காரணம்.
இவ்வளவு துாரம் தமிழ் மொழி, மரபு, கலாசாரம் மீது பற்று கொண்ட பிரதமரை செங்கோல் விஷயத்தில் குற்றம் சொல்வோரை, வரலாறு என்றைக்கும் மன்னிக்காது.



வாசகர் கருத்து (55)

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

    வரவேற்க விமானநிலையம் போகாதது ஏன் என்று கொஞ்சம் யாரவது கேட்டு சொல்லுங்க

  • A. Muthu -

    பக்குவப்பட்ட பதில்.

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

    சீட்டு கிடைக்காமல் போட்டி என்பது பி ஜெ பி யில் மட்டுமே நிகழ்ந்தது போல நினைப்பு. அது காங்கிரஸுக்கு கூட நேர்ந்தது ..

  • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

    என்ன நீங்க நினைச்சபோல கட்சி தாவ காங்கிரஸ் விடவில்லை அதனால் தோல்வி கருநடக்க மட்டும் அல்ல இந்தியவே பலதரப்பட்ட மக்களின் கூட்டமைப்பு இங்கே ஒரு உ பி மாநிலத்தை மட்டும் நினைத்து கொண்டு மதவாதம் மட்டுமே கொண்டு திரியும் உங்களுக்கு இனிதான் சரிவு ஆரம்பம்

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    நல்லதொரு அலசல். அவர் சொல்ல விட்டுப்போன ஓன்று என்னெவென்றால், மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சி தோற்கும், எதிர் கட்சியே வெற்றி பெறும். அதை மாற்ற முடிய வில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement