புதுடில்லி: லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியை அமைப்பது குறித்து, வரும் 23ல், பீஹார் மாநிலம் பாட்னாவில், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க உள்ளது. நாளை நடக்கவிருந்த இந்தக் கூட்டம், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோரின் வருகைக்காகவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, காங்., தரப்பில் இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தல், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு, சவால் வாய்ந்ததாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
பா.ஜ.,வை வீழ்த்த, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரள முடிவு செய்துள்ளன.
முயற்சி
காங்., உடன் கூட்டணி அமைக்க விரும்பாத, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஆகியோர், காங்., அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க முயன்றனர்.
பின், இருவரும் அந்த முயற்சியை கைவிட்டனர். இதையடுத்து, பீஹாரில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி, தேஜஸ்வி யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகள் கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் முழு நேரமாக ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், ஆம் ஆத்மி முதல்வரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை சந்தித்து பேசி உள்ளார்.
இதையடுத்து, அனைத்து எதிர்க்கட்சிகளையும் பாட்னாவுக்கு அழைத்து, எதிர்க்கட்சிகளின் பலத்தை காட்டி, மத்தியில் ஆளும் பா.ஜ.,வை அசைத்துப் பார்க்க, முதல்வர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார்.
இதற்கான கூட்டத்தை, நாளை நடத்தவும் திட்டமிட்டிருந்தார்.
இது தொடர்பாக, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.
ஆனால், ராகுல் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதால், வேறு வழியில்லாமல், எதிர்க்கட்சிகள் கூட்டம், 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ராகுலால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களிடையே முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெல்ல முடியும்
இந்நிலையில், வரும் 23ம் தேதி திட்டமிட்டபடி, பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் இருவரும் நிச்சயம் பங்கேற்க உள்ளனர். இதை கார்கேயே உறுதிப்படுத்தி உள்ளார்.
நாளை நடக்கவிருந்த கூட்டம், கார்கே, ராகுல் வருகைக்காக, 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு காங்., தரப்பில் இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இது குறித்து, காங்., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்ட சபை தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்தி, காங்., அபார வெற்றி பெற்றது.
இது, கட்சிக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கை காட்டுகிறது.
இதன் வாயிலாக, நாடு முழுதும் பா.ஜ.,வுக்கு மாற்று காங்., தான் என்பதையும், காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வை வெல்ல முடியும் என்பதையும் உணர்த்துகிறது.
இரண்டாவதாக, 2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வை எதிர்த்து, ராகுலால் மட்டுமே குரல் கொடுக்க முடியும்.
அவரை முன்னிறுத்தியே பிரசாரம் இருக்கும். இந்த இரு முக்கிய காரணங்களை, 23ல் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நிச்சயம் எடுத்துரைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் ஓட்டுகளை பிரிக்க முடியாது என, எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
இதனால், 450 தொகுதிகளில் வெற்றி பெறுவது; அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவு பெற்ற பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, 23ல் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (3)
தலைவர்களின் கூட்டத்தில் பப்பு க்கு என்ன வேலை. அப்ப பப்பு தான் தலைவர் என்றால் கார்கே க்கு என்ன வேலை. கண் அடித்து கட்டி பிடிக்க வா
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை.
Good initiative Good challenge to BJP. Now only the cases will reach a logical end