ADVERTISEMENT
மதுரை : வைகையில் ஆண்டுக்கு 9 மாதங்கள் தண்ணீர் வழிந்தோடும் மதுரை குருவித்துறை அருகே உள்ள சிற்றணையை சுற்றுலா தலமாக அறிவிக்க அரசு முன்வரவேண்டும்.
கோயில்களைத் தாண்டி மதுரையில் இளைஞர்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு இடங்கள் மிகக்குறைவுதான். நீர்விளையாட்டுகளும், இயற்கை சூழ்ந்த பசுமை இடங்களும் வயது வித்தியாசமின்றி இளையோர், பெரியோரை நிச்சயம் கவரும்.
நீர்வளத்துறையின் அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய், செல்லுார் மற்றும் வண்டியூர் கண்மாய்கள் தேர்வாகின. இவற்றில் வண்டியூரில் மட்டுமே பணிகள் நடக்கிறது. சாத்தையாறு அணை பருவமழை தவறாமல் பெய்தால் மட்டுமே 6 மாதங்கள் வரை நிரம்பும். இதனால் அங்கு சுற்றுலா தலமாக்குவது இயலாத விஷயமாக உள்ளது.
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி நான்காண்டுகளாக பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து கிடக்கிறது. மதுரையில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள குருவித்துறையில் சிற்றணை அணைக்கட்டு உள்ளது. தேனி மாவட்டத்தின் வைகை அணையில் இருந்து பேரணை வழியாக தண்ணீர் இங்கு பாய்கிறது. மதுரை, திண்டுக்கல் பகுதிகளை இணைக்கும் வகையில் அரைவட்ட வடிவில் அரை கி.மீ., நீளத்திற்கு தடுப்பணையாக கட்டப்பட்டுள்ளது.
மழைக் காலத்தில் சிற்றணையில் இருந்து தண்ணீர் பிரிந்து பாசனத்திற்கு செல்கிறது. மீதி ஆற்றில் செல்கிறது. ஆற்றில் செல்லும் பாதையில் படிக்கட்டுகள் வழியாக தண்ணீர் பாய்ந்தோடும் அழகே தனிதான். அணைக்குள் இறங்குவதற்கு நீர்வளத்துறையின் சிறிய படிக்கட்டுகள் உள்ளன. இதன் வழியே எல்லோரும் இறங்கி குளிப்பது சிரமம்.
அருகிலேயே ஆற்றையொட்டி சரிவான இடத்தில் கைப்பிடி சுவர்களுடன் அகல படிக்கட்டுகள் அமைத்தால் தடுப்பணை பகுதியில் நடந்து சென்று குளிக்கலாம். ஆற்றின் கரையில் நீர்வளத்துறை இடம் இருப்பதால் பூங்கா, கழிப்பறை, உடை மாற்றும் அறை அமைக்கலாம். பார்க்கிங் அமைக்கவும் போதுமான இடவசதி உள்ளது. ஆண்டில் 8 முதல் 9 மாதங்கள் (செப்டம்பர் முதல் ஏப்ரல் ) வரை தண்ணீர் வழிந்தோடும் என்பதால் சுற்றுலா தலமாக்குவதற்கான அனைத்து தகுதிகளும் சிற்றணைக்கு உள்ளது. சுற்றுலா துறை அரசுக்கு பரிந்துரை செய்தால் மதுரையில் மிகச்சிறிய நீர்வீழ்ச்சியுடன் கூடிய பொழுதுபோக்கு இடம் தேர்வாகும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!