வனத்துறையில் என்.ஓ.சி.,க்கு ரூ. 5 லட்சம் லஞ்சம்: அம்பலப்படுத்தியது தி.மு.க., பேச்சாளரின் ஆடியோ

முன்பு அமைச்சரின் பெயரில், ஏக்கருக்கு ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் மாற்றத்துக்குப் பின், ஏக்கருக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சம் வரை லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
அதேபோன்று, 'ஆன்லைன்' கலந்தாய்வில், 120க்கும் அதிகமான ரேஞ்சர்கள் இடமாறுதலிலும் பல கோடி ரூபாய் வசூல் நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, கடந்த மே 22ல், 'தினமலர்'நாளிதழில், 'வனத்துறையில் 'காட்டுத்தனமாக' வசூல் வேட்டை' என்ற தலைப்பில், விரிவான செய்தி வெளியானது.

ஆடியோ வைரல்
அதில் வெளியான தகவல்களை, உறுதிப்படுத்தும் வகையில், தற்போது ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. தி.மு.க., தலைமைக்கழகப் பேச்சாளரான திருப்பூர் கூத்தரசன், 70, பேசும் அந்த ஆடியோ, தி.மு.க.,வட்டாரங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தி.மு.க.வைச் சேர்ந்த மற்றொரு பேச்சாளரிடம் கூத்தரசன் பேசும் அந்த ஆடியோவில், வனத்துறையில் என்.ஓ.சி., பெறுவதற்கு, கோவை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி பத்மநாபன் பரிந்துரையில், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் பி.ஏ., என்று சொல்லப்படும் டாக்டர் ரவீன், ஏக்கருக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதை அவர் விளக்குகிறார்.
அந்த ஆடியோவில் கூத்தரசன் பகிர்ந்து கொள்ளும் தகவல் இதுதான்...
''மந்திரியோட பி.ஏ., கூப்பிட்டார்னு, நாங்க நாமக்கல் போனோம். என் கூட கனிமொழி பத்மநாபன், திருப்பூர் சுப்பிரமணியம் வந்தாங்க. அங்க மந்திரியோட பி.ஏ., டாக்டர் ரவீனை சபாஷ் ஓட்டல்ல சந்திச்சுப் பேசுனோம். அவர், நாலு ஏக்கருக்கு 20 லட்ச ரூபா கொடுங்கன்னு கேட்டார். எதுக்குங்க 20 லட்சம்னு கேட்டதுக்கு, செலவு இருக்குங்க என்றார்.
நமக்கு செலவு இருக்குங்கிறதுக்காக, பொது மக்கள் பணத்துல பண்ண முடியுமா... இதுக்கு கடந்த ஆட்சியே இருந்துட்டுப் போகட்டுமே... லஞ்சம், ஊழல் அதிகம்னு பேசித்தானே, தளபதி ஆட்சியைக் கொண்டு வந்தோம் என்று நான் கேட்டேன்.
உடனே 16 லட்ச ரூபாய் கொடுங்கள் என்றார். அதற்கு மேலும் பேசினால் நன்றாக இருக்காது என்று பேசவில்லை. இரண்டு மணி நேரத்தில், திருப்பூரிலிருந்து பணம் வந்தது.
நாமக்கல்லில் 16 லட்ச ரூபாயைக் கொடுத்து விட்டு, திருப்பூர் ரோட்டில் 20 கி.மீ., துாரம் வந்ததும், எங்களைத் திரும்பக் கூப்பிட்டு, பணத்தைத் திரும்பக் கொடுத்து விட்டனர்.
கேட்டதற்கு, 'வழக்கு இருக்கிறது' என்றார். கோர்ட் பிரச்னை தீர்வாகி, என்.ஓ.சி., என்று சொன்ன பின்புதானே இங்கு வந்ததாகச் சொன்னோம். அதன் பின், ஜூன் 10க்குள் முடித்துக்கொடுத்து பணம் வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அதற்கு முன்பே நான் சென்னை போய் விட்டேன். பின்பு திருப்பூர்க்காரர் (புரமோட்டர்) என்னைக் கூப்பிட்டு, 'வேலை முடிந்தது' என்று சொல்லி, ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார். அந்தப் பொண்ணுக்கும் கொடுத்தாச்சு என்றார்.
முதலில் அந்தப் பெண் என்னிடம், 'எல்லாம் நீங்களே பாத்துக்கோங்க' என்றார்.
மந்திரி பி.ஏ., 'நீங்க கனிமொழியிடம் பேசிக்கொள்ளுங்கள்' என்றார்.
ஆனால் பேப்பரை நான் மந்திரி கையில்தான் கொடுத்தேன். அதுவும் என்னுடைய லெட்டர் பேடில்தான் கொடுத்தேன்.
இதுபற்றி கேட்க, அந்தப் பொண்ணுக்கு நான் கூப்பிட்டபோது, அவருடைய அப்பா செல்வராஜ்தான் பேசினார். அப்புறம்தான் நான் சென்னைக்கு புகார் அனுப்பிவிட்டேன்.
அந்தப் பொண்ணுக்கு மந்திரி பி.ஏ., எவ்வளவு கொடுத்தாரு, மணி (புரமோட்டர்) எவ்வளவு கொடுத்தார்னு தெரியலை. ஆனா அந்தப்பணம் கூத்தரசனால்தானே வந்தது. விசாரணைக்கு அறிவாலயத்தில் கூப்பிட்டார்கள். வந்திருக்கிறேன். அந்தப் பொண்ணையும் வரச் சொல்லி இருக்கின்றனர்.
இவ்வாறு, கூத்தரசன் அதில் பேசியுள்ளார்.
'உண்மையை சொல்லியாச்சு'
இந்த உரையாடலில், வனத்துறை அமைச்சரின் பெயரில், என்.ஓ.சி.,க்கு ஏக்கருக்கு 5 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்குவது உறுதியாகியுள்ளது.
இதுபற்றி, திருப்பூர் கூத்தரசனிடம் கேட்டதற்கு, ''வனத்துறையில் நடக்கும் வசூல் பற்றி, 'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தேன். நடந்த உண்மையை அறிவாலயத்தில் சொல்லி விட்டேன். வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை,'' என்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இதற்கு என்ன பதில் சொல்வார், என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?
இதுதான் தி.மு.க., பாரம்பரியம்?
இந்த உரையாடலில் இடம்பெறும் கனிமொழி பத்மநாபன், 31, தற்போது தி.மு.க.,வில் கோவை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். சமீபத்தில், துாய்மைப் பணியாளர் நல வாரியத்தின் துணைத் தலைவராகவும், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உரையாடல் பற்றி அவரிடம் கேட்டபோது, ''நான் தி.மு.க., பாரம்பரியக் குடும்பத்தை சேர்ந்தவள். எம்.எஸ்.சி., எம்.பில்., படித்துள்ளேன். முதலில் ஐ.டி.,விங்க்கில் இருந்தேன். சிறு வயதில்வாரியத்தின் துணைத்தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு வந்துவிட்டதால், காழ்ப்புணர்ச்சியில் என் பெயரைக் கெடுக்க இப்படித் தகவல் பரப்புகின்றனர். பொறுப்பில் இருப்பதால் எனக்கு எல்லா அமைச்சர்களையும் தெரியும். ஆனால் எனக்கும், இந்த என்.ஓ.சி., மேட்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-
வாசகர் கருத்து (9)
அஞ்சு லட்சத்துக்கு மாறிய ‘செய்தி’ தனது கவனத்துக்கு வராததால் ஏற்பட்ட ‘நஷ்டத்தை’ கேஸ்களில் எண்ணிக்கையுடன் சரி பார்த்து வசூல் செய்துவிடுவார் அத்துடன் எல்லாத்துறைகளும் ரேட் ஏற்றும்போது முதல் அறிக்கை தர வேண்டுமென்று வாயமொழி உத்தரவு போட்டுவிடுவார்
இதுதான் முதல்வர் மேடைக்கு மேடை முழங்கும் திருட்டு திராவிடிய மாடல். ஆண்களுக்கு பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்ற பெண்ணுரிமை கட்டுமரம் இவர்களுக்கு வாங்கித்தந்த உரிமை.
தலைமைக்கு எவ்வளவு கமோடுத்தீங்க என்று கேட்கப்போகிறார், அவ்வளவுதான். இவ்வளவு வசூல் ஆகிறது என்று தெரிந்தால் தலைமைக்கு எவ்வளவு போயிற்று என்பதை சரிபார்த்து கொள்ளலாம் அல்லவா?
திமுக பாரம்பரிய குடும்பம் என்று தெளிவாக சொல்லிவிட்டார்.
ஊழல் ஊழலென்று சந்தி சிரிக்க நாற்புரமும் வசூல் வேட்டை நடந்தாலும் பேட்டைக்குப்பேட்டை மேடை போட்டு சுயபுராணம் பாடி எங்கள் நேர்மையை பற்றி பீத்திக்கொள்வோம். பேச்சாளரான திருப்பூர் கூத்தரசன், பழனிவேல் தியாகராஜன் போல் ஓரங்கட்டப்படுவார்.