ADVERTISEMENT
கடலுார்-தேசிய மாணவர் படையின் கடல்வழி பாய்மர படகு சாகச பயணத்தை கடலுாரில் கலெக்டர் அருண் தம்புராஜ் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு தேசிய மாணவர் படையின் கப்பல் படை பிரிவு மாணவர்கள் இணைந்து 302 கி.மீ., துாரம் கடல் வழியாக 3 பாய்மரப் படகில் சாகச பயணம் புதுச்சேரியில் நேற்று முன்தினம் துவங்கியது.
சாகச பயண குழுவினர், அன்று மாலை கடலுார் துறைமுகம் வந்தடைந்தனர். சாகச பயணத்தில் 25 மாணவியர் உட்பட 60 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களின் பயணத்தை கடலுார் துறைமுகத்தில் நேற்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் துவக்கி வைத்து பேசினார்.
பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்று, மீண்டும் அதே வழியில் வரும் 11ம் தேதி புதுச்சேரி செல்ல திட்டமிடப் பட்டுள்ளது.
லெப்டினன்ட் கமாண்டர்கள் லோகேஷ், கீர்த்தி நிரஞ்சன், சப் லெப்டினன்ட்டுகள் கோபிநாதன், மனோகரன், சீனிவாசன், மூத்த பயிற்றுனர்கள் மகேஸ்வரி, ராஜசேகர் மற்றும் கப்பல் படை பயிற்றுனர்களும், அவில்தார் அஜய்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர்.
இக்குழுவினர் ரத்த தான முகாம், மரக்கன்று நடுதல், கடற்கரை துாய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
ஜனவரி 2024ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றாகவும், தேசிய மாணவர் படை மாணவர்களின் திறனை மேம்படுத்துவதுடன், கடல் பயணம் குறித்த அச்சத்தை போக்கும் விதமாக இப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!