ADVERTISEMENT
வன உயிரினங்கள் குறித்து, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு உரைகள் நிகழ்த்தி வரும் திவ்யா பாரதி: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள மலையபாளையம்தான் சொந்த ஊர்.
ஆங்கில இலக்கியத்தில், எம்.ஏ., பட்டம் பெற்றேன். சிறு வயது முதலே, அரிய வகை உயிரினங்களை புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.
எங்கள் ஊருக்கு அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குள் பலமுறை போகும் வாய்ப்பும், அங்கு வனவிலங்குகளை பார்க்கும் வாய்ப்பும் அதிகமாக கிடைத்தது.
'நாம் பார்க்கும் அரிய காட்சிகள், நாளடைவில் மனத்திரையில் இருந்து அகன்று விடும் என்பதால், அவற்றை அப்படியே ஆவணமாக்கினால் என்ன?' என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது; பின், அதன்படி செயல்படத் துவங்கினேன்.
ஒரு முறை வால்பாறையில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு அருகே பயணித்த போது, சிறுத்தை ஒன்று குடியிருப்புகள் அருகே நுழைந்து விட்டதை பார்த்தேன்.
அங்கிருந்த தொழிலாளர்கள், கைகளை தட்டியும், ஒலி எழுப்பியும் அதை விரட்டினர். எந்த ஒரு ஆயுதம் எடுத்தும் அதைத் தாக்கவில்லை.
அப்போது தான், 'மனிதர் - மிருகங்கள் மோதல்' தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.
பெரிய கேமரா, ஸ்டாண்ட், லென்ஸ் உள்ளிட்டவற்றை சுமந்தபடி, வனத்திற்குள் செல்வதில், பெண் என்ற முறையில், எனக்கு சில சிக்கல்கள் இருந்தன...
காட்டுக்குள் இருக்கும் சூழல், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது; வன விலங்குகளால் ஆபத்து நேரிடலாம். காட்டு யானைகள் என்னை பலமுறை துரத்தி இருக்கின்றன.
கரடிகளின் நடமாட்டத்தையும், மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன்...
பந்திப்பூரில், 'பிரின்ஸ்' என்ற புலியை, புகைப்படம் எடுக்க, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முயற்சித்தேன்; 40 முதல், 50 நாட்கள் வனத்தில் அலைந்து திரிந்து, அந்த புலியை புகைப்படம் எடுத்தேன்.
காட்டுக்குள் போகும் போது மானின் உடலிலிருக்கும், 'உண்ணி' எனப்படும் ஒட்டுண்ணியானது, இலைகளில் தொற்றி, அப்படியே அது என் மீதும் ஏறி விடும்; பல இடங்களில் அட்டைகளிடம் கடிபட்டிருக்கிறேன்; தேன்கூடுகள் கலைந்து தேனீக்கள் என்னை துரத்திய அனுபவமும் உண்டு.
என் செயல்பாடுகள், 'காஸ்ட்லி'யான பொழுதுபோக்கு; அத்துடன், நல்ல உடல் நலமும், வலுவும், மன உறுதியும் தேவை.
இதில், ஈடுபட்டு பணம் ஈட்டவும் வழிகள் இருக்கின்றன. 'கைடு'களாக, 'நேச்சுரலிஸ்ட்'களாக, 'ரிசர்ச் ஒர்க்கர்'களாக பல துறைகளிலும், நம் அறிவை பயன்படுத்தி சம்பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!