மத்திய அரசு விதிகளுக்கு முரணாக தமிழக மின் விநியோக தர விதிகள்!
தமிழகத்தில் மின் விநியோகச் செயல்பாட்டுத் தர விதிமுறைகள், 2004ல் வகுக்கப்பட்டன. அதற்குப் பின், பல முறை மின் கட்டணம், விநியோக முறைகளில் மாற்றம் வந்த பின்னும், இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், 2020ம் ஆண்டில், மின் நுகர்வோருக்கான உரிமைகள் உள்ளடக்கிய மின்சார விதிமுறைகளை, மத்திய அரசு வகுத்துள்ளது.
அதன் அடிப்படையில், தமிழகத்திலும் மின் விநியோகச் செயல்பாட்டுத் தர விதிமுறைகளில், திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்காக, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், கடந்த ஏப்.,26ல் அறிவிக்கை வெளியிட்டு, மே 25 வரையிலும், மக்களிடமிருந்து ஆலோசனை மற்றும் ஆட்சேபங்கள் பெறப்பட்டுள்ளன.
கட்டாயம் திருத்தம் வேண்டும்
விநியோக முறைகளிலும், இழப்பீடு தொடர்பான விதிமுறைகளிலும் திருத்தம் செய்ய வேண்டுமென்று, பல்வேறு அமைப்புகள் சார்பிலும், ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதால், தனி வீட்டில் மின் தடை ஏற்பட்டால், அதை 4 மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும்; மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு, ஒரே பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில், மின் தடை ஏற்பட்டால் அதை 2 மணி நேரத்தில் பழுது நீக்கி, மின் விநியோகத்தைச் சீராக்க வேண்டும் என, கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு பெயர், மின் கட்டண விகித மாற்றத்துக்கும், மின் விநியோக செயல்பாட்டுத் தர விதிமுறைகளில், 7 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.
தாமதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு, ஒரு நாளுக்கு 100 ரூபாய் வீதம் மின் வாரியம் இழப்பீடு தர வேண்டும்; பத்து நாள் முதல் பல ஆண்டுகள் தாமதமானாலும், அதிகபட்ச இழப்பீடு ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
தாமதம் ஏற்பட்டாலும் அச்சமில்லை
இதுவும் 2004ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டதாகும். அதன்பின் ரூபாய் மதிப்பு, மின் கட்டணம், மின் நுகர்வோர் செலுத்தும் அபராதம், மின் விநியோகப் பொருட்களின் தரம், தொழில்நுட்பம் ஆகியவை பல மடங்கு உயர்ந்து விட்ட நிலையில், மின் வாரியம் தரும் இழப்பீடு மட்டும் அப்படியே உள்ளது. அதிலும் அதிகபட்சம் 10 நாட்களுக்கான இழப்பீடு மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால், நுகர்வோருக்கு சேவை வழங்குவதில், ஆண்டுக்கணக்கில் தாமதம் ஏற்பட்டாலும், மின் வாரிய அதிகாரிகள் அச்சப்படுவதேயில்லை.
2020ல், மத்திய அரசு வெளியிட்டுள்ள மின் விநியோக (நுகர்வோர் உரிமை) விதிமுறைகளில், ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் ரூ.500; அதிகபட்சம் ரூ.1000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் நாள் வரையறையே இல்லை.
தமிழகத்தில் குறைந்தபட்சமாக ரூ.100 என்றும், அதிகபட்சமாக 10 நாளுக்கு ரூ.1000 என்றும், இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர்மாறாக, நுகர்வோருக்கான அபராதம், ரூ.1000 லிருந்து ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
கேட்டால், அப்போதுதான் விதிமுறைகளை மக்கள் மதிப்பார்கள் என்று மின் வாரிய அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். அதேநேரத்தில், விதிமுறைகளை மதிக்காத மின் வாரியத்துக்கான அபராதம் மிகக்குறைவாகவே உள்ளது!
இந்த முரணை அகற்றி, தாமதத்துக்குரிய இழப்பீட்டை, ஒரு நாளுக்கு ரூ.500 லிருந்து ரூ.1000க்கு நிர்ணயம் செய்வதோடு, நாள் வரையறையையும் நீக்க வேண்டுமென்று, ஆணையத்துக்கு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-நமது சிறப்பு நிருபர்-
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!