கோவை: கோவையில் சட்டவிரோத விளம்பர பலகையை சாலையோரம் நிறுவியபோது சாரம் சரிந்து, தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தமிழகத்தில் விளம்பர பலகைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இருந்த விளம்பர பலகைகளுக்கு, இப்போதைய தி.மு.க., அரசு உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அனுமதித்துள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் நேற்று முதல் சம்பவம் கோவையில் நடந்து அநியாயமாக மூன்று உயிர்கள் பறிபோயுள்ளன.
வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் சாலை சந்திப்புகள் மற்றும் ரோடுகளுக்கு மிக அருகாமையில் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. சாலை பாதுகாப்பு விதிகளிலும் இதுதொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை மீறி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து,'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றி தினமும் அறிக்கை சமர்ப்பிக்க, மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
அதன்படி, நுாற்றுக்கணக்கான விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. நீலாம்பூர் மற்றும் சின்னியம்பாளையம் பகுதியில் சில பலகைகள் அகற்றப்படவில்லை. கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அவிநாசி செல்லும் பிரதான சாலையின் இருபுறமும், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த மெகா சைஸ் விளம்பர பலகைகளை, நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றவில்லை.
இச்சூழலில், கோவையில் இருந்து அவிநாசி நோக்கி செல்லும் சாலையில், கருமத்தம்பட்டி எல்லையில், வெள்ளாண்டிபாளையம் செல்லும் வழி, பள்ளக்காடு தோட்டம் என்கிற பகுதியில், விவசாயி ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், சேலத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர், மாவட்ட நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக, கடந்த ஒரு வாரமாக, விளம்பர பலகை வைப்பதற்கான பணிகளை துவக்கினார். இரும்பு ஆங்கிள்கள் வெல்டிங் செய்யும் பணியினை சேலத்தைச் சேர்ந்த ராஜா கவனித்து வந்தார்.
இப்பணியில், சேலம் வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்பகுதியில், ஏற்கனவே, 70 அடி உயரத்தில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த உயரத்தையும் கடந்து, அதிகமான உயரத்தில் விளம்பர பலகைகள் வைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.
நேற்று மூன்று தொழிலாளர்கள் இரும்பு சாரத்தின் மீது ஏறி விளம்பர பிளக்ஸ் பேனர்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். மற்ற நால்வரும் கீழே நின்றிருந்தனர். பிற்பகல், 3:30 மணியளவில், பலத்த காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது. அப்போதும் கூட, இரும்பு சாரத்தில் இருந்து இறங்காமல் விளம்பர பலகை பொருத்தும் பணியில் அத்தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். திடீரென, விளம்பர பலகை சரிந்ததில் அத்தொழிலாளர்கள் கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே மூவரும் பலியாயினர்.

இரும்பு ஆங்கிள்களுக்கு இடையே, சேலம் பொன்னாம்பேட்டையை சேர்ந்த சேட்டு,39 என்பவர், சிக்கினார். அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது; அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கருமத்தம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த தொழிலாளர்கள், சேலம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த குணசேகரன், 52, குமார், 40, சேகர், 45 என்பது தெரியவந்தது. அனுமதியின்றி விளம்பர பலகை பொருத்தியதும் கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தில், விதிமுறையை மீறி, அலட்சியமாக செயல்பட்ட அனைவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
சடலங்கள் மீட்பு
விபத்து நடந்த இடத்தில் இரும்பு ஆங்கிள்கள் அறுத்தெடுக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப்பட்டது. போலீசார் பொதுமக்களுடன் இணைந்து, பலியான தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பப்பட்டன. கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தையல் நாயகி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.
சென்னையிலும்...
கோவை மட்டுமின்றி சென்னையிலும் அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் புற்றீசல் போல முளைத்துள்ளன; இந்த விளம்பர பலகைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிமாக இருக்கும் என, கூறப்படுகிறது. கோவை போன்று சென்னையிலும் உயிரிழப்பு நேரிடும்முன் தமிழக அரசு விழிப்பது அவசியம்.
விளம்பர பலகை சரிந்து மூவர் உயிரிழந்த தகவல், கோவை கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக, கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனர் முத்துசாமி விளக்கம் கேட்டபோது, 'சம்பவம் நடந்த இடம், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தது அல்ல; திருப்பூர் பகுதி' என, அலட்சியமாக பதிலளித்திருக்கிறார்.சம்பவ இடம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தது என கருமத்தம்பட்டி போலீசார் உறுதிப்பட கூறியதும், கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணனை தொடர்பு கொண்டு விசாரிக்கப்பட்டது. அவரும், 'நாங்கள் அனைவரும் சம்பவ இடத்தில் இருக்கிறோம். கோவை மாவட்ட எல்லையில், அனுமதியின்றி புதிதாக அமைத்த விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர்' என, தெரிவித்தார். கோபமடைந்த கலெக்டர், கருமத்தபட்டி நகராட்சி கமிஷனரை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். மேலும், 'விளம்பர பலகைகளை அகற்றச் சொல்லி, பலமுறை எச்சரிக்கை செய்தும் இதுவரை எடுக்காமல் இருந்தது ஏன்' என, விளக்கம் கேட்டு, நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (29)
சட்ட மாற்றத்தின் விளைவாக வரலாறு காணாத ரயில் விபத்து
இங்கு நாம் என்னதான் எவ்வளோ கருத்துக்களை சொன்னாலும் இறந்த போன அந்த தினக்கூலி தொழிலார்களின் குடும்ப நிலைமைதான் ரொம்ப பாவம். வழக்கம்போல் ஆளும்கட்சி சொற்ப நிவாரணத்தைஅறிவித்துவிட்டு தங்கள் தொழிலை பார்க்கப்போய் விடுவார். சிலரை அரெஸ்ட் செய்து சொற்ப நாட்களில் அவர்களும் ஜாமினில் வந்துவிடுவார்கள். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தநிகழ்வுகள் அனைத்தும் தொடர்கதைதான்.
மந்திரிகள், வி.ஐ.பி க்கள் காரில் வரும்போது இதுமாதிரி நடந்தாத்தான் திருந்துவாங்க...
கள்ளச் சாராயம் குடித்து இறந்ததை, விஷ சாராயம் என்று கேவலமாக விளக்கம் சொல்லும் அதிகாரிகள், காற்று வேகமாக அடித்ததால் விளம்பரப் பலகை சாய்ந்தது என்று பொறுப்பற்ற முறையில் விளக்கம் சொல்லும் அதிகாரிகள் இருக்கும் வரையிலும் நாடு நாசமாகத்தான் போகும். இவர்களை முதலில் வீட்டுக்கு அனுப்பித் தொலையணும்.
எல்லா நீதி மன்றங்களும் தானாகவே முன்வந்து நாடு பூராவும் விளம்பர பலகை வைப்பவர்மேல் வழக்கு பதிவு செய்து சம்பந்த பட்டவர்கள் எல்லாரையும் பல வருஷன்கள் சிறை உள்ளே தள்ளினால்தான் பயம் வரும்