இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் ஆண்டுதோறும் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.,) மாறியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறந்த வீரர்களை, 10 அணிகளின் உரிமையாளர்கள் ஏலம் வாயிலாக தேர்வு செய்வர்.
ஐ.பி.எல்., துவங்கிய 2008ம் ஆண்டில் இருந்தே ஒவ்வொரு அணிக்கும், வீரர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. விளையாட்டும், பொழுதுப்போக்கும் கலந்த ஐ.பி.எல், தொடரில் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்கள் எப்படி வருமானம் ஈட்டுகிறார்கள் என பலருக்கும் தெரியாது. ஐ.பி.எல் தொடருக்கு பின்னால் இருக்கும் வணிக மாடல், எவ்வாறு அவர்கள் பணம் ஈட்டுகிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

1. ஸ்பான்சர்ஷிப் :
அணி உரிமையாளர்களின் வருமானத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஸ்பான்சர்ஷிப் தான். ஆனால் ஸ்பான்சர்களிடம் இருந்து அணி உரிமையாளர்கள் நேரடியாக
பணத்தை பெறுவதில்லை. ஐ.பி.எல் நிர்வாகம், ஸ்பான்சர்களிடம் இருந்து பணத்தை பெற்று கொள்ளும். உதாரணமாக இந்தாண்டு டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வானது. 2 ஆண்டுகளுக்கு ஸ்பான்சராக இருக்க பிசிசிஐ உடன் டாடா குழுமம் ரூ.670 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்பான்சர்ஷிப் வாயிலாக கிடைக்கும் மொத்த பணத்தில், 60:40 என்ற விகிதத்தில், பிசிசிஐ 40 சதவீதம் எடுத்து கொள்ளும். மீதமுள்ள 60 சதவீத பணம், 10 அணியின் உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இந்தியாவில் ஐ.பி.எல் போட்டியை நடத்தும் உரிமை பிசிசிஐக்கு மட்டுமே உண்டு.
2. ஒளிபரப்பு உரிமம் :
ஐ.பி.எல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்கள் ஏலம் வாயிலாக தேர்வு செய்யப்படும். வியாகாம் மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்களுக்கு 2023 முதல் 2027 வரையிலான ஐ.பி.எல் போட்டிகள் டிவி, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ரூ. 48,390 கோடிக்கு விற்றது. இதில், ஊடக உரிமம் வாயிலாக கிடைக்கும் தொகையும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும். 40 சதவீத தொகை பிசிசிஐக்கும், 60 சதவீத தொகை ஒவ்வொரு அணிக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
3. உரிமையாளர் ஸ்பான்சர்ஸ் :
ஒவ்வொரு அணியும், சொந்தமாக அதிக பணம் செலுத்துவோரை ஸ்பான்சர்களாக நியமித்து கொள்ளலாம். ஸ்பான்சர் நிறுவனங்களின் லோகோ மற்றும் பெயர்கள் ஒவ்வொரு ஐ.பி.எல் அணியின் ஜெர்சியில் இடம்பெற்றிருக்கும். ஸ்பான்சர்களுடன் அணி உரிமையாளர்கள் மேற்கொண்ட ஒப்பந்த அடிப்படையில் லாபம் கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும் வருமானம், ஒவ்வொரு ஐ.பி.எல்., அணிக்கும் மாறுபடும்.
4. டிக்கெட் விற்பனை :
ஒவ்வொரு ஐ.பி.எல் அணியும் பி.சி.சி.ஐ பட்டியலில் இருந்து தங்களின் சொந்த மைதானத்தை தேர்வு செய்யலாம். தங்கள் சொந்த மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விலையை ஐ.பி.எல் அணி மட்டுமே நிர்ணயிக்க முடியும். பெரிய இருக்கை வசதி கொண்ட பெரிய மைதானங்களின் டிக்கெட் விற்பனையில் இருந்து அதிகம் சம்பாதிக்கின்றன. கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானம், இந்தியாவிலேயே அதிக இருக்கை வசதியை கொண்டது. எனவே டிக்கெட் விற்பனை மூலம் கோல்கட்டா அணி அதிக வருமானம் ஈட்டுகிறது.
5. மெர்சண்டைசிங் :
ஒவ்வொரு ஐ.பி.எல் அணியின் உரிமையாளர்கள் தங்களது ஜெர்சி, கைக்கடிகாரம் மற்றும் நினைவுப்பரிசுகள் போன்றவற்றை விற்பனை மூலம் வருமானத்தை ஈட்டலாம். அதிகாரபூர்வ பொருட்கள், அணி உரிமையாளர்களின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
6. பரிசுத்தொகை :
ஐபிஎல் சீசனின் வெற்றியாளராக மாற நீண்ட நாட்கள் அணிகள் போராடுகின்றன. வெற்றிபெறும் அணி அதிக வருவாயைப் பெறுவதோடு, பெரும் பரிசுத் தொகையையும் வெல்கிறது. நடப்பு சீசனில் கோப்பையை வென்ற சென்னை அணி ரூ.20 கோடி பரிசுத்தொகையாக வென்றுள்ளது. 2வது இடம்பிடித்த குஜராத் அணி, ரூ.12.5 கோடியை வென்றுள்ளது.
வாசகர் கருத்து (8)
இதனை கோடிகள் புரளும் BCCI, ரிஜிஸ்டர் செய்து இருப்பது தொண்டு நிறுவனம் என்ற அடிப்படியில், ஆகவே அரசுக்கு 5 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை. ஒரு துளியும் வரி கிடையாது இந்த எந்த வருமானத்துக்கும். கேவலமாக இல்லை?
அரசுக்கு ஒன்றும் கிடையாது. பூஜ்யம்
தனியாருடையது தான் கிரிக்கெட் வாரியம். எலைட்களுக்கு மட்டும் சொந்தமானது. பணத்தை கொட்டுவது ஏழை ரசிகர்களும், விளம்பர நிறுவனங்கள் தான். ஏழை சினிமா ரசிகர் போல கிரிக்கெட் ரசிகர்கள் மயக்கத்தில் உள்ளனர். சப்பாத்திக்கு ஜிஎஸ்டி உண்டு. கோடிகள் தரும் கிரிக்கெட்டுக்கு மடங்களை போல வரி ஏதுமில்லை.
Whether Income tax collected from the concerned Team owners and the players and other persons who are eligible to pay Income tax.
ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொளுத்தி காசை கரியக்குறோமே அதுபோல்தான்