Load Image
Advertisement

அடுத்தவர் மீது வெறுப்புணர்வு ஏன் வருகிறது?

Why do you feel hatred towards others?   அடுத்தவர் மீது வெறுப்புணர்வு ஏன் வருகிறது?
ADVERTISEMENT
ஒரு காலகட்டத்தில் ஒருவரைப் பார்க்கும்போது சந்தோஷமும் அன்பும் பெருகுகிறது; அதே நபரை சிறிதுகாலம் கழித்துப் பார்க்கும்போது வெறுப்புணர்வு தோன்றுகிறது! இதற்குக் காரணம் அந்த நபரின் செயல்பாடுகள்தான் என நம்மில் பலரும் எண்ணிக்கொள்கிறோம். வெறுப்புணர்வு மற்றும் பேராசைகொள்வது குறித்து நாம் கொண்டுள்ள தவறான பார்வையை சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வையும் சொல்கிறார் சத்குரு!
கேள்வியாளர்: சத்குரு, வெறுப்புணர்வும், பேராசையும் எங்களுக்குள் பலமாக மேலோங்கி இருக்கிறது. நாங்கள் ஏன் இந்த மாதிரி ஆகிவிட்டோம்?

சத்குரு: எந்த மனிதரும் நூறு சதவிகிதம் நீங்கள் விரும்புவது போல இயங்கப் போவதில்லை.

இப்போது நாம் யாராக இருக்கிறோம் என்பதற்கும், என்னவாக இருக்கிறோம் என்பதற்கும் இன்னொருவரை நீங்கள் காரணகர்த்தாவாக ஆக்காதீர்கள். அப்படி ஆரம்பித்துவிட்டால், பிறகு உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பலவிதங்களிலும் உங்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளிப்பார்கள். எந்த மனிதரும் நூறு சதவிகிதம் நீங்கள் விரும்புவது போல இயங்கப் போவதில்லை. எந்த அளவுக்கு உங்களுடைய எதிர்பார்ப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு, உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம், ஏமாந்து போவீர்கள். அப்படி நீங்கள் ஏமாற்றமடையும்போது, நீங்கள் நினைத்தவிதமாக எதுவும் நிகழாதபோது, உங்களுக்கு ஏற்படும் துன்பத்திற்குக் காரணம் அவர்கள்தான் என்று நீங்கள் உறுதியாக நம்புவீர்கள். ஆகவே, இயற்கையாகவே கோபம் வரும். இந்தக் கோபம் நாளடைவில் வெறுப்பாக மாற்றமடையும். உங்களுடைய தற்போதைய வாழ்க்கை அனுபவத்திற்கு அடிப்படைக் காரணமாக வேறு யாரோ ஒருவரை சுட்டிக்காட்டுகிறீர்கள் என்றால், அந்தக் கணமே, நீங்கள் விளையாட்டைத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஒருவேளை ஆரம்பத்தில் இது இனிமையாகத் துவங்கியிருக்கலாம். “ஓ, உன்னால்தான் நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று. ஆனால், இந்த ஆட்டம் வெகுவிரைவில் கசப்பாக மாறிவிடலாம். ஏனெனில், இன்று நீங்கள் விரும்பும் செயல்களைச் செய்து உங்களை மகிழ்ச்சிப்படுத்திய அவர் நாளைக்குத் தான் விரும்பும் விஷயங்களை உங்களிடம் செய்யும்போது அது உங்களை மகிழ்ச்சியற்றவர் ஆக்கிவிடும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் எந்த மனிதரும் வாழ முடியாது. நீங்கள் எதிர்பார்க்கும் விதமாக அப்படியே எந்த மனிதரும் இருக்கமாட்டார். எனவே உங்கள் வாழ்க்கையில் துன்பம் நேரும்போது, உங்கள் துன்பத்திற்கு மூலகாரணமாக இன்னொருவரை நினைக்கிறீர்கள். அப்படி நினைத்தாலே பிறகு கோபமும், வெறுப்பும் இயல்பாகவே வரும்.
நீங்கள் இங்கே ஒரு உயிராக மட்டும் இருந்துவிட்டால், மற்ற எல்லா உயிர்களோடும் இணக்கமாகத்தான் இருப்பீர்கள். அதுதான் உண்மையான நிலை. இது என்னுடைய கருத்தோ அல்லது உங்களுடைய கருத்தோ அல்ல, படைப்பின் இயக்கமே அப்படித்தான். ஆனால் நீங்கள் ஒரு பிரிவினையை உருவாக்கிக் கொள்கிறீர்கள். “நான் இவர்களை வெறுக்கிறேன், ஏனெனில் எனது எதிர்பார்ப்புக்கேற்ப இவர்கள் செயல்படுவதில்லை. என் இலட்சியங்கள் மாபெரும் இலட்சியங்களாக இருக்கின்றன. இவர்களுக்கு அப்படிப்பட்ட இலட்சியங்கள் இல்லை. இந்த மக்கள் தோல்வியடைந்தவர்கள். ஆகவே, நான் இவர்களை வெறுத்து ஒதுக்கிவிடலாம்.” நீங்கள் ஒரு கற்பனையான இலட்சியத்தை உருவாக்குகிறீர்கள். ஒரு பொய்யை மற்றொரு பொய்யால் மூடி மறைக்க முயற்சிக்கிறீர்கள். இது ஒரு தீர்வு அல்ல. அது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கவே செய்கிறது. குறைந்தபட்சம் நீங்கள், “நான் இவர்களை அப்படியே வெறுக்கிறேன்” என்று மட்டும் பார்த்து, அந்த வெறுப்பிலேயே மூன்று நாட்கள் இருந்தால், மெள்ள, “நான் ஏன் இப்படி இருக்கிறேன்?” என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில் அதுதான் உங்களுடைய மனிதத் தன்மையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்களுடைய வெறுப்புணர்வை இலட்சியங்கள் மற்றும் கோட்பாடுகளால் பலப்படுத்தினால், பிறகு உங்கள் வாழ்வின் எஞ்சிய காலத்தையும் அவர்கள் மீதான வெறுப்பிலேயே கழிப்பீர்கள்.
'மற்ற அனைவரையும் விட நானே சிறந்தவன்' என்று நினைப்பதுதான் இருப்பதிலேயே மிகவும் பகட்டான செயல் மற்றும் முட்டாள்தனமான செயல்.

பேராசை என்பது ஒப்பீட்டளவிலான வார்த்தை. அரண்மனையில் வாழ்வதைத் தனது தேவை என்று ஒருவர் நினைக்கிறார். மற்றொரு நபர் அது பேராசை என்று நினைக்கிறார். சிறிது காலத்திற்கு முன்பு இது நிகழ்ந்தது. ஒரு மரத்தடியில் வாழ்ந்த சுவாமி ஒருவரை நான் சந்தித்தேன். தங்களுக்கென்று எளிமையான குடில்களை அமைத்து வாழ்ந்து வந்த அங்கிருந்த மற்ற அனைத்து சுவாமிகளையும் எப்போதும் ஏளனம் செய்து வருவதையே தன் வாழ்க்கையில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அவரே மரத்தடியில் வாழ்ந்த காரணத்தால், இந்த மற்ற சுவாமிகள் எப்படி தங்களைத் தொலைத்து விட்டனர் என்றும், அவர்கள் எப்படிக் களங்கப்பட்டுவிட்டனர் என்றும், எப்படி அவர்கள் வசதி மற்றும் ஆடம்பரத்திற்கு தாவிவிட்டனர் என்றும் கூறியவாறு தன் வாழ்நாளைக் கழித்தார். எல்லா பருவ காலங்களையும் சமாளித்து மரத்தின் கீழேயே வாழ்ந்து வந்ததால், அவர், “அவர்கள் ஆடம்பரமானவர்கள், அவர்களது குடிசைகளை எப்படியெல்லாம் அழகுபடுத்தியுள்ளனர் என்று பாருங்கள்” என்றே கூறுவார். மற்ற சுவாமிகள் தங்களது குடிசையை சிறிதே அழகு செய்ய விரும்பியிருந்தனர். ஆகவே சிலர் சிறிய மலர் தோட்டம் அமைத்து, தங்கள் குடிசை முன்பு ஓரிரண்டு மலர்ச் செடிகளை நட்டிருந்தனர். மற்றும் சிலர் சுவருக்கு சிறிது வண்ணம் பூசியிருந்தனர். ஆனால் அதையெல்லாம் பகட்டான செயல் என்று அவர் நினைத்தார். ஆகவே நான் அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது, 'மற்ற அனைவரையும் விட நானே சிறந்தவன்' என்று நினைப்பதுதான் இருப்பதிலேயே மிகவும் பகட்டான செயல் மற்றும் முட்டாள்தனமான செயல் என்று.

உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று எப்போதும் விரிவடைய வேண்டும் என்கிற தேடுதலில் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் எவ்வளவுதான் கொடுத்தாலும், அது அமைதியடையப் போவதில்லை.

ஆகவே, பேராசை என்பது மிகவும் ஒப்பீட்டு அளவில் இருப்பது. நீங்கள் ஒருபோதும் பேராசைப்படுவதில்லை. ஆனால் நீங்கள் அடைய விரும்பும் ஒரு இடத்தை அடைந்துவிட்ட வேறு ஒருவர், உங்கள் கண்களுக்கு பேராசைக்காரராகத் தென்படுகிறார். ஒரு பத்து இலட்சம் ரூபாய் சேர்க்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் இன்னும் அதைச் சேர்த்திருக்கவில்லை. ஆனால் ஏற்கனவே அதைச் சாதித்தவர் உங்கள் கண்களில் பேராசைக்காரராக இருக்கிறார். நீங்கள் அதைச் சாதித்துவிட்டால், பத்து இலட்சம் பணம் சேர்ப்பது அப்போது ஒரு பேராசையாக உங்களுக்கு தெரிவதில்லை. அப்போது ஒரு கோடி சேர்ப்பதுதான் உங்களுக்கு பேராசையாக இருக்கிறது, ஏனெனில் வேறு ஒருவர் அதை ஏற்கனவே அடைந்திருக்கிறார். சேகரம் செய்து கொண்டே இருக்கவேண்டும் என்னும் உணர்வு அவ்வளவு வலிமையாக இருக்கிறது. ஏனெனில் ஒருவிதமான நிறைவற்ற தன்மை உங்களிடம் குடிகொண்டுள்ளது. நீங்கள் இப்போது என்னவாக இருக்கிறீர்களோ அது உங்களுக்குப் போதவில்லை. இப்போது இருப்பதைவிட இன்னும் சிறிது அதிகம் ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதை அடைந்த கணமே, அதையும்விட மேலும் சிறிது அதிகம் ஆக விரும்புகிறீர்கள்.

உங்களது ஆசை உங்களது சக்தி இரண்டும் எதை நோக்கியதாகவும் இல்லாமல், முழுமையான ஆற்றலாக மட்டும் உருவெடுத்தால், அதுதான் தியானம் என்பது.

இதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒட்டுமொத்த பூமியையே உங்களிடம் நாம் கொடுத்தாலும், அப்போதுகூட நீங்கள் நட்சத்திரங்கள் கிடைக்காதா என்று அண்ணாந்து பார்ப்பீர்கள். ஏனெனில் உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று எப்போதும் விரிவடைய வேண்டும் என்கிற தேடுதலில் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் எவ்வளவுதான் கொடுத்தாலும், அது அமைதியடையப் போவதில்லை. இந்த பிரபஞ்சத்தையே கொடுத்தாலும், இன்னமும் வேறு பிரபஞ்சங்களைத் தேடும். எல்லையற்ற விரிவடைதலைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு அம்சம் உங்களுக்குள் இருக்கின்றது. ஆகவே, இன்றைக்கு பேராசை என்பது நிகழ்வதற்குக் காரணம், உங்களுடைய உள்நிலை எல்லையற்று விரிவடைய விரும்புகிறது. ஆனால் எல்லையற்ற நிலையை அடையவேண்டும் என்னும் உங்கள் தாகத்தை, நீங்கள் பொருள்தன்மை மற்றும் உடல்தன்மை மூலமாக நிறைவு செய்ய முயற்சிக்கிறீர்கள். பேராசை நிகழும் விதம் இப்படித்தான்.

நீங்கள் பேராசை கொள்வதில் தவறேதும் இல்லை; உண்மையில் அது ஒரு ஆன்மீகச் செயல்பாடுதான். தியானம் என்பது இதுதான் - இலக்கற்ற, ஒரு சக்திவாய்ந்த ஆசை. உங்களது ஆசை உங்களது சக்தி இரண்டும் எதை நோக்கியதாகவும் இல்லாமல், முழுமையான ஆற்றலாக மட்டும் உருவெடுத்தால், அதுதான் தியானம் என்பது.

ஆசிரியர் குறிப்பு :
நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.


வாசகர் கருத்து (2)

  • Venkata Raman - Singapore,சிங்கப்பூர்

    அழகான தர்க்கரீதியான பதில். நன்றி.

  • மகாலிங்கம், கோவை - ,

    அருமை சத்குரு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement