ஜெய்ப்பூர்: 'தன் பாலினம் மற்றும் பாலின அடையாளம் குறித்து முடிவு செய்வது ஒருவருக்கு உள்ள உரிமையாகும்' என, வழக்கு ஒன்றில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தானில், பிறப்பின்போது பெண்ணாக இருந்த ஒருவருக்கு, பெண் என்ற அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது.
கடந்த, 2013ல் பணியில் சேர்ந்த இவருக்கு பாலினக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறினார்.
ஒரு பெண்ணை திருமணம் செய்த அவருக்கு குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில், தன் குடும்பத்தாருக்கு எதிர்காலத்தில் அனைத்து பணப் பலன்கள் உள்ளிட்டவை கிடைக்கும் வகையில், தன் பாலினத்தை ஆணாக பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, அவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தன் பாலினம் மற்றும் பாலின அடையாளம் குறித்து முடிவெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போதே, ஒருவருக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
மூன்றாம் பாலின சட்டத்தின்படி, அறுவை சிகிச்சை வாயிலாக பாலினம் மாறியவருக்கு, அவர் விரும்பிய பாலின அங்கீகாரம் வழங்க வேண்டும்.
ஆனால், 2019ல் அந்த சட்டம் அமலுக்கு வந்ததற்கு முன், இவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். முந்தைய சட்டங்களின்படி, மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து, தன் பாலினத்தை அவர் மாற்றிக் கொள்ளலாம்.
அதனடிப்படையில், அவருடைய பணி ஆவணங்களில், மாநில அரசு உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (4)
அவர் பணியில் சேரும் சமயம் பெண் என்பதால் சலுகை பெற்று தேர்வு செய்யப்பட்டு இருந்தால் அவரை அந்த பணியில் இருந்து நீக்குவதில் தவறு இல்லை.
அடையாளம், இடஒதுக்கீடு எல்லாம்.குடுங்க.
பிறப்பு, வளர்ப்பில் பெண். அரசு சான்று பதிவில் பெண். அரசு பணியில் சேரும்போது பெண். அறுவை சிகிச்சைக்கு பின் ஆண். சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் (அரசு பணியில் சேர்ந்த பின் மதம், கலப்பு திருமணம் செய்வோர்.) பணி நீக்கம் செய்ய வேண்டும். கல்வி, வேலையில் சாதி, மத அடிப்படையில் சலுகை உள்ளதால், ஆணாக மாறிய பின் அனைத்து ஆவணங்களில் பதிவு செய்து அதன் அடிப்படையில் புதிதாக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மூன்றரை சதவீதம் உள் இட ஒதுக்கீடு சட்டம் வந்த பின் முஸ்லிமாக மதம் மாறிய முன்னேறியவர்கள் அந்த இடஒதுக்கீடை. அனுபவிக்கிறார்கள்தானே? அப்படியிருக்க இயற்கையான உடல் மாற்றங்களுக்காக சலுகைகளை மறுக்கலாமா?