ADVERTISEMENT
திருப்புவனம்,--திருப்புவனத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நிசும்பன்சூதனி சிற்பம் கண்டறியப்பட்டது.
திருப்புவனம் அருகே திருமணப்பதி கிராமத்தில் தென்னக வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழு கள ஆய்வு மேற்கொண்ட போது முற்கால பாண்டியர் கால விநாயகர் சிலையும், பிற்கால பாண்டியர்கள் கலைப்பாணியில் அமைந்துள்ள நிசும்பன் சூதனி சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் நிசும்பன் சூதனி சிற்பம் நான்கு அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் இருபுறமும் தலா நான்கு கரங்கள் வீதம் எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கேடயம், வில், அம்பு, மணி போன்ற ஆயுதங்களை தாங்கியுள்ளது.
நிசும்பன்சூதனியின் இடையில் கச்சமும், காதில் பத்ரகுண்டலமும், தோள் வலை மற்றும் தோள் மாலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உத்குதி ஆசனத்தில் காணப்படும் இச்சிற்பம் பிற்கால பாண்டியரின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிற்பத்தின் அருகிலேயே முற்கால பாண்டியர் கால விநாயகர் சிற்பமும் லலிதாசன கோலத்தில் பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள நான்கு கரங்களுடன் வலது கரத்தில் மருவும், இடது கரத்தில் பாச கயிரும் உள்ளது.
தும்பிக்கையால் மோதகத்தை எடுத்தபடி உள்ள இந்த விநாயகர் சிலை ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!