ADVERTISEMENT
சென்னை: 'கேலோ இந்தியா' போட்டிகளை, தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், தமிழக வீரர், வீராங்கனையர் உற்சாகம் அடைந்துஉள்ளனர்.
இந்தியாவை விளையாட்டு துறையில் சிறந்த நாடாக்கவும், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இந்தியர்கள் அதிக பதக்கங்ளை பெற்று, நாட்டை பெருமை படுத்தவும், 'கேலோ இந்தியா' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இதன்படி, வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, கபடி, கோ-கோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், கைப்பந்து, பளு துாக்குதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி, தலைசிறந்த வீரர், வீராங்கனையரை, மத்திய அரசு தேர்வு செய்து சர்வதேச தரத்துக்கு உயர்த்துகிறது.
இதற்கான பயிற்சிகள், மைதானங்கள், மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்தாண்டுக்கான கேலோ இந்தியா போட்டிகளை, தமிழகத்தில் நடத்தமத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும், கேலோ இந்திய விளையாட்டு போட்டிகளை, தமிழக அரசு மிக விரிவாக நடத்தி, தமிழ் பண்பாட்டையும், விருந்தோம்பலையும் நிரூபிக்கும் என, முதல்வர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில், கேலோ இந்தியா போட்டிகளை, வரும் செப்., முதல் டிச.,க்குள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால், நாட்டில் உள்ள திறமையாளர்களை சந்திக்கவும், அவர்களின் திறமையை நேரில் காணவும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனையர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சும்மா பூந்து விளையாடுங்க