Load Image
Advertisement

ஆமெரிக்கா!: பொருளாதாரத்தில் தடுமாறும் அந்நியன்...: ரூபாயால் தலைநிமிரும் இந்தியன்

Sindhanai Kalam  ஆமெரிக்கா!: பொருளாதாரத்தில் தடுமாறும் அந்நியன்...: ரூபாயால் தலைநிமிரும் இந்தியன்
ADVERTISEMENT

-- ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் -



தனது 'சூப்பர் பவர்' ஆயுத பலத்தாலும், பொருளாதார பலத்தாலும், உலக நாடுகளை திகிலிலேயே வைத்துக்கொண்டிருக்கும் உலகப்பெரும் பணக்கார நாடான அமெரிக்கா, இப்போது உள்ளூக்குள் திக்…திக்… மனநிலையுடன் தவிக்கிறது. காரணம், வரும் ஜூன் 1 முதல் செலவழிப்பதற்கு அரசு கருவூலத்தில் பணமில்லை.

அரசுக்கான கடன் உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருப்பதால் 'எக்ஸ்-தேதி' எனப்படும் இறுதிநாள் ஜூன் 1. அதற்குள் உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை என்றால் அரசு கஜானா காலியாகவே இருக்கும்; செலவழிக்க பணம் இருக்காது.

செலவுக்கு பணமில்லாவிட்டால் அமெரிக்க அரசாங்கத்தில் என்ன நடக்கும் தெரியுமா? அமெரிக்க பொருளாதாரத்தில் 2008ம் ஆண்டு போன்ற தேக்கநிலை ஏற்படும்.

அது, உலக அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படுத்தும். அமெரிக்காவில் வங்கி கடன் வட்டி 8 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் வீடு கட்டுவது, வாங்குவது 23 சதவீதம் குறையும். உலக வர்த்தகத்தில் பாதி அளவு டாலரில் நடக்கிறது. நிதி நெருக்கடி தொடர்ந்தால், டாலர் மீதான நம்பிக்கை குறையும்.

அமெரிக்க அரசாங்கத்திடம் சம்பளம் பெறும் 40 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்படும். ராணுவம், விமான சேவையில் பணியாற்றுபவர்களுக்குகூட ஊதியம் தரமுடியாது. அரசின் பத்திரங்களுக்கு திருப்பி கொடுக்க பணம் இருக்காது. பங்குகள் விலை 20 சதவீதம் வரை வீழ்ச்சியடையும்.

அமெரிக்காவில் ஆறு கோடி பேருக்கு தினமும் வழங்கப்பட்டுவரும் 1.6 பில்லியன் டாலருக்கான முதியோர், மருத்துவம், ஏழைகள், மாணவர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகைகளுக்கான நிதியுதவி நிறுத்தப்படும்.

இப்படியான சிக்கல் நீடிக்கிறது. அதற்காக, அமெரிக்கா பொருளாதாரத்தில் வீழ்ந்துவிடுமா. அதோடுகூட, அமெரிக்காவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள இந்தியாவின் பொருளாதார நிலவரம் என்ன ஆகும், என்பதுதான், உலக நாடுகளின், சர்வதேச வர்த்தர்களின் இப்போதைய மில்லியன் 'ரூபாய்' கேள்வி.

முதலில் அமெரிக்காவின் கதையை பார்ப்போம்...



வருவாய்க்கு அதிகமாக செலவு வரும்போது கடன் வாங்குவதற்கு, அமெரிக்க அரசுக்கு உச்சரவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021ல் கடன் உச்சவரம்பு 31.4 டிரில்லியன் டாலர். இந்த உச்சவரம்பை அரசு 2023 ஜனவரியிலேயே எட்டிவிட்டது. இனிமேல் கடன் வாங்க சட்டத்தில் இடமில்லை. ஆனால், கடன் வாங்காவிட்டால் அரசு எந்திரம் இயங்காது.

ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்தான் அதிபர். ஆனால், அமெரிக்க பார்லிமென்டில், குடியரசு கட்சி பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. கடன் உச்சவரம்பு உயர்த்தும்போது, அரசு செலவுகள், மானியங்களை குறைக்க வேண்டும் என்று அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடன் உச்சவரம்பை 1.5 டிரில்லியன் டாலர் உயர்த்தும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், செனட் ஒப்புதல் பெற வேண்டும். 'எக்ஸ்-தேதி' நெருங்குவதால், அமெரிக்க அரசின் நிதித்துறை பதட்டத்தில் இருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் வர இருக்கும் தேர்தலை மனதில் வைத்து அரசியல் ஆட்டமும் இதில் உள்ளது; அவ்ளோதான் அமெரிக்க கதை.

சரி, இனி நமது நாட்டின் நிலவரத்திற்கு வருவோம்...



சர்வதேச அளவில் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டுதான் 60 சதவீதம் வர்த்தகம் நடக்கிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவின் பெரும் முயற்சியால், டாலரில் அல்லாமல், இந்திய ரூபாயை ஏற்றுக்கொண்டு வர்த்தகம் செய்ய 18 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதுவே நமது ரூபாய்க்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் ஆகும். ரூபாய்க்கான மரியாதைக்குரிய அந்தஸ்தை தொடங்கி வைத்திருக்கிறது இந்தியா.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியையும் நாம் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாலர் அதிக மதிப்பில் இருப்பது ஒரு விதத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வசந்தகாலம் என்றே கருதவேண்டியுள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதிதான் நாட்டின் பொருளாதார வலுவிற்கு முக்கியமானதாகும். அமெரிக்காவில் 40 ஆண்டுகள் இல்லாத பணவீக்கம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 8.1 சதவீதத்திற்கும்மேல் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் நிமித்தமாக, நான் அமெரிக்காவிற்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக சென்று வருகிறேன்.

இப்போதைய எனது அமெரிக்க பயணத்தில் நான் உணர்ந்தது அங்கு, வாடகை கார், பெட்ரோல், தங்கும் விடுதி, உணவகங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது விலை அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம், அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பணம்வீக்கம் என்றே கூறலாம்.

இத்தகைய அசாதாரண பணவீக்கம் அமெரிக்காவில் ஏற்பட காரணம் கொரோனா பெருந்தொற்றின்போது, அரசாங்கம் அதிகளவு நிவாரணத்தை, டாலராக அச்சடித்து வழங்கியது. கூடுதலாக கரன்சி அச்சடித்து வினியோகிக்கும்போது, பணவீக்கம் ஏற்படுவது இயல்பானது.

ஆனால் இந்தியாவில் கொரோனா சமயத்தில், நாம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, நிவாரண தொகையாக வழங்கிவிடவில்லை. திட்டங்களாக, வட்டி தள்ளுபடியாக வழங்கப்பட்டது. அதுவே, அதிகப்படியான பணவீக்கத்தில் நமது நாடு சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக, வட்டி வீதங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு 2.3 சதவீதம் இருந்த வட்டி விகிதம் இப்போது 6.8 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் வங்கிகளில் டெபாசிட் செய்யும் தொகைக்கு 5.1 சதவீதமாக உயர்த்துள்ளது. வீட்டுக்கான வட்டி விகிதம் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளதால் புதிய வீடுகள் வாங்குவது அமெரிக்காவில் குறைந்து வருகிறது.

2022 ஆரம்பம் முதல் அமெரிக்காவில் பொருளாதார தொய்வு நிலை வரும் என்று வல்லுனர்கள் கணித்து வந்தாலும் இது வரை பெரிய அளவில் தாக்கம் இல்லாமல் சமாளித்து வருகிறது. அமெரிக்காவில் வேலை இல்லா குறியீடு 3.2 சதவீதம்தான் உள்ளது. இதுவும் ஏற்றுகொள்ள கூடிய நிலையில் தான் உள்ளது.

ஆனால் அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் 'ஆப்பிள்' தவிர, அமோசன், பேஸ்புக் உட்பட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை 'லேஆப்' செய்து வருகிறார்கள். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

வேலை இழந்த இந்தியர்கள் இரண்டு மாதங்களில் புதிய வேலை தேடிக் கொள்ளாவிட்டால், அவர்களின் விசா காலாவாதியாக அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. அமெரிக்க வேலையை நம்பி அங்கு வாங்கிய கார் கடன், வீடு, மற்றும் கல்வி கடன் செலுத்த முடியாத காரணத்தால், பணியில் இருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

''கடன் உச்சவரம்பு உடனடியாக அதிகரிக்கப்படாவிட்டால், அது வால்ஸ்ட்ரீட்டை (பங்குச்சந்தை) தான் முதலில் பாதிக்கும்'' என்று மூடீஸ், ஜே.பி.மோர்கன் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பணவீக்கம் உயருவதால், செலவுகள் அதிகரித்து மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். கடந்த ஒன்றை ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு பெரியதாக பொருளாதார பாதிப்பு எதுவும் இல்லை. இனி வரும் காலங்களில் பொருளாதார தேக்கநிலை ஏற்படலாம். சீனாவிற்கு மாற்றாகவும், சீனாவின் அசுர வளர்ச்சிக்கு அணை போடும் வகையிலும், இந்தியாவுடன் கைகோர்க்க அமெரிக்கா துடிப்பதால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தக வாய்ப்புகள், 'ஆப்பிள்' போன்ற அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தித்துறை வாய்ப்புகள் இந்தியாவிற்கு பிரகாசமாகவே உள்ளன.

சமீபத்திய தகவல்...



கடன் உச்சவரம்பு உயர்த்தாமல், நாட்டை தவிப்பில் விட அமெரிக்கன் காங்கிரஸ் விரும்பாது. அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் யோசனையை ஏற்று எந்த நேரமும், கடனுக்கான உச்சவரம்பு அளிக்கப்படலாம். ஆகையால், அமெரிக்கா இப்போதைக்கு தப்பி பிழைக்கலாம்.

ஆனால், பணவீக்க பாதிப்பில் இருந்து எழுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அமெரிக்காவின் பொருளாதார சுகவீனம், இந்திய பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை பாதிக்காது என்றே நம்பலாம்.



வாசகர் கருத்து (3)

  • Dharmavaan - Chennai,இந்தியா

    அரசியல்வாதிகளின் பணத்தை பறிமுதல் செய்தால் நம்நாட்டுக்கு வளம்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அமெரிக்காவுல ஜூன் மாசமே யாருகிட்டயும் காசு இருக்காதுன்னு வருத்தப்படறீங்க இங்க இந்தியாவுல கோராவுக்கு அப்புறம் கூட பல மாநில மந்திரிகளிடம் ,மத்திய மந்திரிங்களிடம் ,எம் பிக்களிடம் ,எம் எல் ஏ க்களிடம் பணமா மூட்டையா மூட்டையா கொட்டிக் கிடக்கு....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பேரு பெத்த பேரு,தானிக்கு தீனி லேது ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement