ADVERTISEMENT
மதுரை : மதுரை ஐஸ்வர்யம் டிரஸ்ட், புன்னகை பூக்கள் சிறப்பு குழந்தைகள் மையம் சார்பில் லட்சுமி சுந்தரம் ஹாலில் 'இன்றைய தலைமுறையின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதா, பெற்றோரை பராமரிப்பதா' என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
ஆதரவற்ற நோயாளிகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்டது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த இப்பட்டிமன்றத்தில் பிள்ளைகளை வளர்ப்பதே சவால் என்ற தலைப்பில் கோகுலகிருஷ்ணன், கருணாநிதி, கவிதா ஆகியோரும் பெற்றோரை பராமரிப்பதே என்ற தலைப்பில் ராஜா, ரேவதி சுப்புலட்சுமி, ராஜ்குமார் ஆகியோரும் பேசினர்.
நிறைவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசியதாவது: ஆடம்பரமாக வாழ கடன் வாங்கி சுமக்கிறோம், ஆனால் குழந்தைகள் தனிமையிலேயே வளர்கின்றனர். தற்போது உள்ள குழந்தைகள் நம் கைப்பிடியில் இல்லை. குழந்தைகளிடம் நாம் சொல்லி நல் வழிகாட்டினாலும் அவர்கள் வினையை அவர்களே தேடுகின்றனர்.
பெற்றோர் இல்லை என்றால் நம் மனம் துயரத்தில் ஆழ்த்தும். பெற்றோரை பலர் அநாதையாக ரோட்டில் விட்டுச் செல்கின்றனர். முதுமை எதிலும் தெளிவில்லாமல் செய்துவிடும்.
ஆனால் முதுமையில் அவர்களை நாம் பாதுகாப்பது கடவுளுக்கு செய்யும் தொண்டு. பெற்றோரை பராமரிப்பது சவால். அவர்கள் என்ன பிழை செய்தாலும், பேசினாலும் அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
விழாவில் ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாலகுருசாமி, அறங்காவலர்கள் டாக்டர் அமுதநிலவன், டாக்டர் சபரிமணிகண்டன், டாக்டர் ஸ்ரீவித்யா மஞ்சுநாத், பொதுமக்கள் பங்கேற்றனர். ஆதரவற்றோருக்கு நன்கொடையாக காசோலை வழங்கினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!