ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கவர்னர் தமிழிசை திடீர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை அனுமதியை தேசிய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்துள்ளது. இதையொட்டி, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், கவர்னர் தமிழிசை நேற்று ஆய்வு செய்தார்.
சுகாதார துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமலு, மருத்துவக் கல்லுாரி இயக்குனர் உதயசங்கர் உட்பட புல முதல்வர், மருத்துவ அதிகாரிகளோடு ஆலோசனை செய்தார்.
மருத்துவக் கல்லுாரியில் வருகை பதிவேடு (எலக்ட்ரானிக் பிங்கரிங்) மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் தயார் நிலையில் இல்லாததற்கான காரணம் குறித்து கேட்டறிந்த கவர்னர், கண்காணிக்க தவறிய அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
பின், கவர்னர் தமிழிசை பேசியதாவது,
இந்த மருத்துவக் கல்லுாரிக்கு தேவையான வசதிகள் அனைத்தும் அரசு மூலம் செய்து தரப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. மாணவர்கள், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பிரத்யேக தொழில்நுட்ப வசதிகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், மருந்துகள் அனைத்தும் உள்ளன.
கறந்த பாலில் சிறுதுளி விஷம் பட்டாலும் முழுவதுமே விஷமாகி விடும். அதுபோல தான், நீங்கள் அனைத்தையும் தரமாகவும், சிறப்பாக வைத்திருந்தாலும், வருகை பதிவேடு, கண்காணிப்பு கேமரா போன்றவற்றை கவனிக்க தவறியதால், இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இது முழுக்க, முழுக்க உங்களின் அலட்சியமே. இதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இதை நீங்களே சரி செய்து, மீண்டும் இக்கல்லுாரி மீது ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையை போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் இயங்காத இயந்திரம்
கவர்னர் ஆய்வின்போது, வருகை பதிவேட்டை (எலக்ட்ரானிக் பிங்கரிங்) சரி செய்து விட்டதாாக அதிகாரிகள் கூறினர். அதனையொட்டி, கவர்னர் சென்றபின் டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் விரல்களை இயந்திரத்தில் வைத்து சோதித்தனர்.அப்போது இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. இதையடுத்து, அவர்கள் யாரிடமும் கூறாமல் 'கப்சிப்' என அங்கிருந்து வெளியேறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!