Load Image
Advertisement

50 சதவீதம் பஞ்சு விலை சரிந்தது: நூல் ஆர்டர் இல்லாததால் சிக்கல்

கடந்தாண்டு பஞ்சு விலையுடன் ஒப்பிடும் போது, 50 சதவீதம் அளவுக்கு விலை குறைந்தும், நுால் ஆர்டர் வரத்து இல்லாமல், நுாற்பாலைகள் உற்பத்தியை குறைத்து வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பருத்தியாண்டில் (2021 அக்., - 2022 செப்.,), செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வரலாறு காணாத அளவுக்கு பஞ்சு விலை உயர்த்தப்பட்டது. அதாவது, ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, 1.05 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டது.

பருத்தி சீசன் துவங்கியதும், பஞ்சு விலை, 70 ஆயிரம் ரூபாயாக குறைந்தது; கடந்த, ஏழு மாதங்களாக, 62 ஆயிரம் முதல், 70 ஆயிரம் ரூபாய் வரை விலை நீடித்தது. நாளுக்கு நாள், ஜவுளி உற்பத்தி குறைவதால், நுாலுக்கான தேவையும் குறைந்தது. பஞ்சுக்கு கிராக்கி இல்லாததால், நேற்றைய நிலவரப்படி, ஒரு கேண்டி பஞ்சு 58 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.

பஞ்சு விலை சரிந்து கொண்டே இருப்பதால், காத்திருந்த விவசாயிகள், ஜன., மாதத்துக்கு பின் மார்க்கெட்டுக்கு வர துவங்கி விட்டனர். சீசன் நிறைவடைய உள்ள நிலையில், தினமும், 1.05 லட்சம் பேல் வரை, விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி குறைந்ததால், நுாற்பாலைகள் நுால் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வரத்து அதிகமாக இருப்பதால், பஞ்சு விலை மேலும் சரிய துவங்கியுள்ளது. இருப்பினும், நுால் ஆர்டர் இல்லாத நேரத்தில் பஞ்சு விலை குறைந்தும் பயனில்லையென, நுாற்பாலைகள் கவலை அடைந்துள்ளன.

கடந்தாண்டு, வரலாறு காணாத அளவுக்கு பஞ்சு விலை உச்சமடைந்து, ஜவுளித்தொழிலை கதிகலங்க செய்தது. மாறுபட்ட சர்வதேச சூழல்காரணமாக, இந்தாண்டு பஞ்சு விலை சரிவை சந்தித்துள்ளது. அதாவது, கடந்தாண்டு விலையில் இருந்து, 50 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர்கள் (டாஸ்மா) சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''பருத்தி சீசன் முடியும் நிலையில், வரத்து அதிகமாக இருக்கிறது; ஒரு கேண்டி 58 ஆயிரம் ரூபாயாக விலை குறைந்துள்ளது. மேலும், 55 ஆயிரமாக குறைய வாய்ப்புள்ளது.

ஆர்டர் இல்லாததால், நுாற்பாலைகள், 50 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்துள்ளதால், பஞ்சு விலை குறைந்தும் பிரயோஜனம் இல்லை. பஞ்சு வாங்கி இருப்பு வைக்கவோ, நுால் உற்பத்தி செய்து இருப்பு வைக்கவோ, பொருளாதார ரீதியாக நாங்கள் தயாரில்லை,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement