லாரி டிரைவர் அடித்துக்கொலை மனைவி, மகன், மகள் கைது
மானாமதுரை: கள்ளத்தொடர்பு வைத்ததோடு, வீட்டுக்கு பணம் தராமல் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்த தந்தை உதயகண்ணனை 45 உருட்டு கம்பியால் தாக்கி கொலை செய்த 17 வயது மகன், திட்டம் தீட்டிக்கொடுத்த மனைவி புஷ்பலதா, மகள் தாரணி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கொம்புகாரனேந்தல் சுப்பிரமணியன் மகன் லாரி டிரைவர் உதயகண்ணன். வெளிநாட்டில் வேலை செய்தார். 6 மாதத்திற்கு முன் இங்கு வந்து வெளி மாநிலத்திற்கு சிமென்ட் லாரி ஓட்டி வந்தார்.
இரும்பு கம்பியால் அடித்து கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சிவகங்கையில் இருந்து டூவீலரில் இடைக்காட்டூருக்கு வந்த உதயகண்ணன் 'மைல்கல்லில்' மோதி தலையில் காயமடைந்து உயிரிழந்தார். ஆனால் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க சிவகங்கை எஸ்.பி., செல்வராஜ் உத்தரவிட்டார்.
மகன் உட்பட 3 பேர் கைது
போலீசார் விசாரணையில் உதய கண்ணனின் மகன் 17 வயதான சிறுவன், அவரது நண்பர்கள் லாடனேந்தல் மணிகண்டன் மகன் சூர்யபிரகாஷ் 19, பழனி மகன்வீரமணிகண்டன் 19 ஆகியோர் உதயகண்ணனை இரும்பு கம்பிகளால் அடித்து கொலை செய்தது தெரிந்தது. கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக, உதயகண்ணன் மனைவி புஷ்பலதா 44, மகள் தாரணி 24, என 5 பேரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
எஸ்.பி., கூறியது: உதயகண்ணனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. வீட்டிற்கு பணம் தராதது மட்டுமின்றி பல இடத்தில் கடனும் வாங்கியுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் அவரது மகன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த குழுவினரை பாராட்டுகிறேன், என்றார்.
காரில் கடத்தப்பட்ட 175 கிலோ குட்கா: 3 பேர் கைது
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெங்களூரில் இருந்து களிங்கப்பட்டிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 125 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரை கைது செய்தனர்.
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூரில் இருந்து வந்த காரிலிருந்து மற்றொரு காரில் பார்சல்களை சிலர் மாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
பெங்களூரை சேர்ந்த ராமச்சந்திரன் 50, பி.டி.ஆர்., நகர் நவநீதகிருஷ்ணன் 28, கலிங்கப்பட்டி இசக்கிமுத்து 31, ஆகியோரை கைதுசெய்தனர். காரிலிருந்து 175 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர்.
குழந்தையை கொடூரமாக கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம் : பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த பெண்ணுக்கு, விழுப்புரம் மகிளா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம், சித்தேரிக்கரை செல்வா நகரைச் சேர்ந்தவர் ஷமிலுதீன், 30, இவரது மகள் நசிபா, 3. பிரசவத்தின் போது ஷமிலுதீன் மனைவி இறந்து விட்டதால், குழந்தை நசிபாவை, ஷமிலுதீன் தாய் ஷகிலா வளர்ந்து வந்தார்.
ஷமிலுதீன், 2019ல், அப்சானா, 22, என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, குழந்தை நசிபாவை ஷமிலுதீன் அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.
குழந்தை நசிபாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தினமும் இன்சுலின் ஊசி போடும்படி டாக்டர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால், ஊசி போடாமலும், உரிய மாத்திரைகள் கொடுக்காமலும் அப்சானா, குழந்தையை துன்புறுத்தி வந்தார்.
மேலும் நசிபா, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்து தொல்லை கொடுத்து வந்ததால், அப்சானா கடும் ஆத்திரத்தில் இருந்தார்.
இதற்கிடையே ஷமிலுதீன், 2021ல், வெளியூர் சென்றிருந்தார். அதிகாலை 3:50 மணிக்கு, துாங்கிக் கொண்டிருந்த நசிபாவை, சமையலறைக்கு துாக்கிச் சென்ற அப்சானா, தலையை சுவற்றில் இடித்தும், கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்தார்.
பின், சமையலறை சிலாப்பில் இருந்து விழுந்து குழந்தை இறந்து விட்டதாக நாடகம் ஆடினார்.
சந்தேகம் அடைந்த ஷமிலுதீன், விழுப்புரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை அப்சானா கொலை செய்தது தெரிந்தது. அப்சானா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஹெர்மேஸ், குழந்தையை கொலை செய்த அப்சானாவிற்கு ஆயுள் தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
அதிகாலையில் டாஸ்மாக்கில் மது கொள்ளை ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்
பந்தலுார் : நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளையடித்து தப்ப முயன்ற கேரள நபர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைப் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் போலீசார் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு பந்தலுார் குந்தலாடி டாஸ்மாக் மதுக்கடை திறந்திருப்பதை கண்டு, போலீசார் வாகனத்தில் இருந்து இறங்கினர். அப்போது, கடைக்குள் இருந்த மூன்று பேர், அட்டை பெட்டியுடன் தப்பி ஓடினர்.
போலீசார் துரத்தியதில், பணப் பெட்டியை கீழே போட்டுவிட்டு, கற்கள் மற்றும் மது பாட்டில்களால் போலீசாரை தாக்கினர்.
அதில் ஒருவர், கையில் வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றதில், போலீசார் இருவருக்கு காயம் ஏற்பட்டது. கொள்ளையர்கள் மீது எஸ்.ஐ., இப்ராஹிம் துப்பாக்கி சூடு நடத்தினார்.
அதில், பிஜோஸ், 44, என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இவர் மீது ஏற்கனவே, தமிழகம், கேரள மாநிலங்களில் எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொள்ளையில் ஈடுபட்ட ஜிம்மிஜோஸ், குஞ்சுபாவா ஆகியோர் தாங்கள் வந்த காரை விட்டு தப்பினர். ஜிம்மி ஜோஸ், கூடலுாரில் ஏற்கனவே நடந்த டாஸ்மாக் கொள்ளையில் முக்கிய குற்றவாளி.
காயமடைந்த போலீஸ் சிகாபுதீனுக்கு, கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எஸ்.பி., பிரபாகர் கூறுகையில், ''கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில் தனிக்குழு அமைத்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும். தப்பிய குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவர்,'' என்றார்.
கடல் அட்டை கடத்திய சிறுவன் கைது
ராமநாதபுரம் : பணம் கிடைக்கும் என்ற ஆசையில் டூவீலரில் கடல் அட்டை கடத்திய 15 வயது சிறுவனை வனத்துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மண்டபம், ராமேஸ்வரம், தேவிப்பட்டினம், தொண்டி உள்ளிட்ட கடல் பகுதிகளில் அதிகளவில் கடல் அட்டைகள் வாழ்கின்றன. ஏப்., முதல் ஜூன் வரை அதிகளவு கடல் அட்டைகள் கிடைக்கும்.
இதனை பிடிக்க தடை உள்ளது. சட்டவிரோதமாக சிலர் இதை பிடித்து வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர்.இதை தடுக்க உதவி வன பாதுகாவலர், வன ரேஞ்சர்கள் தலைமையில் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் தேவிப்பட்டினம் பகுதியில் சிறுவர்கள் மூலம் கடல் அட்டை கடத்தப்படுவதாக தகவல் கிடைத்து.
உதவி வன அலுவலர் சுரேஷ்குமார் குழுவினர் தேவிப்பட்டினத்தில் டூவீலரில் வந்த 15 வயது சிறுவன் கொண்டு வந்த மூடையை ஆய்வு செய்தனர். அதில் 55 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. சிறுவனை கைது செய்து கடல் அட்டை, டூவீலரை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், மூடையில் கடல் அட்டை இருப்பது கூட தெரியாமல் பணத்தாசையில் சிறுவன் டூவீலரில் கொண்டு சென்ற போது பிடிபட்டுள்ளார். இதற்கு காரணமான தேவிப்பட்டினம் அயூப் 43, என்பவரை தேடி வருகிறோம்.
இளம் சீறார் நீதிகுழுமத்தில் சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்க உள்ளோம்.விபரம் தெரியாத சிறுவர்களை கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். எனவே தெரியாத நபர்களிடம் இதுபோன்ற பொருட்களை வாங்க கூடாது, என பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டும், என்றனர்.
வாசகர் கருத்து (4)
டாஸ்மாக் கொள்ளைகாரர்களை போலீஸ் பிடிக்க வேண்டும். . தண்ணீ தொட்டில் எதையோ கலந்தவனை இன்னும் கண்டு பிடிக்கலயே.
ஒரு கொலைக்கு 5 பேர் என்றால் சோறு போடுவது கஷ்டமாகிவிடும். ஒரு அடி கூட கொடுக்காமல் குற்றவாளியை பாதுகாக்க வேண்டும்.
பதிலாக போலீசுக்கு இவரைப் பத்தி சொல்லியிருந்தா இவரது கடனை போலுசே அடைச்சிருக்கும்.
இந்த கொலையை செய்தது கொலையுண்டவரின் குடும்ப ஆட்கள். அதனால் பாதிக்கப்பட்டதும் அதே குடும்பம்தான். ஆகையால் குறைந்த பட்சம் ஒரு முப்பது லட்சமாவது நஷ்டஈடாக தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.